Jul 1, 2013

விபத்து அனுபவம் - III

வீட்டுக்கு வந்ததும் ஏதோ சொர்க்கம் சென்றது போன்ற அனுபவம் இருந்தது. ஆனால் அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை, அவ்வளவு பிரச்சனைகள் இருந்தன அங்கே. வீட்டுக்கு வந்த நான்கு நாட்களில் என் மனைவிக்கு பிரசவ வலி வந்தது, என் மகளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே உலகை பார்க்கும் ஆசை போல. மருத்துவமனை சென்ற அடுத்த நாள் என் மகள் பிறந்தாள், இவ்வளவு சோதனைகளுக்கு இடையில் அது மட்டும் மிக சந்தோசமான நாள்.
ஏனென்றால் அவளை நான் பார்க்க சென்றது ஆம்புலன்சில் பின்னர் stretcher-ல் படுத்துக்கொண்டு சென்று பார்த்தேன். இந்த வாய்ப்பு எத்தனை பேருக்கு அமையும்?

அதற்கு பிறகு வந்த நாட்கள் மிக கொடுமையானவை, அது நானே தேடிக்கொண்டது. அதாவது வீட்டில் நான் மட்டும் இருந்தேன் (அத்தகைய சூழ்நிலை). காலையில் மட்டும் நண்பர்கள் இருவர் வந்து காலை கடன் கழிக்கவும் உணவு கொடுக்கவும் வருவார்கள் பின்னர் மதிய உணவின் போது ஒருவர் மட்டும் வருவார் நடுவில் நான் எதற்கும் ஆசைபடாமல் படுத்திருக்க வேண்டும். அதுவும் விட்டத்தை பார்த்தபடி, ஏனென்றால் எந்த பக்கமும் திரும்பி படுக்க முடியாது. இரவில் மட்டும் நான்கு அல்லது ஐந்து நண்பர்கள் வருவார்கள், அதில் இருவர் மட்டும் என்னுடன் உறங்குவார்கள். இப்படி கழிந்த ஒரு வாரத்தில், என் மனைவி மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு சென்றார். அப்பொழுது என்னையும் கண்டிப்பாக அங்கே வரச்சொன்னார். நான் அங்கு சென்றால் அவர்களுக்குத்தான் கஷ்டம் ஏனென்றால் குழந்தையையும் என்னையும் கவனிப்பது இயலாத காரியம் என்று நினைத்தேன். ஆனால் அவரின் அன்பு கட்டளைக்கு முன்பாக என் யோசிப்பு தவறானது.

மனைவியின் வீட்டில் இரு மாதம் குழந்தையுடன் நேரம் போனது. அதற்கு நடுவில் மருத்துவமனை சென்று வந்ததில் இரு மாதத்தில் என் கால் உடைந்த எலும்புகள் அதுவே சேர வாய்ப்புண்டு அதுவரை ஓய்வு எடுக்க சொன்னார்கள். இரு மாதம் கழித்து சென்றால் எலும்புகள் சேரவில்லை எனவே காலில் plate வைக்க வேண்டும் உடனே admit ஆக  சொன்னார்கள். சரி கொடுமையே என்று அதற்கான வேலைகளை என் நண்பனை செய்ய சொன்னேன். என்னை என் காலில் உள்ள steel & screw க்களை எடுக்க வேண்டும் என்று சொன்னார் என்னை சோதித்த மருத்துவர். அவர் சொன்னார் இவைகளை எடுக்கும் பொழுது கொஞ்சம் வலிக்கும் பொறுத்துக்கொள்ளுங்கள் என்றார். நான் வலி தாங்குவது கஷ்டம் மயக்க ஊசி போட்டு எடுத்து விடுங்கள் என்றேன். அவர் சொன்னார் அதற்கு ரூபாய் 8000 ஆகும், இரண்டு நிமிடம் பொருத்து கொண்டால் கழட்டி விடுவோம் அதற்கு ருபாய் 500 தான் ஆகும் என்றார். அதுவும் சரி 2 நிமிடத்திற்கு 8000 அதிகம் என்று ஒப்புக்கொண்டேன்.

மருத்துவர் அவருடைய உதவியிடம் Casualty ward ல் வைத்து பாருங்கள் என்றார். அதனால் அங்கு கொண்டு சென்றனர். நானும் அவசர பிரிவாயிற்றே சீக்கிரம் அனுப்பிவிடுவார்கள் என்று நினைத்தால், அங்கு என்னைத்தவிர யாரும் இல்லை. இருந்த nurse & doctor கள் நான் இருப்பதை பற்றி கவலைபடாமல் உரசி விளையாடி கொண்டிருந்தனர். எரிச்சலில் கண்ணை மூடி படுத்துக்கொண்டேன். பின்னர் அங்கு இல்லை வேறு ஒரு வார்டு என்று அழைத்து சென்றனர். அங்கும் சுமார் இரண்டு மணி நேர காத்திருப்புக்கு பிறகு ஒரு மருத்துவர் வந்து அவற்றை வலிகளுக்கிடையில் கழற்றினார். பின்னர் இன்னொரு மருத்துவரிடம் காண்பிக்க வேண்டும் என்று 5வது மாடிக்கு அழைத்து சென்றனர். அப்பொழுது என்னை அழைத்து சென்ற ஒரு வயதான பெண்மணி என்னை lift-ன் முன்பு விட்டுவிட்டு சென்றுவிட்டார். நான் வரியவரிடத்தில் அவ்வளவாக கோபம் கொள்ளாதவன். ஆனால் அன்று வலியில் அவரிடம் ஏன் இங்கே படுக்க வைத்து விட்டு சென்றீர்கள் என்று கேட்க அவரோ ரொம்ப அவசரம்னா மாடி படி இருக்கு நடந்து போங்க என்று சொல்ல கோபம் தலைக்கேறி திட்டிவிட்டேன், இருந்தும் அவரிடம் மன்னிப்பு கேட்டேன் கோபப்படதட்கு.

இவையெல்லாம் முடித்தபின்னர் என் நண்பன் என்னிடம் இங்கு அறை ஏதும் கிடையாது என்று சொல்கின்றனர் என்றார். என்னடா இது பிரச்சனை என்பது என் தலை முடிபோல என்னை விட்டு போகாது என்று நினைத்துக்கொண்டு வரவேற்பாளரிடம் கேட்டால் எதோ மாநாடு நடப்பதால் எல்லா அறைகளும் முன் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார். என்ன இது ஹோட்டல் போல சொல்கிறார்களே  என்று நானும் மருத்துவர் தான் சொன்னார் அவரிடம் நீங்கள் சென்று இதை சொல்லுங்கள் என்றேன். அவரும் சளைக்காமல் யாரிடம் வேண்டுமானால் சொல்லுங்கள் இதுதான் பதில் என்றார்.

  ஒரு வழியாக அறை கிடைக்கும் என்ற உறுதி மொழி தரப்பட்டதால் அரை மணி நேரம் காத்திருத்தலில் முடிந்தது. பின்னர் அவர்கள் முன் பணம் செலுத்த அழைத்தனர். என் நண்பன் சென்ற வேகத்தில் திரும்பி வந்து வாடகை 2100 சொல்கிறார்கள் என்றான். ஒரு மாதத்திற்கு முன்பு 1700 தானே இருந்தது என்றால், மே மாதத்தில் இப்படித்தான் இருக்குமாம். சரி இதுவும் ஊட்டி ஹோட்டல் தொழில் போல என்று எண்ணிக்கொண்டு சரி என்றேன். ஒரு வழியாக மாலையில் அறைக்குள் சென்று படுத்தேன், நாளைய நாட்கள் மோசமாக இருக்கப்போவது தெரியாமல்.

மறு நாள் மட்டும் என் நண்பன் இருந்தான், அதற்கு பின்னர் தனிமை தான். அதிக பொழுதை எடுத்துக்கொண்டது தொலைக்காட்சி பெட்டிதான். தனிமை மிக கொடுமை அதிலும் இயலாமையில் இருக்கும்பொழுது இன்னும் கொடுமை. மதிய உணவு தட்டை சிறிது தள்ளி வைத்து விடுவார்கள். அதை எடுத்து உண்ண மிகவும் சிரமப்பட்டு சாப்பிடாமலே படுத்ததுண்டு.   அறுவை சிகிச்சை 4 நாள் கழித்து என்பதால் பொழுது மிக சிரமத்துடனே கழிந்தது.

அறுவை சிகிச்சைக்கு முந்தைய இரவு தான் சொன்னார்கள் இடுப்பு எலும்பில் இருந்து சிறிது எடுத்து உடைந்த கால் பகுதியில் வைக்கபோவதாக. எனக்கு அழுகையே வந்து விட்டது. அட ஒரு நொடி தவறியதற்கு இத்தனை காயங்களா என்று. காலை 6 மணிக்கே அறுவை சிகிச்சை அறைக்கு அழைத்து சென்று அடுத்த 6 மணி நேரத்தில் plate பொருத்தப்பட்டு வெளியில் அனுப்பப்பட்டேன். எனக்கு அறுவை சிகிச்சைக்கு பிந்தைய மயக்க நிலை ( anesthesia) பிடித்துப்போனது. ஆனால் அதற்குப்பிறகு அனுபவிக்கும் வலி தனி. அந்த அரை மயக்க நிலையில் படுத்துக்கொண்டு இனி சீக்கிரம் நடக்கலாம் என்ற கனவில் இருந்தேன் அறையில் காத்திருக்கும் பிரச்சினையை அறியாமல்.

அறைக்கு வந்து (குடும்ப)பிரச்சினைகளை வலியுடன் சந்தித்து விட்டு சிறிது ஓய்வுடன் கண் சாய முடிந்தது. அடுத்த நாளில் இருந்தே நடை பயிற்ச்சி செய்ய சொல்லி Physiotherapist வந்து விட்டார். அவரிடம் போராடி அடுத்த நாள் செய்வதாக சொன்னேன். அதன்படி அடுத்த நாள் வந்து ஒரு காலை மட்டும் ஊன்றி நொண்டி எடுக்க சொன்னார். நான் நினைத்தது என்னவோ இரண்டு காலில் நடப்போம் என்று, ஆனால் நடந்ததோ வேறு. சரி இனிமேல் தான் நடந்து பழக வேண்டும் போல என்று நினைத்துக்கொண்டேன்.

அடுத்த ஐந்து நாட்களும் இது தான் நடந்தது. தொடர்ச்சியான பயிற்ச்சியின் மூலம் காலில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது. ஐந்து நாட்களுக்கு பிறகு கொடுக்கவேண்டிய தண்டத்தை செலுத்தி விட்டு வெளியில் வந்தோம். மறுபடியும் மனைவியின் இல்லத்திற்கு செல்ல வேண்டியிருந்ததால் நான் மட்டும் டாக்ஸி-ல் தனியாக வர வேண்டி இருந்தது. இங்கு வந்த பின்னர் மறுபடியும் குழந்தையுடன் விளையாடிக்கொண்டு பொழுது கழிந்தது. ஒரு பத்து நாட்கள் கழிந்து காலில் உள்ள தையல் பிரிக்க வேண்டி மறுபடியும் மருத்துவ மனை சென்றேன். வலது காலின் இரு பக்கமும் தையல் போடப்படிருந்தது. அதில் வலது பக்கத்தில் மட்டும் சிறிது வலி இருந்தது. அதை மருத்துவரிடம் சொன்னேன், அவரோ அது ஒன்றும் இல்லை பிரித்த பின்னர் சீக்கிரம் சரியாகிவிடும் என்றார். பிறகு காலில் உள்ள வீக்கம் குறைய ஒரு band ம் போட்டு விட்டனர் (சும்மா இல்ல 250 ரூபாய்).

வீட்டுக்கு வந்ததில் இருந்து  அந்த புண்ணில் சிறிது இரத்தம் வந்து கொண்டு இருந்தது. நான்கு நாட்களுக்கு பிறகு கட்டை அவிழ்த்து பார்த்த போது தையல் போட்ட இடம் சரியாக ஒட்டாமல் இருந்தது தெரிந்தது. சரி நாமே வைத்தியம் பார்க்காமல் அங்கேயே சென்று காட்டுவோம் என்று சென்றேன். மருத்துவர் பார்த்துவிட்டு புண் ஆன காரணம் உங்களுக்கு சர்க்கரை இருக்கலாம் என்றார். நான் ஐயா தையல் எடுக்கும்போதே சொன்னேன் அங்கு வலி இருக்கிறதென்று ஆனால் யாரும் அதை கேட்டுக்கொள்ளவில்லை என்று. அவர் சுதாரித்துக்கொண்டு இது சாதரணமாக வருவதுதான் பயப்பட ஒன்றும் இல்லை, மருந்து தருகிறேன் 15 நாட்கள் சாப்பிட்டால் சரியாகிவிடும் என்றார். இன்னும் ஒரு மாதம் கழித்து x-ray எடுத்து பார்த்தால் எலும்பின் வளர்ச்சி தெரியும் அதன்பின் வலது கால் ஊன்றி நடக்கலாம் என்றார். சரி இனி கடைசி கட்டத்தில் எதற்கு வீண் சண்டை என்ற முடிவில் ஒத்துக்கொண்டு கிளம்பும்போது மருந்து வாங்கலாம் என விலை கேட்டால் 20 மருந்து 1000 ரூபாய் என்றார். தலை சுத்தி விட்டு நின்றது, இனி வாங்கித்தான் ஆக வேண்டிய நிலையில் இருப்பதால் இருந்த மொத்த பணத்தையும் கொடுத்து விட்டு வந்தேன் (இருந்த பணமே 1000 தான்).

இப்பொழுது வலிகள் குறைந்து கால் ஒரு விதமான வடிவத்திற்கு வந்து விட்டது. சீக்கிரம் நடப்பேன் என்ற நம்பிக்கையில் இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.

என் நண்பர்கள் வீரா, ஜெய், மோகன், கதிர் மற்றும் வேணு மற்றும் என் மனைவி, என்னுடைய மாமா யுவராஜ் இவர்கள் செய்த உதவிகளுக்கு நான் எப்படி ஈடு செய்ய போகிறேன் என்று தெரியவில்லை.

பி.கு: இன்று தேசிய மருத்துவர்கள் தினம் (01-07-2013). 

0 comments :

Post a Comment