May 18, 2013

விபத்து அனுபவம் - II


தனியார் மருத்துவமனை:
 
தனியார் மருத்துவமனை சாய்பாபா காலனி-ல் இருந்தது. அது ஒரு பெரிய மருத்துவமனை, எனக்கு அதன் வாசல் எந்த பக்கம்னு கூட தெரியாது. நண்பர்கள் ஆம்புலன்ஸ்-ல் ஏற்றி விட முதல் முறையாக சுழல் விளக்கு போட்ட வாகனத்தில் சென்றேன். ஆனால் இரவு 10.30 மணி என்பதால் எங்கள் வாகனம் மட்டும் சாலையில் சென்றது. மருத்துவமனை சென்றதும் நல்ல இடத்தில் படுக்க வைத்தனர் சுற்றிலும் ஏதோ திரை கட்டி விட்டிருந்தனர். வந்த 5 நிமிடங்களுக்குள் என் ஊரில் இருந்து சொந்தக்காரர்கள் 15 பேர் வந்துவிட்டனர். எல்லோரும் என் கட்டிலுக்கு ஒன்றாக வராமல் 2-3 பேராக வந்து விசாரித்தனர். முதல் தடவையா முடியல!

அப்பொழுதுதான் வலது காலை பார்த்தேன் என் பேண்ட் முட்டிவரை கிழிக்கப்பட்டு chicago style போல இருந்தது.  ஒரு நர்ஸ் வந்து கையில் ஒரு band கட்டிவிட்டார், அதில் பெயர், ID எல்லாம் போட்டு நாய் paas போல இருந்தது.

பின்னர் எதற்கு என்று சொல்லாமலே மாவு கட்டு போட்டனர். அடுத்து ஆரம்பித்தனர் முதலில் XRay  ல் ஆரம்பித்து ரத்தம், சிறுநீர் ன்னு எடுத்தாங்க. CT Scan எடுத்தாங்க, இதுக்கே மணி 2. Ok  தூங்க விடமாட்டாங்க ன்னு யோசிக்கும்போது ரிப்போர்ட் வந்துச்சு, வலது கால் பாதத்துக்கு மேல ஒடஞ்சு போச்சுன்னு சொன்னங்க. உள்ள Tibia, Fibula ன்னு ரெண்டு எலும்புமே காலி!.இடுப்பு எலும்புல crack இருக்கு பட் surgery வேணாம். கால்ல மட்டும் பண்ணிடலாம்னு சொன்னங்க. சரி என்ன வேணா பண்ணுங்க இப்போ தூங்க விடுங்கன்னு கத்த தோணிச்சு ஆனா 2வது தடவையும் முடியல. அப்பறமா ஒரு டாக்டர பார்க்கணும்னு கூட்டிட்டு போனாங்க, அவங்க தான் வழக்கமா கேட்கறத கேட்காம மாத்தி கேட்டாங்க என்னனுனா நீங்க தம் அடிச்சிங்கலானு? இனி ஏமாத்த முடியாதுன்னு ஆமான்னு சொல்லிபுட்டேன்.

ரூம்க்கு போலாமான்னு கேட்டப்ப சொன்னங்க ரூம் இல்ல ஜெனரல் வார்ட்ல படுக்க முடியுமான்னு? மத்த நாள்னா ditch மேல கூட ஓகேன்னு சொல்லிருப்பேன் இப்போ கொஞ்சம் சொகுசு தேவைபடரதால முடியாதுன்னேன். A/C ரூம்னா 2300 சாதா ரூம்னா 1700 ன்னாங்க ஹோட்டல் மாதிரி இதை விட கம்மி இல்லையான்னு கேட்டேன். ஆஸ்பத்திரிக்கார் கேட்டார் Mediclaim இருக்குல்ல அப்பறம் ஏன் பணத்தை பத்தி கவலை படறிங்கன்னு. இப்ப 3வது வாட்டி முடியல!. எனக்கு இது என்ன லாஜிக் ன்னு இப்ப வரைக்கும் புரியலங்க. சாதா ரூமே குடுங்க சாமி ன்னு சொல்லி கிளம்பும்போது போலீஸ் SI வந்தார். எல்லா விவரமும் வாங்கிட்டு சொன்னார், அந்த எமன் வண்டியில்ல ஓட்டிட்டு வந்த குண்டின்னு. பயபுள்ள full மப்புல வந்துருக்கு.  நாலு மணிக்கு ரூம் போய் தூங்கினா 6 மணிக்கு எழுப்பி ரத்தம் எடுக்கனும்னாங்க அடப்பாவிகளா இப்ப எடுத்து 3 மணி நேரந்தான ஆச்சுன்னு மனசுக்குள்ள நெனச்சுகிட்டேன்.

காலைல பெரிய டாக்டர் (அப்படித்தான் நர்ஸ் சொன்னாங்க) வந்துட்டு 1 மணிக்கு surgery, முட்டில போட்ட தையல் பிரிச்சு இவங்களோட தையல் போடுவாங்களாம். எதுக்குன்னு கேட்காம சரின்னேன். அப்பறம் தான் காமெடி மாவு கட்டை பிரிச்சா வலது பாதத்துல பின் பக்கமா பெரிய சைஸ் காயம். எங்கயோ வண்டில பட்டு கிழிஞ்சுருக்கு. எவனுமே இத பார்கல. முக்கியமான ஒன்னு இனிமே ஏதும் சாப்பிட கூடாதுன்னார். நீங்க நல்லா இருப்பீங்க தெய்வமேன்னு நெனச்சுட்டு படுத்துட்டேன். ஒரு மணிக்கு இருந்த ஜட்டியும் கழட்டி ஒரு பச்சை கலர் டிரஸ் போட்டு கூட்டிட்டு போனாங்க. எனக்கு சினிமா ஞாபத்துல எங்க அம்மா, என் பொண்டாட்டி, தங்கச்சி எல்லாம் பார்த்ததும் அழுகை வந்துச்சு, இதுல என் பொண்டாட்டி என் பர்ஸ் ல இருந்து எங்க அப்பா போட்டோ காட்டினதும் ரொம்ப அழுதிட்டேன். என் strecher தள்ளிக்கிட்டு வந்த அக்கா (பின்னாடி ரொம்ப தோஸ்த் ஆயிட்டாங்க) ஆபரேஷன் theatre ல ஒரு சின்ன குழந்தைய காட்டி இந்த பாப்பா சும்மா இருக்கு நீ என்ன தம்பி (மனசுக்குள்ள கழுத) இப்படி அழுகறன்னாங்க. அப்பறமா கண்ண தொடச்சு நானே சமதானமாயிட்டேன்.

ஆபரேஷன்:

மயக்க மருந்து குடுத்ததால பாதி மயக்கத்துல இருந்தேன். டாக்டர் உங்களுக்கு ரொம்ப ஹை BP இருக்கு. இந்த வயசுல இவ்ளோ கூடாதுன்னார். எனக்கு என்ன பண்ண சுத்தி இருக்கறவங்க/நடக்கற விஷயம் எல்லாம் bp  ஏத்தர மாதிரி இருக்கு என்ன பண்ண. தம் அடிக்க கூடாது, எவ்ளோ நாளா இந்த பழக்கம்ன்னு கேட்டார். நான் அமைதியா ஒரு வருசமாதான் டாக்டர்ன்னு  பதில் சொல்ல ரொம்ப ஆச்சரியமா இவ்ளோ வயசுக்கு அப்பறமா ஏன் இந்த முடிவுன்னு கேட்டார். ஒரு வருஷம் முன்னாடி தான் கல்யாணம் ஆச்சுன்னென்! மனுஷன் கேட்டுட்டு ரொம்ப சிரிச்சார். நான் கூட ஆதித்யா சேனல் போட்டங்களான்னு பார்த்தா நான் சொன்னதுக்கு சிரிசிருக்கார். சிரிச்சுகிட்டே எழுந்து உட்கார், முதுகுல ஊசி போடணும்னார், நான் எதுக்குன்னு கேட்கரதுக்குள்ள, முதுகுல எதையோ தடவி பட்டுன்னு குத்திட்டார் மனுஷன். அதுக்கு பிறகு இடுப்புக்கு அப்பறமா ஏதும் பார்க்காம இருக்கற மாதிரி துணி கட்டிட்டாங்க. இதை பார்த்துட்டே 5 நிமிஷத்துலயே தூங்கிட்டேன். நடுவுல ஏதோ பட்டறையில் இருக்கற மாதிரி சத்தம் வந்தாலும் கண்ண தொறக்க முடியல. டாக்டர் தான் தம்பி தூங்கி 2 மணி நேரமாச்சு எழுந்திரின்னார்.  எழுந்திரிச்சு எல்லாம் சரி ஆயிருக்கும் போலன்னு நெனச்சு நான் எப்ப டாக்டர் நடப்பேன்னு அசட்டுத்தனமா கேட்டு வெச்சேன். அவரும் சீக்கிரமா ன்னுட்டு போய்ட்டார்.

திரும்ப ரூம்க்கு ஒரு மணி நேரம் கழிச்சு கூட்டிட்டு போனாங்க, போகறப்ப வலது கால் மேல ஏதோ antenna மாதிரி இருந்தது. பெட்ஷீட் இருந்ததால என்னனு தெரியல. ரூம்க்கு வந்து பார்த்தா கால்ல முட்டிக்கு கீழ ஒரு drill போட்டு ஒரு கம்பி, பாதத்துல ரெண்டு பக்க முட்டிக்கு கீழ ரெண்டு பக்கமா கம்பி குத்தி வெச்சுருக்கு. இப்ப நெஜமாவே முடியலன்னு மயக்கம் போட்டுட்டேன்.

பின்னாடி தினமும் கால்ல கட்ட பிரிச்சு மாத்த, காலைல ரத்தம் எடுக்கறதுன்னு போயிட்டு இருந்துச்சு. கூடவே முதுகுல ஒரு glucose பாட்டில் போல ஒன்னு தொங்கிக்கிட்டே இருந்துச்சு. அது வலி தெரியாம இருக்க மருந்து போகுதாம். இதுக்கு நடுவுல ஆய் போறத பத்தி யோசிக்கவே இல்ல. அதுவும் நடந்துச்சு 2 நாள் கழிச்சு வருதுன்னா ஒரு பெரிய டப்பா எடுத்துட்டு வந்து பொச்சுக்கு கீழ வெச்சு போன்னு சொன்னா இப்ப 4வது வாட்டி முடியல. இது போல ஒண்ணுக்கு போக ஒரு டப்பான்னு ஆய்டுச்சு.

2nd ஆபரேஷன்:

பெரிய டாக்டர் நாலு நாள் கழிச்சு ஒரு குண்ட போட்டார். அதாவது பாதத்துல ஆன புண்ணுக்கு plastic surgery தான் பண்ணனும் ஒரு வாரம் கழிச்சு பண்ணிக்கலாம்னார், நான் என்ன வேண்டாம்னா சொல்ல முடியும். ஒரு வாரம் கழிச்சு திரும்ப மயக்கம், முதுகுல ஊசி, பட்டறை வேலைன்னு பண்ணி இடது தொடைல சதைய எடுத்து பாதத்துல வெச்சுட்டாங்க. கூடவே கால்ல ரெண்டு கம்பி சேத்து வெச்சுட்டாங்க.

ரூம்ல என்ன தொல்லைன்ன வெளில generator வெச்சுருகானுங்க போல செம சத்தம், அதனால எப்பவும் ஜன்னல் சாத்தியே வெச்சுருக்கணும். அதனால புளுக்கம் அதிகமாகி சரியா டாக்டர் rounds வர்றப்ப நெளிஞ்சுட்டேன். அவரு உடனே பையனுக்கு முதுகு புண்ணாகிடும் ஒரு air bed வாங்கி போட்ருங்கன்னு சொல்லிட்டார். எங்க வீட்ல உடனே அது 100-200 ன்னு நெனச்சுட்டு சரின்னு தலையாட்ட உடனே கொண்டு வந்து போட்டுட்டு 6000 கட்ட சொல்லிட்டு போய்ட்டாங்க. இதுக்கு மேல எப்படி தூக்கம் வரும், அது வேற இட்லிய பரப்பி வெச்சு படுத்த மாதிரி இருக்க ரெண்டே நாள்ல தூக்கி போட்டுட்டேன்.

பில்:
 
இதுக்கு நடுவுல கேள்விப்பட்டேன் வீட்டுக்கு அனுப்ப போறதா. சந்தோசமா இருந்துச்சு, ஆனா அது பில் வர வரைக்கும் தான். 95,000 போட்டு குடுத்துருந்தாங்க. தல கிறுகிறுக்க கை நடு நடுங்க வாங்கி பார்த்தேன். எல்லாமே detailed ஆ போட்ருக்க ஒன்னு மட்டும் உறுத்துச்சு. அது Cheif வந்து பார்த்ததுக்கு 16,000 ன்னு. அவரு ஒரு நாள் வந்து எங்கிட்ட கேட்ட ஒரே கேள்வி தம்பி நல்லா இருக்கியான்னு? அதுக்கு இவ்ளோ பணமா. நல்ல வேலை நெறைய கேட்கலன்னு நெனச்சுகிட்டேன். மொதல்லையே 15 நாள் ஆயிருக்க பணம் வேற இல்ல அது ரெடி பண்ண வேண்டி கூட ரெண்டு நாள் இருந்தேன் அதுதான் கொடுமை. டாக்டர்ல இருந்து கக்கூஸ் கூட்ற ஆயா வரைக்கும் இன்னும் ஏன் கெளம்பலன்னு கேட்டுட்டாங்க. 

கால்ல கம்பியோட போயிட்டு ஒரு 10 நாள் கழிச்சு வர சொல்லிருந்தாங்க. ஆனா கிளம்பறப்ப டாக்டர், நர்ஸ் தவிர strecher தள்ளினவர், கக்கூஸ் clean பண்ணவங்க, ரூம் கூட்டினவங்கன்னு ஷிப்டு க்கு 3 பேர், இவங்க எல்லாரும் ஆளுக்கு 50 ரூபா கேட்க, நான் திரும்ப வருவேங்க அப்ப வேணா தர்றேங்கன்னு அவங்க அடம் பிடிக்க வேற வழி இல்லாம குடுத்தா அடுத்த ஷாக். ஆம்புலன்ஸ் அதுல டிரைவர் அவருகூட ஹெல்பர் இவங்க ரெண்டு பெரும் காசு கேட்டா பரவாயில்ல வண்டி வாடகை வேற கேட்க செம டென்ஷன் ஆய்டுச்சு. என்னடா மொத்தமா சுருட்டலாம்ன்னு முடிவு பண்ணிட்டிங்களான்னு கேட்க அவரு அங்கேயே கேட்காம விட்டது உங்க தப்புன்னு என்ன சொன்னார். இனி சுத்தமா முடியாதுன்னு குடுத்துட்டேன்.
எல்லா பில், ரிப்போர்ட் ல எல்லாம்  hospital பேருக்கு கீழ ஏதோ டிரஸ்ட்ன்னு பேரு போட்டிருந்துச்சு. நம்ம நாட்டுல மட்டும் தான் இப்படி எல்லாம் சேவை பண்ண முடியும்னு தோணுது.

வீட்லயாவது இனி நிம்மதியா இருக்கலாம்ன்னு நெனச்ச நெனப்புல குப்பைய கொண்டு வந்து போட்டுட்டாங்க. தினமும் 10-20 பேர் பார்க்க வந்து டரியலாகிட்டங்க.

தொடரும்...


May 17, 2013

IPL


# நேற்று கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மூன்று வீரர்கள் ஸ்ரீசாந்த், சாண்டிலா மற்றும் சவான் சிக்கயுள்ளனர். ரசிகர்கள் ஆர்வம் அதிகரிக்கும் வண்ணம் எல்லா அணியும் ஹாலிவுட் பட கிளைமாக்ஸ் போல இறுதி ஓவரில் தான் வென்றனர். நாமும் நகம் கொறித்து வீட்டில் உள்ளவர்களுடன் சண்டை போட்டு நாடகங்களின் இடைவேளையில் பார்த்ததுக்கே இவ்ளோ கோவம் வந்தா ஸ்டேடியத்துல காசு குடுத்து பார்த்தவன நெனச்சு மனச தேத்திக்கணும். இன்று போட்டிகளை பார்க்கும்போது 13,14 ரன்கள் ஒரு ஓவரில் எடுத்தால் fixing தான் ஞாபகம் வருகிறது. வாழ்க ஸ்ரீசந்த் & Co.

#இன்றைக்கு கிரிக்கெட் சூதாட்ட புகாரில் தமிழகத்தை சேர்ந்த சிலரை கைது செய்துள்ளனர். போலீஸ்க்கார் இன்னும் 1000-2000 பேர் நம்ம நாடு முழுக்க இருப்பாங்க அவங்களயும் பிடிங்க.

#2000ம் ஆண்டில் இதே போல அசாருதீன், ஜடேஜா & மோங்கியா செய்தனர். அப்போல்லாம் ஆர்வமா பார்த்துகுட்டு இருந்த காலம். அசாருதீன் நன்றாக ஆடிக்கொண்டிருப்பார், அவரை ஒரு 50-60 ரன் ஜெயிக்க தேவைப்படும்போது ஜடேஜா or மோங்கியா ரன் அவுட் செய்வார்கள். அவரும் திட்டிக்கொண்டே (கூடவே நாமும் #$#$#$ வார்த்தையில்) பெவிலியன் திரும்புவார்.
பிறகுதான் தெரிந்தது பன்னாட பயலுக காச வாங்கிட்டு இத பண்ணது. விடுங்க இதுக்கு மேல பேசினா கெட்ட வார்த்தை தான் வருது.

#ஸ்ரீசாந்த்-ன் தந்தை நேற்று உணர்ச்சி வசப்பட்டு இதற்கு தோனி மற்றும் ஹர்பஜன் தான் காரணம், அவரின் வளர்ச்சியை தடுக்க இருவரும் சேர்ந்து செய்த சதி என்றார்.  இன்று பேசிய பேச்சுக்கு இருவரிடமும், கேரள மக்களிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார். 
அவங்க அப்பாவுக்கு ஒரு கேள்வி: "சாரே உங்க பையன் கேரளாவுக்கு மட்டுமா விளையாண்டது, நம்ம நாட்டுக்கும் தான  அப்புறமா எதுக்கு கேரளாவுக்கு மட்டும் மன்னிப்பு கேட்கறீங்க?"

#சூதாட்டம் பற்றி நேற்று BCCI விளக்கம் கொடுத்தது. அதுபற்றி பிஷன் சிங் ட்விட் செய்தார் : "IPL  Governing Committe எங்க போச்சு BCCI president சீனிவாசன் எதுக்கு விளக்கம் தர்றார்னு". நல்ல கேள்வி ஆனா உங்களுக்கு பதில் question pass .

#சூதாட்ட பணம் சுமார் ரூ.40000 கோடிகள் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது. சூனாபான இப்ப தாண்டா தெரியுது ஏரோப்லென வித்துட்டு வந்து கிரிக்கெட் பார்கறானுங்கன்னு?
 

கிரிக்கெட் பத்தி ஒரு நல்ல செய்தி:
#புற்று நோய் கண்டறியும் இலவச மையத்தை நமது கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் தொடங்கி உள்ளார் அதுவும் தோனியின் சொந்த ஊரில். இப்போதைக்கு நோயை கண்டறிவதை ஆரம்பித்து உள்ளதாகவும் எதிர் காலத்தில் இலவச சிகிச்சை மையம் ஆரம்பிக்கும் எண்ணம் உள்ளதாகவும் தெரிவித்து உள்ளார். எல்லாரும்  fraud பன்ன நியூஸ் தான் போற்றுக்காணுக அதான் அந்த நல்ல மனுசன பத்தி கொஞ்சம் சொல்லலாம்னு.

May 16, 2013

விபத்து அனுபவம் - I


விபத்து:

நான் இது நாள் வரை சந்திக்காத ஒன்று. அதாவது மிகச்சிறிய நொடிபொழுதில் விபத்தில் இருந்து தப்பித்து இருக்கின்றேன். அப்பொழுதெல்லாம் ஒருவித படபடப்புடன் அடுத்த சில நிமிடங்கள் நகரும். அந்த நேரத்துக்கு மட்டும் பலவித கட்டுபாடுகளை மனம் விதிக்கும், மூளையும் கேட்டுகொள்ளும், அதுவும் தூங்கி எழும் வரைதான். அதற்குப்பிறகு வழக்கம்போல Racing & Chasing.

இரண்டு மாதங்களுக்கு முன்பு அலுவலக பணி முடித்து இரவு 8 மணிக்கு வீட்டிக்கு கிளம்பினேன், எதிரில் எமன் டவேரா காரில் வருவது தெரியாமல். நான் இரவு சாப்பாட்டை நினைத்துக்கொண்டு வழக்கத்திற்கு மாறாக மிக மெதுவாக சென்றேன், அதுவும் அன்றைக்கு ஹெல்மெட் எடுக்க மறந்தது உணராமல்.

அது ஒரு சிறிய  குன்று. அதாவது என்னுடைய அலுவலகம் பொள்ளாச்சி சாலையில் உள்ளது, அதற்கும் பாலக்காடு சாலைக்கும் நடுவில் அமைந்துள்ளது. மிக குறுகிய சாலையே போடப்பட்டுள்ளது. இந்த குன்றின் உச்சியில் ஒரு பொறியியல் கல்லூரி வேறு இருப்பதால், காலையில் பல Valentino Rossi கலை கடந்து தான் செல்ல வேண்டும்.

இரவு நேரம் வேறு சாலையும் மிக அமைதியாக எந்த சத்தமும் இல்லாமல் இருந்தது. ஒரு மிக குறுகிய வளைவில் நான் ஒலி எழுப்பிக்கொண்டு திருப்பும்போதுதான் பார்த்தேன், எமன் மிக அருகில் எந்த ஒலியும் எழுப்பாமல் மிக வேகமாக வந்து கொண்டிருந்தான். நான் சுதாரித்து வண்டியை இடது புரமாக ஒடித்து சாலையை விட்டு கீழே இரக்க எத்தனிபதட்குள், எமன் மோதியே விட்டான். நான் கதை முடிந்தது என நினைத்து முடிப்பதற்குள் எல்லாம் முடிந்து, தரையில் வண்டியுடன் கிடந்தேன். கண்களில் பொறி பறந்து, குருவி, காக்கை குஞ்சுகள் எல்லாம் சுற்றி சுற்றி பறந்தன. சுதாரித்து எழ முற்பட்டபோது என் வண்டியின் பின் சக்கரம் என்ஜின் அணைக்காதலால் இன்னும் சுற்றிகொண்டிருந்தது தெரியாமல் கைவைக்க சிராய்ப்பு ஏற்பட்டது. பின்பு தான் சுய நினைவுக்கு வந்தேன்.

வலது கால் முட்டி மொத்தமாக கிழிந்து எலும்பு தெரிந்தது. பாதத்திலும் வலி இருந்தது. சரி உதவிக்கு ஒரு வரை அழைக்கும்போது தான் தெரிந்தது மேல் முன் வரிசை பற்களில் 3 ஆட்டம் காண்பது. உதவிக்கு வந்தவர் என் மொபைலுடன் வந்தார். அவரிடம் தவறு என்னுடையதல்ல என்றும் எங்கெங்கு அடி பட்டதை சொல்லி என் வலது சிறிது  தூக்கியபடி பிடித்துக்கொள்ள சொன்னேன். அதற்குள்   சேர்ந்து தண்ணீர் எல்லாம் முகத்தில் ஊற்றி விட்டனர். நான் நிலைமையை விளக்கி 100 மற்றும் 108 க்கு அழைகச்சொன்னேன். அவர்களோ போலீஸ் வந்தால் பிரச்சனை என்றனர். உங்களுக்கு யோசிக்க தோன்றும் என் மொபைல் என்னவாயிற்று என்று. அது என்னவோ கீழே விழுந்ததில் அவுட் கால் மட்டும் போகவில்லை. இதற்கு நடுவில் என் மனைவி விடாமல் எனக்கு அழைத்துக்கொண்டு இருந்தால். நான் உதவிக்கு வந்தவரிடம் என் அலுவக நண்பரின் எண்ணை சொல்லி அவரை அழைக்க சொன்னேன். அவர்கள் 10 நிமிடத்தில் வந்துவிட்டனர். அதுவரை 108ம் வரவில்லை. சரி இதற்கு மேல் முடியாது என ஆட்டோ ஒன்றில் செல்ல முடிவெடுத்தேன். அலுவலகத்தில் இருந்து இருவர் வந்திருந்தனர். ஒருவரை அந்த எமனின் தேரோட்டியை போலீசிடம் ஒப்படைக்க சொல்லிவிட்டு, இன்னொரு நண்பர் மற்றும் நான்கு பேர் தயவில் ஆட்டோவில் கிளம்பினேன்.

அங்கிருந்து பாலக்காடு சாலை வந்து 2 நிமிட பயணத்தில் இன்னொரு எமனை சந்தித்தேன். எங்கள் ஆட்டோ சரியாகத்தான் சென்றது, எதிர் திசையில் வந்த லாரி திடீரென வலது புறமாக திரும்பியது ஆட்டோ ஓட்டுனர் தடுமாறி வண்டியை நிறுத்திநர். நான் பின்பக்க இருக்கையில் படுத்துக்கொண்டே இதை பார்த்தேன். இதற்குமேல் முடியாதுடா வந்து அடிச்சுகோடா எமா என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். அதற்குள் பின்பக்கமாக வந்த இரு சக்கர வாகன ஓட்டி ஆட்டோ-ல் மோதி நிறுத்தினார். லாரி ஓட்டுனர் சிரித்து விட்டு கிளம்பினார். "அட சாக கெடகரவன வெச்சுகிட்டு என்ன காமெடி பண்றீங்களா?" ன்னு கேட்க ஆட்டோ டிரைவர் திரும்ப வேகம் எடுத்தார். நான் தனியார் ஆஸ்பத்திரிக்கு போக சொல்ல டிரைவரோ அரசு ஆஸ்பத்திரி என்றார். இந்த நேரத்தில் விவாதம் உடம்புக்கு நல்லதில்ல என்று அவருக்கு ஓகே சொன்னேன். நடுவில் என் மனைவி தொடர்ச்சியாக கால் செய்துகொண்டு இருந்தாள் எனக்கும் என் நண்பருக்கும். 


அரசு மருத்துவமனை :

நான் அரசு மருத்துவமனையை பற்றிய படங்களை நினைத்து பீதியில் இருந்தேன். குனியமுத்தூர் அருகில் எதிரில் 108 ஆம்புலன்ஸ் வர டிரைவர் கையை காட்டி நிறுத்த சொன்னார், அவர்கள் மிக அவசரமாக நிறுத்தாமல் சென்று விட்டனர். யாரை காப்பத்தவோ? இறுதியில் அரசு மருத்துவமனை அடைந்து அவசர சிகிச்சை பிரிவு சென்றார் ஓட்டுனர். உடனே ஒருவர் strecher கொண்டு வர உள்ளே அழைத்து சென்றனர். அங்கு நான் பயந்ததற்கு மாறாக உடனடி சிகிச்சை அளித்து என் சுய விவரங்களை பெற்றுகொண்டனர் கூடவே குடிச்சிட்டு வண்டி ஓட்னியா? என கேட்டு வைத்தனர். அதற்கு பிறகு எலும்பு சிகிச்சை பிரிவு அழைத்து சென்றனர். அங்கு இடமில்லா காரணத்தினால் சிறிது நேரம் காக்க வைத்தனர். ஐந்து நிமிடங்களில் திரும்ப அழைத்து காயங்களை பார்த்தனர். இங்கும் குடிச்சிட்டு வண்டி ஓட்னியா? என கேட்டு வைத்தனர்.

பிறகு முட்டியில் ஏற்பட்ட காயத்திற்கு தையல் போட்டனர். அப்பொழுது பக்கத்தில் இருந்த படுக்கைக்கு ஒரு நபரை அழைத்து வந்தனர். அவர் மிகவும் சத்தம் போட்டதால் என்னை பார்த்து கொண்டிருந்த மருத்துவர்கள் அவரிடம் சென்றனர். எனக்கோ வாய் முழுக்க ரத்தம், பேச கூட முடியவில்லை. சரி அந்த மனிதரை வேடிக்கை பார்க்கலாம் என்று திரும்பினால் அவர் முகம், கை என எங்கும் அடிபடவில்லை. கால் மட்டும் தெரியாத அளவு துணியால் சுற்றி இருந்தது. பின் பிரித்தனர் மனிதருக்கு இடது காலில் பாதத்தின் கீழே சதையே இல்லை, வெறும் எலும்பு மட்டும் தெரிய, பெரு விரல் உடைந்து ஊசலாடியது. இதற்கு மேல் எவ்வளவு வலி ஏற்பட்டாலும் கத்தவோ, கதறவோ கூடாது என முடிவெடுத்து கண்ணை மூடி படுத்து கொண்டேன்.

இதற்குள் என் ஊர் மற்றும் அலுவலக நண்பர்கள் என் மனைவி என எல்லோரும் வந்திருந்தனர். சரி அவர்கள் பயந்து விடக்கூடாது என்று கையை ஆட்டி வலி இல்லாதது போல் காட்டிக்கொண்டிருந்தேன்.

பின்னர் வேறு மருத்துவர்கள் வந்து தையல் போடும் வேலையை ஆரம்பித்தனர். என்னடா இவங்க இன்னும் அந்த கேள்விய கேக்கலியேன்னு நெனைக்கும்போதே கூட இருந்த  ஒரு நர்ஸ் அத கேட்டாங்க. அட அதாங்க குடிச்சிட்டு வண்டி ஓட்னியா? .முதன் முதலாக உடம்பில் தையல் போடப்பட்டது. வெளியில் திடீரென அழைத்து வந்தனர் என்னடா காயம் இன்னும் இருக்கே ஒரு தையல் தான போட்டிருக்கு என நினைக்க, நண்பர்கள் வந்து உடனடியாக தனியார் மருத்துவமனை செல்லலாம் என்று அவர்களின் ஆம்புலன்சுடன் காத்திருந்தனர் .



தொடரும்..... அனுபவங்கள் ...

May 15, 2013

சாலை - விபத்தும் நானும்


விபத்து இது நாம் சந்திக்காதவரை நாம் பெரிதாக கருதிக்கொள்ளாத ஒன்று, சந்தித்த பின்பு அறிவுரை சொல்ல வைக்கும் ஒன்று (உயிரழப்பு ஏற்படாமல் இருந்தால்).
 
 கடந்த 2 மாதங்களில் ஒரு வேலையும் செய்ய முடியவில்லை காரணம் ஒரு விபத்து. முதலில் இந்தியாவில் விபத்துக்கான காரணங்கள் பற்றி ஒரு சிறுஅலசல்.

இன்று உலக அளவில் அதிக உயிர் இழப்பை உண்டாக்குவது - சாலை விபத்து. அதற்கான காரணங்கள் மிக வேகம், பாதுகாப்பில்லா பயணம், போதை மற்றும் விதி மீறல். காரணம் எதுவாக இருந்தாலும் முடிவு உயிரழப்பு அல்லது காயம்  என்பதுவே.

விபத்துக்கான முதல் காரணி வாகனம், அவை எந்த வகையாக இருந்தாலும் சரி (சைக்கிள் முதல் ட்ரக் வரை).

வாகனம்:
2010 ம் ஆண்டில் இரு சக்கர,மற்றும் கன ரக வாகனங்களும் விபத்தை ஏற்படுத்தியதில்  47% ம், கார்கள் 22% ம் பங்கு வகிக்கின்றன. அதுவே உயிரழப்பை ஏற்படுத்திய விபத்துகளில் கன ரக வாகனங்கள் அதிக பட்சமாக 29% ம் கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் 28% பங்கு வகிக்கின்றன. அது போல விபத்துக்கு பிந்தய உயிரழப்புகளில் இவை இரண்டு வகையே முறையே 29% மற்றும் 27% ஆகும்.  இதுவே காயம் அடைபவர்கள் இரு சக்கர வாகனங்களில் 22% ம், கன ரக வாகனங்களில் 22%ம் ஏற்படுகிறது. இவ்வகை விபத்துக்கள் அதிகமாக நெடுஞ்சாலைகளில் நடப்பவை, இதில் உயிர் பிழைக்கும் வாய்ப்புகளும் மிக குறைவு, காயம் என்பதோ ஊனம் என்ற அளவில் இருப்பவை.

நம்முடைய கவனம் 200% இருந்தால் மட்டுமே உயிரழப்பு அல்லது விபத்தை தவிர்க்க முடியும்.


சாலை:
விபத்து மற்றும் உயிரிழப்புகள் வாகனங்களால் மட்டுமல்ல சாலைகளாலும் ஏற்படுகின்றன.  நமது நாட்டில் அதிக சதவிகித சாலைகள் மோசமானவைதான். கீழே உள்ள பட்டியல் படி பார்த்தால் தேசிய மற்றும் மாநில சாலைகளை விட கிராமப்புர சாலைகளிலேயே அதிக விபத்து மற்றும் உயிரழப்பு ஏற்படுகிறது.

தேசிய, மாநில மற்றும் இதர சாலை விபத்து எண்ணிக்கை முறையே 30%, 25% மற்றும் 45% இருக்கின்றது. இதில் உயிரழப்பு எண்ணிக்கை முறையே 36%, 27% மற்றும் 37% என்றும் காயமடைந்தோர் எண்ணிக்கை முறையே 31%, 26% மற்றும் 43% என்று உள்ளது. 

இந்த முடிவுகளின் படி நாம் அறிவது விபத்தோ , உயிரழப்போ அவை அதிகம் நடப்பது கிராம மற்றும் இதர சாலைகளிலேயே. நான் விபத்துக்குள்ளானதும் இந்த வகை சாலையில் தான். என்னத்த சொல்ல:(

Top 5:
கீழே  கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையில் கடந்த 2010 ல் நடைபெற்ற விபத்து மற்றும் உயிரழப்புகளில் முதல் 5 இடங்களைப்பெற்றுள்ள மாநிலங்கள் உள்ளன: 

நம் தமிழகம் 3 அட்டவணைகளிலும் முதல் 3 இடங்களுக்குள் உள்ளது. 

இந்த பட்டியல் நாட்டின் முக்கிய நகரங்களில் 2010 ம் ஆண்டு நடந்த விபத்து மற்றும் உயிரழப்புகள் பற்றியது. தமிழகத்தின் 3 நகரங்கள் இதில் இடம் பெற்றுள்ளன.  எண்ணிக்கையின் படி சென்னை முதலிடத்திலும் இறப்பு விகித அடிப்படையில் கோவை முதலிடத்திலும் உள்ளது (அதாவது 100 விபத்துகளுக்கு 24 உயிரழப்பு ஏற்படுகிறது).

இந்த புள்ளி விவரங்களை நாம் மேலோட்டமாக கடந்து செல்லலாம், ஆனால் நம்முடைய கவனம் சிறிது தவறும்போது இந்த எண்ணிக்கையில் நாமும் சேர்ந்துவிடுவோம் என்பதை  மறக்க வேண்டாம். 


விபத்து பற்றிய திரு. தமிழ்நிலா அவர்களின் கவிதை:


வீதிகள் எங்கும்
புதைக்கப்படுகின்றன
வேக வெடிகள்..
சந்திகளில் எல்லாம்
அமைக்கப்படுகின்றன
விபத்து நிலையங்கள்...

கனரக ஆயுத அழிவை
கடந்து வந்தால்,
கன(ரக) வாகன அழிவு...

சாரதியின் இருக்கைக்கு
அருகில் தான்
இயமனின் இருக்கை...
பிரயாண சீட்டு இன்றி
சித்திர குப்தர்களின் வருகை..
கண்ட இடத்திலும்
கணிக்கபடுகிறது...
பாவ புண்ணியங்கள்....!!


அரசுக்கும் தனியாருக்கும்
விபத்தில் கூடவா போட்டி..??
போட்டி போட்டு இடித்து
அழிக்கிறார்கள் மக்கள் கனவுகளை...


நீதி மன்றங்களில் இன்னமும்
தேங்கி இருப்பதெல்லாம்..
விபத்து வழக்குகள் தான்...

-தமிழ்நிலா