Nov 9, 2013

மழை!


மழையால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அதிக சந்தோசம் அடைந்திருந்தால் நீங்களும் என்னை போன்றவர் தான். உடனே நீங்கள் படத்தில் காட்டுவது போல நனைந்துகொண்டே பாடுவது, நடப்பது என்பதல்ல என் மகிழ்ச்சி. அது ஒரு தனி சுகம். சிறு வயதில் இருந்து மழையில் நனைவது என்பதை விட அதனால் நடக்கும் செயல்களால் சந்தோசம் அடைந்தவன்.

ஐந்தாம் வகுப்பு வரை வீட்டுக்கு அருகில் இருந்த பள்ளியில் தான் படித்தேன். ஆனாலும் வீட்டுக்கு வருவது என்பது மாலையில் மட்டுமே. பள்ளிக்கு வெளியே ஆளுக்கு ஒரு குட்டி முள் செடியை பங்கு பிரித்து வைத்திருப்போம். தினமும் அதற்கு பாத்தி கட்டி சிறுநீர் விட்டு அதை வளர்ப்பது தான் போட்டி. ஒரு நாளைக்கு முடிந்த வரை நீர் ஊற்றி வளர்ப்போம். செடியோ மிக கஷ்டப்பட்டு வளரும், காரணம் சொல்லவே வேண்டாம்.  மழைக்காலத்தில் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கும், ஏனென்றால் நம் நீர் தேவைப்படாது. மேலும் அந்த காலத்தில் மட்டுமே பச்சை பசேலென வளரும்மற்ற நண்பர்களின் செடி கருக நம்முடைய செடி மட்டும் மழையால் வளர்வதில் ஒரு மகிழ்ச்சி. மேலும் ஊரின் தெற்குப்பக்கமாக இருக்கும் தோட்டத்தில் மாமரம் இருக்கும். மாங்காயை சாப்பிட வேண்டுமென்றால் கல்லால் அடிக்க வேண்டும், ஆனால் அது தோட்டாக்காரன் மருதனை எழுப்பி விடும். அவன் துரத்துவான் அல்லது திருப்பி கல்லால் அடிப்பான். சிறிது தைரியமானவர்கள் அல்லது ஓடததெரிரிந்தவர்கள்  மட்டுமே  செய்யும் காரியம் அது. மற்றொரு வகை மழையால் கீழே கிடக்கும் காய்களை பொறுக்குவது. நான் இரண்டாம் வகை. பள்ளி இடைவேளை நேரம் அல்லது மாலையில் வீட்டுக்கு வந்ததும் சட்டையை கழற்றி வைத்து விட்டு வெறும் பனியன் மற்றும் டவுசருடன் சென்று பொறுக்கும் வேலையை செய்ய வேண்டும். இது மழைகாலத்தின் முதல் மகிழ்ச்சி.

ஆறாம் வகுப்புக்கு எனது ஊரில் இருந்து பதினைந்து கீ.மீ தொலைவில் இருக்கும் ஆலாந்துறையில் சேர்ந்தேன். அந்த பகுதியிலேயே மிக பெரிய பள்ளி இது தான். இதை விட்டால் கோவை டவுன் பகுதியில் உள்ள பள்ளிகளில் தான் சேரவேண்டும். அதற்கு வீட்டில் தடா. ஆறாம் வகுப்பில் முதல் வாரத்திலேயே சந்தோஷம் மனதில் குடியேறி விட்டது. காரணம் பள்ளிக்கு அருகிலேயே ஆறு. உடன் தினமும் மதியம் சாப்பிடுவது என்பது அருகில் இருக்கும் கரும்பு / மஞ்சள் தோட்டங்களில் தான். வகுப்பறைகளும் மிக காற்றோட்டமாக இருக்கும். காற்றோட்டம் என்றால் ஜன்னல் கதவு என நினைத்துக்கொள்ள வேண்டாம். ஒரே ஒரு கதவில்லா வாசல் மட்டுமே, கூரைக்கும் சுற்று சுவருக்கும் மத்தியில் நான்கடிக்கு ஒன்றுமே இருக்காது. வெயில் காலத்தில் மட்டும் கொடுமையாக இருக்கும். மழைக்காலத்தில் எப்படி உட்காருவது என்று யோசிக்க வேண்டாம். பள்ளிக்கு விடுமுறை தான். அதுவும் சாதாரண மழைக்கே.  விடுமுறை விட்டால் நேராக ஆற்றுக்கு சென்று விளையாடுவது தான் முதல் வேலை. கன மழை காலங்களில் ஆற்றில் வெள்ளம் செல்வதை பார்ப்பதில் மற்றும் உடனே வீட்டுக்கு செல்வதில் ஒரு மகிழ்ச்சி

பள்ளி படிப்பு முடிந்து கல்லூரிக்கு நகரின் மையப்பகுதியில் இருந்த அரசு கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு இருந்த நேரத்தை விட தியேட்டர்களில் இருந்த நேரம் தான் அதிகம். எனவே அங்கு அதிகம் மழையை அனுபவித்ததில்லை. ஆனால் அங்கு இருந்த விளையாட்டு மைதானத்தில் மழைக்காலங்களில் தனியாக உட்கார்ந்திருப்பதும் ஒரு மகிழ்ச்சியான அனுபவமே.  கல்லூரி காலத்தில் டைப்ரைட்டிங் படிக்க பக்கத்து ஊரில் உள்ள நிறுவனத்தில் நண்பர்களுடன் சேர்ந்தேன். அப்பொழுது மாலை நேர மழைக்காலத்தை அங்கிருந்த கல்லூரி பெண்களை பார்ப்பதில் கழித்து கூட ஒரு வித மகிழ்ச்சியே.

பின்பு முதல் வேலைக்கு சேர்ந்த பின்பு சில வருடங்களை தோழியுடன் மழை  நேரங்களில் ஊரை சுற்றிய நாட்கள் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணங்கள். இன்னமும் என்னுடைய பைக்கில் மழை நேரத்தில் செல்வதை ரசித்து செய்கின்றேன்.  I  am Happy....

Nov 8, 2013

தீபாவளி!


இருபது வருடங்களுக்கு முந்தைய தீபாவளியை இன்றைய நாளுடன் எந்த விதத்திலும் ஒப்பீடு செய்யவே முடியாத அளவுக்கு மலையளவு வளர்ந்துள்ளது.  அன்றைக்கு வெறும் 500 ரூபாயில் முடிந்த நாள் இன்றைக்கு 10,000 க்கு குறைவில்லாமல் தேவைப்படுகிறது.  புது துணியை எதிர்பார்த்து காத்திருப்பது, பட்டாசு வாங்கும் நாளை எதிர்பார்ப்பது என எல்லாமே எதிர்பார்ப்பில் கழிந்த நாட்கள் அவை. இன்றைக்கு தேவையான பணம் இருந்த போதிலும் எதிர்பார்ப்பு சுத்தமாக இல்லை.

முன்பு தீபாவளி என்பது பள்ளியின் விடுமுறை நாளை எதிர்பார்த்து ஆரம்பிக்கும். வீட்டில் புது துணி எப்போது எடுக்கப்போகிறார்கள் என்ற ஏக்கம் தொடங்கும். தீபாவளிக்கு பதினைந்து நாட்களுக்கு முன்புதான் புது துணி கிடைக்கும்.  அதை டெய்லரிடம் கொண்டு சென்றால் தீபாவளி அன்றைக்குத்தான் கிடைக்கும் என்று இடியை இறக்குவார். அம்மாவிடம் சொன்னால் அவரின் திட்டலில்தான் கொஞ்சம் முன்பே தருகிறேன் என்பார். ஆனாலும் அதிக தீபாவளி புது துணிகள் முந்தைய நாள் இரவு வரை கிடைக்குமோ கிடைக்காதோ என்று ஏங்க வைத்தே டெய்லர் தந்துள்ளார்.

அதேபோலத்தான் பட்டாசுகளும். பள்ளியின் அருகில் கிடைக்கும் விலை பட்டியல் மற்றும் ஊரில் கிடைக்கும் பட்டியல்களை கொண்டு பட்டாசுகளை முன்பே மலையளவு குறித்து வைத்தாலும் கடைசியில் கிடைப்பது என்னவோ கடுகளவு தான். அதுவும் அப்பா போனஸ் வந்தால்தான் பட்டாசு என்று சொல்லிவிடுவார். எனவே சில காலம் போனஸ் என்றால் என்னவென்றே தெரியாமலும், தெரிந்த பின்னர் எவ்வளவு என்ற எதிர்பார்ப்பிலும் கழிந்தது. பட்டாசு வாங்க ஊருக்கு அருகிலிருக்கும் FCI கிடங்கிற்கு அப்பா கூடிச்செல்வார். அது அரசாங்க கடை என்பதாலும், அங்கு விற்பனையில் இருப்பவர் அப்பாவிற்கு தெரிந்தவர் என்பதாலும், நினைவு தெரிந்த நாள் முதல் அந்த கடையில் மட்டுமே பட்டாசு வாங்கியுள்ளேன், இன்று வரை.

தீபாவளியின் அதிகாலை என்பது எண்ணை குளியலுடன் ஆரம்பிக்கும், அம்மா தங்கைக்கும் எனக்கும் நல்லெண்ணெய் தேய்த்துவிட அப்பா வைத்த சுடு தண்ணீரில் குளித்து விட்டு புது துணி உடுத்திக்கொண்டு முதல் சரத்தை கொடுத்து வைக்க சொல்வார். அதன் பின்னர் அவரும் குளியலை முடித்துக்கொண்டு சைக்கிளில் குல தெய்வம் கோவில், மாரியம்மன் மற்றும் பிள்ளையார் கோவில் என சென்று அங்கும் ஒவ்வொரு சரத்தை காணிக்கை வைக்க வேண்டும்.  பிறகு தான் மிச்சம் இருக்கும் வெடிகளை தொட வேண்டும் அவற்றை நண்பன் மோகனுடன் போட்டி போட கொஞ்சம் வெடிகள், பாட்டி வீட்டில் கொஞ்சம் வெடிக்க வெடிகள் என கணக்கு நீண்டு கொண்டே போகும்.  அதிலும் இரவில் வெடிக்கும் வெடிகள் தங்கைக்கும் மிச்சம் மீதி கார்த்திகை தீபத்திற்கும் கொடுத்து விட வேண்டும். ஆனாலும் அந்த நாளின் நினைவுகள் இன்றும் நீங்காமல் உள்ளன. 

வளர்ந்த பின்பு நண்பர்குலடன் சேர்ந்து கொண்டு கொண்டாடிய நாட்கள் மறக்க முடியாதவை.  ஊரின் மத்தியில் உள்ள அம்மன் கோவிலில் ஒரு புறம் நாங்களும் மறு புறத்தில் மற்றொரு நண்பர்களும் நின்று கொண்டு பட்டாசுகளை மேலே வீசிக்கொண்டும் ராக்கெட்டுகளை நிலத்தில் படுக்க வைத்தும் விடுவோம். ஆனால் யாருக்கும் எந்த காயமும் ஆனதில்லை, சில வாசல் கூரைகள் தீப்பிடித்ததை தவிர.

இவை மொத்தமும் அன்றைக்கு வெறும் 3000 ரூபாயில் முடிந்துள்ளன. இன்றைக்கு அது பல மடங்கு உயர்ந்திருந்தாலும் அந்த சந்தோசத்தை தருவதில்லை. எதிர்கலாத்தில் என் பெண்ணின் மூலம் அவை திரும்ப கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்/நம்பிக்கையில் நாளைய தீபாவளியை எதிர்நோகியுள்ளேன்.