Jul 10, 2013

ராணுவ வீரன்


என் பெயர் சந்துரு. எனக்கு வயது 32. நான் இந்திய ராணுவத்தில் பணிபுரியும் நாயக். நான் ராணுவத்தில் சேர்ந்ததே ஏதேனும் போரில் பங்கேற்று ஒரு (பரம்) வீர் சக்ரா விருது பெற்று என்னுடைய நாட்டிற்கும் வீட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என்பதே. ஆனால் இப்பொழுது நான் பணிபுரிந்து கொண்டிருப்பது HAL நிறுவனத்தின் பாதுகாப்பு பணியில், இல்லை உண்மையை ஒத்துக்கொள்கிறேன் HAL ஏர்போர்ட்டின் கேட்டில் செக்யூரிட்டி பணி.

தயவுசெய்து என் பணியை சாதரணமாக எடுதுக்கொள்ளவேண்டாம், இங்கே தற்பொழுது முழு உற்பத்தி நிலையை எட்டியுள்ள TEJAS என்ற நமது சுய தயாரிப்பு போர் விமானங்கள் உற்பத்திக்கு பிந்தைய பரிசோதனைக்கு இங்குதான் ஈடுபடுத்தப்படுகின்றன. தீவிரவாதிகளின் இலக்கில் இருப்பதால் இவைகளை பாதுகாக்கும் பணியில் எங்கள் பட்டாலியன் ஈடுபட்டு வருகின்றது. இந்த அளவிற்கான சுய விவரம் போதுமே.

ஒரு சாதாரண நாளின் போக்குவரத்து இல்லாத மாலை வேலையில் நானும் என்னுடன் மற்ற நாயக்-களான ரன்பீர், அகுஜா மற்றும் ஜாபரும் பணியிலிருந்தோம். சூரியன் தொலைதூரத்தில் இருந்த கட்டிடங்களுக்கு பின்னணியில் மறைந்து கொண்டிருந்தது. சுவராஸ்யமான பேச்சுக்கிடையில் ஒரு வேன் மெதுவாக சாலையில் சென்றதை பார்த்தோம். இனி காலை வரை அரை மணி நேர இடைவெளியில் நங்கள் இருவர் இருவராக இன்னொரு முனை வரை சென்று சோதனையில் ஈடுபடவேண்டும். முதல் முறை சோதனைக்கு அகுஜாவும் ஜாபரும் சென்றனர். அடுத்த  முறை நானும் ரன்பீரும் சென்றோம். அப்பொழுது சுற்று சுவருக்கு வெளியே ஆட்கள் பேசிக்கொள்வது மெதுவாக கேட்டது. ஏர்போர்ட்-ஐ ஒட்டியுள்ள பகுதி வனாந்தரம், எனவே யாரும் வர வாய்ப்பில்லை, இருந்தும் ரண்பீர் கட்டிடத்தின் மறு முனையின் ஓரத்தில் உள்ள வாட்ச் டவர்க்கு சென்று கண்காணிப்பதாக கூறி சென்றார். நான் வெறுமனே அவரை வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றேன்.  அவர் சென்ற ஐந்தாவது நிமிடம் அங்கிருந்து சைகை செய்தார் மூன்று பேர் வெளிப்பக்கமாக இருப்பதாக. நான் இதை கேட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்து விசாரிக்க சொல்வதாக கூறி சென்றேன். 

நான் அகுஜாவிடம் இதை சொல்ல அவர் உடனே உட்பக்கத்தில் இருந்த எங்கள் ஹவில்தாரிடம் இத்தகவலை சொல்லி வெளியில் சென்று விசாரிக்க உத்தரவு கேட்க. அவரோ வெளியில் பொதுமக்களாக இருக்கும் எனவே என்னை போக சொல்லியிருக்கிறார். இப்படி அவமானப்படுவது இது ஒன்றும் முதல் முறை அல்ல, எனவே என்னையே நொந்துகொண்டு நடந்தேன்.  என்னை வீரன் என நீருபிக்கும் சந்தர்ப்பமாக இது அமைய வேண்டும் எனவே  அவர்கள் தீவிரவாதிகளாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொண்டேன். வேண்டுதல் முடியும்போது அவர்களை நெருங்கிவிட்டேன். அவர்கள் பார்க்க சாதாரணமானவர்களாக தெரிந்தனர். விசாரித்ததில் எலி, முயல் பிடிப்பவர்கள் என்று சொல்ல என்னை எவ்வளவு சரியாக என் மேலதிகாரி கணித்துள்ளார் என தெரிந்தது. அவர்களை போக சொல்லிவிட்டு இதை ரன்பீரிடம் உரக்கச்சொல்லிவிட்டு திரும்பி நடந்தேன். 

வெறுப்பில் திரும்பி நடக்கும்போது கேட்டின் அருகில் ஒரு வேன்  நின்றிருந்தது. அதன் இடது பக்கமாக ஒரு ஆள் நின்று அகுஜாவுடன் பேசிக்கொண்டிருந்தான். வேனின் வலது பக்க கதவு திறந்ததில் ஒருவன் கையில் ரைபிள் தெரிந்தது. உடனே சுதாரித்து சுற்று சுவற்றின் ஓரமாக பதுங்கினேன். அதற்குள் வெளியில் இருந்தவன் தன் பிஸ்டலை எடுக்க அகுஜா சரியாக அவன் நெற்றியில் சுட்டுவிட்டு உள்புறமாக ஓடினார். கண்டிப்பாக அவர்கள் பாதுகாப்பு தடுப்பினுள் இருந்து தாக்குவார்கள். வேனின் உள்ளே இருந்தவர்களும் சுதாரித்து உட்புறமாக சுட்டுக்கொண்டே இறங்கினர். அவர்கள் மொத்தம் ஐவர். நானும் என் ரைபிளை பின்புறமாக போட்டுக்கொண்டு பிஸ்டலை எடுத்தேன், ஏனெனில் அருகில் இருந்து சுட இதுதான் சரி. இதற்குள் அவர்கள் சுட்டுக்கொண்டே உள்பக்கமாக சென்றனர். இவர்களை உயிருடனோ அல்லது சுட்டோ பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சுவரோரமாக முன்னேறினேன். உள்புற சுவற்றின் ஓராமாக ரன்பீர் சுடப்பட்டு கதறும் சத்தம் என்னை உசுப்பியது, வேகமாக முன்னேறினேன். கேட்டின் அருகில் நான்கு தீவிரவாதிகளின் உடல் கிடந்தது, அதில் ஒருவன் மட்டும் உயிருடன் முனகிக்கொண்டு இருந்தான். பாதுகாப்பு வளையத்தினை அணுகி பார்த்தேன் சிறிது நேரம் முன்பு சிரித்து பேசிய நண்பர்கள் இருவரும் உயிருடன் இல்லை, நான்கு பேரை சுட்டுக்கொன்று அவர்களும் உயிரை விட்டிருந்தனர். ரன்பீரை இங்கிருந்தே தேடினேன் அவர் காயம் பட்டு நடக்க முடியாமல் சுவரோரம் சாய்ந்து இருந்தார். ஒருவன் மட்டும் உட்பக்கமாக சென்றுள்ளான், ஆனால் அவன் இன்னும் இரண்டடுக்கு பாதுகாப்பை தாண்டித்தான் செல்லவேண்டும். எனவே என்னுடைய தலைமை அதிகாரியை தொடர்பு கொண்டேன், அவர் நாங்கள் அவனை தேடுகின்றோம் நீ கேட்டை மூடிவிட்டு அங்கேயே காவலிருக்க சொன்னார்.

நான் துரிதமாக வெளியில் காயம்பட்டு கிடந்த ஒருவனை உள்ளே இழுத்துக்கொண்டு வந்தேன், ஏனெனில் இவனிடம் இருந்து எல்லா தகவலும் கிடைக்கக்கூடும். கேபினின் உள்புறமாக படுக்கவைத்து முதலுதவி செய்தேன். பின்னர் அவன் கை மற்றும் கால்களை கட்டிப்போட்டு விட்டு, ரன்பீரை கவனிக்க சென்றேன். அதற்குள்ளாக விமான நிலையத்தின் உள் பக்கமாக துப்பாக்கி சத்தங்கள் கேட்டன.  ரன்பீர் அதிக ரத்தம் சென்றதால் மயக்கத்தில் இருந்தார். அவரை தோளில் தூக்கிக்கொண்டு ஓட்டமும் நடையுமாக  கேபினிற்க்கு கொண்டு சென்று முதலுதவி செய்தேன். உள்பக்கம் இன்னமும்துப்பாக்கி சத்தம் கேட்டது. ஒரு வேலை இன்னும் அதிகம் பேர் ஊடுருவி உள்ளனரோ. நான் பதுங்கி பதுங்கி விமான ஹேங்கர்கள் பக்கம் செல்லலாமென நினைத்தபோது, ஒருவன் வாட்ச் டவர் பக்கம் நொண்டிக்கொண்டு ஓடுவது தெரிந்தது. அவன் கண்டிப்பாக கேட் பக்கமாக ஓடுவான் என உணர்ந்து, நானும் அந்தப்பக்கமாக பதுங்கியபடி சென்றேன்.  அருகே நெருங்க நெருங்க அவன் ஆயுதம் இல்லாமல் இடது கையில் மற்றும் இடது காலில் தோட்டா வாங்கியிருந்ததை தூரத்தில் இருந்தே உணர முடிந்தது. கண்டிப்பாக அவனின் காயங்களுக்கு இன்னும் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்து விடுவான், ஏனெனில் நிறைய ரத்தம் இழந்திருப்பான். என்னுடைய எண்ணப்படி உள்ளே இன்னமும் இவனை தேடிக்கொண்டிருப்பார்கள், இவன் காயம் பட்டதால் தப்பித்து வந்துள்ளான். வேனை குறி வைத்து அவன் ஆயுதமின்றி ஓடுவதால், நான் தைரியமாக அவனை நோக்கி கேட் பக்கமாக சென்றேன்.

அதற்குள்ளாக அவன் வேனில் ஏறி விட்டான், அதை ஸ்டார்ட் செய்யும் முன்பாக அவனருகில் சென்று துப்பாக்கியை அவன் தலைக்கு குறி பார்த்தேன்.
என்னை கண்டதும் திடுக்கிட்டவன், முயற்சி தோல்வி அடைந்ததால் அப்படியே ஸ்டியரிங்கில் சாய்ந்தான். நான் அவனை துப்பாகி முனையால் தள்ள எத்தனிக்கையில், என்னுடைய தோலை யாரோ பின்பக்கமாக பற்றி உலுக்கினர். நானும் உள் பகுதியின் பாதுகாப்பில் இருந்த யாரோதான் என எண்ணியபடி, அவனை உயிருடன் பிடித்த பெருமையை `பெரும் முனைப்பில் அவனை பிடித்து வெளியில் இழுக்க வேனின் கதவை திறக்கப்போக, திரும்பவும் என் முதுகு உலுக்கப்பட்டது.  நான் மறுபடியும் என்னடைய காரியத்தில் கண்ணாக இருக்க, இப்பொழுது என்னுடைய சட்டையை பிடித்து உலுக்கினர். நான் கோபத்தில் திரும்பி பார்த்தால் இது என்னுடைய ஹவில்தார் இல்லை. இது வேறு முகம் எங்கேயோ அடிக்கடி பார்த்த முகம், சட்டென நினைவு வராமல் விழிக்க. என் முகத்தில் தண்ணீர் தெளிக்க சொன்னார் என்னை பிடித்து உலுக்கியவர். என்னடா இது தீவிரவாதியை பிடிக்கும் நேரத்தில் வந்த சோதனை என்று, மறுபடியும் அவரை நினைவுபடுத்தி பார்த்தேன், அட நம்ம கோவிந்தண்ணன் கூட இது யாரு நம்ம சுந்தர் சார். இவங்க எப்ப ஆர்மில சேர்ந்தாங்க என யோசிக்கும்போது, முகத்தில் தண்ணீர் கொட்டப்பட்டது. 

நான் முகத்தை துடைதுக்கொன்டே, அவரை பார்த்து கத்தினேன். "என்ன சார் இது, நான் கஷ்டப்பட்டு இவனை பிடிச்ச்சா நீங்க என்னமோ என் மேல தண்ணிய ஊத்தறீங்க". இப்பொழுது சுந்தர் சார் என்னிடம் கத்தினார். "யோவ் இன் டைம் போட சொன்னா, நீ இங்க படுத்துக்கிட்டு யார புடுச்சு வெச்சுருக்க. அத நான் வந்து கெடுக்க. இன்னும் எத்தனை மணி நேரம் தூங்குவ, உன்ன எழுப்பி விட இத்தனை பேர் வரணுமா, இங்க பாரு இன் டைம் போட எவ்ளோ பேரு நிக்கறாங்கன்னு. உனக்கு கொஞ்சமாவது அறிவிருக்கா. இதே பொலப்பா போச்சு உனக்கு, இது தான் கடைசி தடவை. இனி இப்படி ஒரு வாட்டி பண்ணின வீட்ல போயி நல்லா தூங்கிக்க. யாரும் எழுப்ப மாட்டாங்க. என்ன காதுல விழுந்துச்சா" என வரிசையாக வசவுகள் வந்து விழுந்தன. 

மில்லின் கேட்டில் இருப்பது சுரீர் என மண்டைக்கு உரைத்தது. அப்போ இவ்ளோ நேரம் கண்டது கனவா. இப்பொழுது இன் டைம் போட ஒவ்வொருவராக முன்னே வர ஆரம்பித்தனர். இனி தாமதித்தால் அடி விழும் என்று, அடிக்கடி வரும் இந்த கனவை எண்ணிக்கொண்டு வாட்ச்மேன் வேலையை பார்க்க ஆரம்பித்தேன்.

0 comments :

Post a Comment