Apr 23, 2014

யாருக்கு ஓட்டு போடுவது?


யாருக்கு ஓட்டு போடுவது, இதை பற்றி எவ்வளவுதான் அலசி ஆராய்ந்தாலும் NOTA மட்டுமே எனக்கானது என்று தோன்றுகிறது. முதல் ஓட்டு போட்டு 13 வருடங்களாக அதிகம் யோசிக்காமல் பல சமயம் கட்சி சார்ந்தும் சில சமயம் வேட்பாளரை சார்ந்தும் ஓட்டு போட்டுள்ளேன். கடைசி இரண்டு முறை மட்டும் 49 O  க்கு தாவினேன். ஆனால் அதையும் ஓட்டு சாவடியில் இருந்த எல்லோருக்கும் தெரியும்படி மை வைக்கும் முன் ஒரு அதிகாரி அறிவித்து விட்டு என்னிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டார்.  இந்த செயல் என்னை மிகவும் எரிச்சலடைய வைத்தது. என்னுடைய ஓட்டு என்பது எனக்கு மட்டுமே தெரியவேண்டிய ஒன்றை எல்லோர் முன்னாலும் வெளிப்படுதப்பட்டதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சாவடியில் கட்சி சார்பாக இருந்த சொந்தக்காரர் ஒருவர் என்னிடம் 49 O  போட்டால் வீட்டுக்கு தண்ணீர் முதல் சலுகைகளை எல்லாம் கொடுக்காமல் தடுப்பார்களே என்று அதிகாரியை விட பேசி எரிச்சல் ஏற்படுத்தினார். 

முதல் முறை ஓட்டு போடும்போது எதையும் அலசி ஆராயும் அறிவில்லை, எனவே கண்ணை மூடிக்கொண்டு தேசிய கட்சி ஒன்றுக்கு போட்டேன். அதிக பட்சமாக அவர்களுக்காக வாக்கு கேட்க ஊட்டி வரை உல்லாச பயணம் கூட சென்றேன். இன்றைக்கு அதற்காக வெட்கப்படுகிறேன்.  அதன் பிறகு மாநில கட்சி ஒன்றுக்கு மாற்றம் வேண்டி என நானே நினைத்துக்கொண்டு ஓட்டை குத்தினேன். அதற்கு அடுத்த தடவை மாநில கட்சியின்  ஒரு வித்தியாசமான தலைவர் என்று அவர் சார்பான வேட்பாளருக்கு  என் ஓட்டை  வீணாக்கினேன். ஏனென்றால் மனிதர் வெற்றிபெற்று அமைச்சர் ஆனபிறகு எங்கள் தொகுதி பக்கமே எட்டி பார்கவில்லை. ஓட்டு கேட்டு ஐந்து வருடங்களுக்கு முன்பு வந்தவர் அடுத்த தேர்தலில் தான் தொகுதியை எட்டிப்பார்த்தார். இவர்கள் எந்த தைரியத்தில் மறுபடி நிற்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஆனால் அந்த கட்சியின் தலைவர் இன்று கண்ணியாமானவராகவே எனக்கு தெரிகிறார்.

இதற்கு அடுத்து தொகுதி பிரிப்பு என்று ஒரு வைபவம் நடந்தது. முன்பு எங்கள் ஊர் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்தது. பாராளுமன்ற தொகுதியாக நீலகிரியில் இருந்தது. இந்த தொகுதியை பிரிக்கும் பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை எந்த கிணற்றில் கட்டி தொங்க விடுவது என்று தெரியவில்லை. ஏனென்றால் எங்கள் ஊர் நீலகிரியில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ளது. ஊரில் வருடத்திற்கு ஒரு முறை ஊட்டிக்கு உல்லாச பயணம் செய்யக்கூட முடியாதவர் பலர் உள்ளனர். இதில் அமைச்சரை சந்திக்க அவ்வளவு தூரம் பயணிப்பது எங்கே?. அல்லது அமைச்சர்களாவது குறை கேட்கவாவது தொகுதி பக்கம் வருவார்களா என்று எதிர்பார்த்தால் என்னை முட்டாள் என்று முதல் ஆளாக சொல்வீர்கள். சில வருடங்களுக்கு முன்பு தொகுதி மறு சீரமைப்பு என்று எல்லோரிடமும் கருத்து கேட்டு பிரித்ததாக எங்கள் ஊரை சட்டமன்றத்திற்கு கிணத்துக்கடவு தொகுதியிலும், பாராளுமன்றத்திற்கு பொள்ளாச்சி தொகுதியிலும் இணைத்து விட்டனர். இப்பொழுது அமைச்சரை பார்க்க வேண்டுமென்றால் குறைந்த பட்சம் 40 கி.மீ செல்ல வேண்டும். இது எந்த வகை நியாயம் என்று தெரியவில்லை.

இப்படி எனக்கு அரசியல் அறிவை ஊட்டிய அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கடந்த முறை வாக்களிக்கும் முன்பு யோசிக்க வைத்து விட்டனர். எனவே 49 O  க்கு தாவினேன். இம்முறையும் தேசிய கட்சி ஒன்றின் பிரச்சாரம் மிக அதிக அளவில் இளைங்கர்களை கவர்ந்துள்ளது.  அவர்கள் நிலையான ஆட்சி தரும் போது சிறிது தேற நமது நாட்டுக்கு வழியுள்ளது போல் தெரிகிறது.  நிலையான ஆட்சி என்பது தனிப்பெரும்பான்மை. ஏனெனில் 5 அல்லது 10 இடங்களை வைத்துக்கொண்டு குப்பன் சுப்பன் எல்லாம் மத்தியில் உள்ள தேசிய கட்சிகளின் கண்களில் விரலை விடுகின்றார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு ஏதேனும் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை பெரும் கட்சிக்கு வாக்களிப்பது நாட்டுக்கு நல்லது. ஆனால் கொஞ்சம் சுய நலமாக யோசித்தால், அதாவது என் தொகுதி மற்றும் அதன் வெற்றி வேட்பாளர் என்று கணித்து ஓட்டு போட வேண்டும் என யோசித்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. முடிவாக NOTA வுக்கே செலுத்தி விடலாம் என்று தோன்றுகிறது. பார்க்கலாம் நாளை காலை வரை நேரம் உள்ளது.?