யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழமொழி. நாளைக்கு எவ்வளவு பொன் கொடுத்தாலும் யானை இருக்காது இது புது மொழி. ஒரு காலத்தில் மாவீரன் அலெக்ஸாண்டரின் படைகளையும், கொடுங்கோலன் தைமூரின் படைகளையும் பயமுறுத்திய இந்திய யானைகள் இன்று ரேசன் அரிசிக்காக ஊருக்குள் வந்து உயிரை விடுகின்றன. மனிதனின் பணத்தாசைக்கும் இடத்தாசைக்கும் இரையாவதில் யானைகளும் ஒன்று.
என்னுடைய கிராமம் கோவையில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. நினைவு தெரிந்த வரையில் நான் எங்கள் ஊரில் யானைகளை பார்த்ததும் இல்லை அவற்றை யாரும் பார்த்ததாக சொல்லி கேட்டதும் இல்லை. அதிக பட்சம் கேள்விப்பட்ட/பார்த்தவர்களால் சொல்லப்பட்ட மிருகங்கள் என்றால் காட்டு நாய், காட்டு பன்றி மற்றும் அரிதாக தென்பட்டதாக சொல்லப்பட்ட மான்கள். இவையெல்லாம் கடந்த பத்து/பதினைந்து ஆண்டுகளுக்கு முந்தையவை. அதற்கு பிறகு யானைகள் அதிகம் ஊருக்குள் தென்பட ஆரம்பித்தன. அதிகம் ரயில்களில் அடிபட்டும் இறக்க ஆரம்பித்தன. இவற்றின் பின்னணி அன்றைக்கு தெரியவில்லை. ஏதோ கேரளாவில் உணவில்லை என்பதால் இங்கு வருவதாகவும், இவை காட்டு யானைகளே அல்ல சர்க்கஸ் யானைகள் அதனால் தான் மனிதர்களை துன்புறுத்துவதில்லை என கதைகள் யானைகள் கூடவே கிளம்பின.
முதன் முதலில் ரியல் எஸ்டேட்காரர்கள் வந்தனர். அவர்களின் ஆசை வார்த்தைக்கு விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை விற்றனர். இதில் பாதிக்கப்பட்டவை முயல்களும் காட்டுப்பன்றிகளும் தான். இன்றைக்கு இந்த மிருகங்கள் இருந்த அடையாளம் துளி கூட கிடையாது. விளை நிலங்கள் வீடுகளாக மாறிய போதுதான் யானைகள் ஊருக்குள் வந்தன. முதலில் ஒன்று இரண்டாக வந்தவை அதிகபட்சம் 20 யானைகள் வரை உணவுக்காக ஊருக்குள் வந்தன. அப்போது வரை எந்த தோட்டங்களுக்கும் மின்சார வேலிகள் கிடையாது. முதன் முறையாக ஒரு தனியார் கல்லூரி ஒன்று 500 ஏக்கருக்கு மேல் ஆரம்பிக்கப்பட்டது. அதுவும் வனப்பகுதி என்று அறிவிக்கப்பட்ட எல்லைக்குள். இந்த இடத்தை முழுக்க சுற்றி முள் வேலி கட்டப்பட்டது. யானைகள் மொத்தமாக கல்லூரிக்குள் இடம் பெயர்ந்தன. இது தொலைக்காட்சி செய்திகளில் கூட இடம் பெற்றது.
பின்னர் கல்லூரியின் முள் வேலி மின்சார மயம் ஆனது கூடவே அகளிகளுடன். இதனால் அந்த யானைகள் கிழக்கே நகர ஆரம்பித்து தேசிய நெடுஞ்சாலைகளை அடிக்கடி கடந்தன. அங்கிருந்தும் கிழக்கில் துரத்தப்பட்டு ரயில் தண்டவாளங்களை கடக்க முற்பட்டு உயிரை துறந்தன. இப்படி அதனுடைய இடத்தை பறித்துக்கொண்டு அவை துரத்தி அடிக்கப்பட்டன. பின்னர் கல்லூரிக்கு அருகில் சுமார் 1000 ஏக்கர் ரியல் எஸ்டேட்காரர்களால் வளைக்கப்பட்டு golf கோர்ட்களும் வீடுகளும் வந்து ஒரு மலையே மறைக்கப்பட்டது. இதே போல மேற்கு தொடர்ச்சி மலையின் ஓரங்கள் முழுவதும் கல்லூரிகளாகவும், சாமியார் மடங்களாகவும் ஆனது. இன்றும் இந்த இடங்கள் தமிழ்நாடு வன துறையின் வலைத்தளத்தில் வனப்பகுதிகளாக காட்டப்படுகின்றன. இப்படி யானைகள் மற்றும் காட்டு விலங்குகளின் வாழ்விடங்கள் மற்றும் வழிகளை தடுக்கவும் அவை ஊருக்குள் வந்து உயிரை விடுகின்றன.
மொத்தம் 3800 முதல் 4800 யானைகள் நீலகிரி வனச்சரகத்தில் வாழ்கின்றன. கடந்த பத்து வருடங்களில் மட்டும் 298 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில் ஒன்று மட்டுமே முதுமையின் காரணமாக உயிரை விட்டுள்ளது. மற்றவை பசி, வேட்டை, நோய், மின்சார வேலிகள் மற்றும் ரயிலில் அடிபட்டும் உயிரிழந்துள்ளன. ஐந்து வருடங்களுக்கு முன்பு தண்டவாளத்தை கடந்த 3 யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்தன. அவற்றில் ஒன்று கர்ப்பிணி, விபத்தில் குட்டியை ஈன்றது. அதுவும் இறந்தே பிறந்தது. இப்படி அவற்றின் வாழ்விடத்தை பறித்துக்கொண்டு அவற்றின் உயிர் இழப்பிற்கும் காரணமாக உள்ளோம் குற்ற உணர்வே இல்லாமல்.
வன இலாகா என்பது வன உயிரினங்களுக்கும் வன பகுதிகளின் பாதுகாப்பிற்கும் செயல்படும் அமைப்பு. இங்கள்ள மற்ற நாடுகளில். இங்கே வன பகுதிகளில் குடியிருப்புகளுக்கும் கேளிக்கைகளுக்கும் அனுமதி அளித்து விட்டு அங்கிருப்பவர்களின் பாதுகாப்பிற்காக வன விலங்குகளை துரத்திக்கொண்டு இருப்பவர்களை என்னவென்று சொல்வது. நிலத்தில் உள்ளதில் பெரிய மிருகம் யானை என்று படித்ததை இன்றைக்கு இப்படி மாற்றிக்கொள்ளலாம் நிலத்தில் உள்ள பெரிய மிருகம் யானையை அழித்த மனிதனே பெரிய மிருகம்.
0 comments :
Post a Comment