இருபது
வருடங்களுக்கு முன்பு சோவியத் யூனியன் நாடுகள் பிரிய முடிவெடுத்த போது
ரஷ்யாவால், உக்ரைனுக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்ட கிரிமியா என்ற
பிரதேசம் எந்த உயிர் சேதமும் இன்றி இப்பொழுது தனி நாடாக உதயமாகி உள்ளது. அதற்கு பத்து வருடங்களுக்கு முன்பு இன அடக்குமுறையால் ஆயுத போராட்டம் ஆரம்பித்த தமிழீழம் இன்றும் கனவாகவே உள்ளது.
கிரிமியா, தமிழீழம் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டுமே இனம் மற்றும் மொழியால் சிறுபான்மையினராக நாட்டின் மற்ற பிரதேசங்களுடன் பிரிந்திருந்தனர். தமிழீழத்தின் மொத்த நிலப்பரப்பு 20,500 சதுர கிலோமீட்டர்கள். கிரிமியாவை விட 6000 சதுர கிலோமீட்டர்கள் குறைவே. மக்கள் தொகையில் தமிழீழம் 36 லட்சம், கிரிமியா 21 லட்சம். உக்ரைனில் அதிகம் பேசப்படுவது உக்ரைன் மொழி ஆனால் கிரிமியாவில் ரஷ்ய மொழியைத்தான் 82% மக்கள் பேசுகின்றனர். அதே சமயம் ரஷ்ய இனத்தவர்களே 59% உள்ளனர். இதனை தமிழீழத்துடன் ஒப்பிடும்போது அங்கே 90% மேலான மக்கள் தமிழ் இனத்தை சேர்ந்தவர்கள். அதே போல 99% மக்கள் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள். இதற்கும் கிரிமியா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் உள்ளது. இரண்டு உலகப்போர்களிலும் இங்கே போர் நடைபெற்றுள்ளது. மேலும் மத்திய தரைகடலுக்கு அடுத்து ராணுவ முக்கியத்துவம் கொண்ட பகுதியாகும். இங்கே ரஷ்ய கப்பல் படை தளம் உள்ளது. இது போல எந்த முக்கியத்துவமும் இல்லாத பகுதி தமிழீழம்.
ரஷ்யா தன்னுடைய மக்கள் அங்கே ஒடுக்கப்படுகிறார்கள் என்று வலிந்து சென்று அப்பகுதியில் வாக்கெடுப்பு நடத்தி தன்னுடன் இணைத்துக்கொண்டுள்ளது. இது வரை உக்ரைன் நாட்டுடன் இருந்த போதும் தன்னாட்சி பகுதியாகத்தான் இருந்துள்ளது. ஆனால் மேற்கத்திய நாடுகள் ஏதோ ரஷ்யா போர் தொடுத்து கைப்பற்றியதை போல அதன் மீது பொருளாதார தடைகளை எல்லாம் விதித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் அமெரிக்கா படைகள் ஈராக்கில் எப்படி புகுந்தன, ஆப்கானிஸ்தானை எப்படி சீரழித்தன என்பது தெரிந்த கதை. அவைகளெல்லாம் சரியாக தெரிந்தது, ரஷ்யாவின் விஷயத்தில் மட்டும் திரித்து கூறப்படுகிறது. இது போல தமிழீழத்தில் எந்த மாயாஜாலமும் நடக்கவில்லை.
தமிழீழத்தை பொறுத்தவரை தமிழ் மக்களின் தாய் நாடான இந்தியா எம்.ஜி.ஆருக்குப்பிறகு எந்த விதத்திலும் உதவியாக நடந்துகொள்ளவில்லை. நாம் ரஷ்யாவை பார்த்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. கிரிமியாவில் உள்ள ரஷ்ய இன மக்கள் வெறும் 58% மட்டுமே. 90% தமிழீழத்தில் வாழும் தமிழினத்தை ஒரு பொருட்டாகக்கூட நாம் கருதவில்லை. எந்த வித துன்புறுத்தலோ உயிர் பலியோ ஏற்படாமல் கிரிமியாவால் சுதந்திரம் அடைய முடிந்தது. ஒரே காரணம் கிரிமிய மக்களுக்கு உக்ரைன் நாட்டுடன் இருக்க பிடிக்கவில்லை. அதையும் ஓட்டெடுப்பு மூலமே நிருபித்துள்ளனர். இந்த மாதிரியான எந்த வாய்ப்புகளும் தமிழர்களுக்கு தரப்படவில்லை. குறைந்த பட்சம் தன்னாட்சி பகுதியாக கூட அறிவிக்கப்படவில்லை. இதற்கும் காவல் துறை, நீதி துறை மற்றும் சுயமாக ராணுவம் வரை கொண்டிருந்த இனத்திற்கு எந்த வகையிலும் தன்னுடைய சுதந்திரத்தை பெற முடியாமல் போனது ஏன்?