Apr 23, 2014

யாருக்கு ஓட்டு போடுவது?


யாருக்கு ஓட்டு போடுவது, இதை பற்றி எவ்வளவுதான் அலசி ஆராய்ந்தாலும் NOTA மட்டுமே எனக்கானது என்று தோன்றுகிறது. முதல் ஓட்டு போட்டு 13 வருடங்களாக அதிகம் யோசிக்காமல் பல சமயம் கட்சி சார்ந்தும் சில சமயம் வேட்பாளரை சார்ந்தும் ஓட்டு போட்டுள்ளேன். கடைசி இரண்டு முறை மட்டும் 49 O  க்கு தாவினேன். ஆனால் அதையும் ஓட்டு சாவடியில் இருந்த எல்லோருக்கும் தெரியும்படி மை வைக்கும் முன் ஒரு அதிகாரி அறிவித்து விட்டு என்னிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டார்.  இந்த செயல் என்னை மிகவும் எரிச்சலடைய வைத்தது. என்னுடைய ஓட்டு என்பது எனக்கு மட்டுமே தெரியவேண்டிய ஒன்றை எல்லோர் முன்னாலும் வெளிப்படுதப்பட்டதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. சாவடியில் கட்சி சார்பாக இருந்த சொந்தக்காரர் ஒருவர் என்னிடம் 49 O  போட்டால் வீட்டுக்கு தண்ணீர் முதல் சலுகைகளை எல்லாம் கொடுக்காமல் தடுப்பார்களே என்று அதிகாரியை விட பேசி எரிச்சல் ஏற்படுத்தினார். 

முதல் முறை ஓட்டு போடும்போது எதையும் அலசி ஆராயும் அறிவில்லை, எனவே கண்ணை மூடிக்கொண்டு தேசிய கட்சி ஒன்றுக்கு போட்டேன். அதிக பட்சமாக அவர்களுக்காக வாக்கு கேட்க ஊட்டி வரை உல்லாச பயணம் கூட சென்றேன். இன்றைக்கு அதற்காக வெட்கப்படுகிறேன்.  அதன் பிறகு மாநில கட்சி ஒன்றுக்கு மாற்றம் வேண்டி என நானே நினைத்துக்கொண்டு ஓட்டை குத்தினேன். அதற்கு அடுத்த தடவை மாநில கட்சியின்  ஒரு வித்தியாசமான தலைவர் என்று அவர் சார்பான வேட்பாளருக்கு  என் ஓட்டை  வீணாக்கினேன். ஏனென்றால் மனிதர் வெற்றிபெற்று அமைச்சர் ஆனபிறகு எங்கள் தொகுதி பக்கமே எட்டி பார்கவில்லை. ஓட்டு கேட்டு ஐந்து வருடங்களுக்கு முன்பு வந்தவர் அடுத்த தேர்தலில் தான் தொகுதியை எட்டிப்பார்த்தார். இவர்கள் எந்த தைரியத்தில் மறுபடி நிற்கிறார்கள் என்றே தெரியவில்லை. ஆனால் அந்த கட்சியின் தலைவர் இன்று கண்ணியாமானவராகவே எனக்கு தெரிகிறார்.

இதற்கு அடுத்து தொகுதி பிரிப்பு என்று ஒரு வைபவம் நடந்தது. முன்பு எங்கள் ஊர் தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் இருந்தது. பாராளுமன்ற தொகுதியாக நீலகிரியில் இருந்தது. இந்த தொகுதியை பிரிக்கும் பணியில் இருந்த அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை எந்த கிணற்றில் கட்டி தொங்க விடுவது என்று தெரியவில்லை. ஏனென்றால் எங்கள் ஊர் நீலகிரியில் இருந்து 100 கி.மீ தொலைவில் உள்ளது. ஊரில் வருடத்திற்கு ஒரு முறை ஊட்டிக்கு உல்லாச பயணம் செய்யக்கூட முடியாதவர் பலர் உள்ளனர். இதில் அமைச்சரை சந்திக்க அவ்வளவு தூரம் பயணிப்பது எங்கே?. அல்லது அமைச்சர்களாவது குறை கேட்கவாவது தொகுதி பக்கம் வருவார்களா என்று எதிர்பார்த்தால் என்னை முட்டாள் என்று முதல் ஆளாக சொல்வீர்கள். சில வருடங்களுக்கு முன்பு தொகுதி மறு சீரமைப்பு என்று எல்லோரிடமும் கருத்து கேட்டு பிரித்ததாக எங்கள் ஊரை சட்டமன்றத்திற்கு கிணத்துக்கடவு தொகுதியிலும், பாராளுமன்றத்திற்கு பொள்ளாச்சி தொகுதியிலும் இணைத்து விட்டனர். இப்பொழுது அமைச்சரை பார்க்க வேண்டுமென்றால் குறைந்த பட்சம் 40 கி.மீ செல்ல வேண்டும். இது எந்த வகை நியாயம் என்று தெரியவில்லை.

இப்படி எனக்கு அரசியல் அறிவை ஊட்டிய அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் கடந்த முறை வாக்களிக்கும் முன்பு யோசிக்க வைத்து விட்டனர். எனவே 49 O  க்கு தாவினேன். இம்முறையும் தேசிய கட்சி ஒன்றின் பிரச்சாரம் மிக அதிக அளவில் இளைங்கர்களை கவர்ந்துள்ளது.  அவர்கள் நிலையான ஆட்சி தரும் போது சிறிது தேற நமது நாட்டுக்கு வழியுள்ளது போல் தெரிகிறது.  நிலையான ஆட்சி என்பது தனிப்பெரும்பான்மை. ஏனெனில் 5 அல்லது 10 இடங்களை வைத்துக்கொண்டு குப்பன் சுப்பன் எல்லாம் மத்தியில் உள்ள தேசிய கட்சிகளின் கண்களில் விரலை விடுகின்றார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். அதற்கு ஏதேனும் ஒரு கட்சி தனிப்பெரும்பான்மை பெரும் கட்சிக்கு வாக்களிப்பது நாட்டுக்கு நல்லது. ஆனால் கொஞ்சம் சுய நலமாக யோசித்தால், அதாவது என் தொகுதி மற்றும் அதன் வெற்றி வேட்பாளர் என்று கணித்து ஓட்டு போட வேண்டும் என யோசித்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. முடிவாக NOTA வுக்கே செலுத்தி விடலாம் என்று தோன்றுகிறது. பார்க்கலாம் நாளை காலை வரை நேரம் உள்ளது.?




Mar 21, 2014

கிரிமியா vs தமிழீழம்



இருபது வருடங்களுக்கு முன்பு சோவியத் யூனியன் நாடுகள் பிரிய முடிவெடுத்த போது ரஷ்யாவால், உக்ரைனுக்கு தாரை வார்த்து கொடுக்கப்பட்ட கிரிமியா என்ற பிரதேசம் எந்த உயிர் சேதமும் இன்றி இப்பொழுது தனி நாடாக உதயமாகி உள்ளது. அதற்கு பத்து வருடங்களுக்கு முன்பு இன அடக்குமுறையால் ஆயுத போராட்டம் ஆரம்பித்த தமிழீழம் இன்றும் கனவாகவே உள்ளது. 

 கிரிமியா, தமிழீழம் இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இரண்டுமே இனம் மற்றும் மொழியால் சிறுபான்மையினராக நாட்டின் மற்ற பிரதேசங்களுடன் பிரிந்திருந்தனர். தமிழீழத்தின் மொத்த நிலப்பரப்பு 20,500 சதுர கிலோமீட்டர்கள். கிரிமியாவை விட 6000 சதுர கிலோமீட்டர்கள் குறைவே.  மக்கள் தொகையில் தமிழீழம் 36 லட்சம், கிரிமியா 21 லட்சம். உக்ரைனில் அதிகம் பேசப்படுவது உக்ரைன் மொழி ஆனால் கிரிமியாவில் ரஷ்ய மொழியைத்தான் 82% மக்கள் பேசுகின்றனர். அதே சமயம் ரஷ்ய இனத்தவர்களே 59% உள்ளனர். இதனை தமிழீழத்துடன் ஒப்பிடும்போது அங்கே 90% மேலான மக்கள் தமிழ் இனத்தை சேர்ந்தவர்கள். அதே போல 99% மக்கள் தமிழை தாய் மொழியாக கொண்டவர்கள்.  இதற்கும் கிரிமியா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் உள்ளது. இரண்டு உலகப்போர்களிலும் இங்கே போர் நடைபெற்றுள்ளது. மேலும் மத்திய தரைகடலுக்கு அடுத்து ராணுவ முக்கியத்துவம் கொண்ட பகுதியாகும். இங்கே ரஷ்ய கப்பல் படை தளம் உள்ளது. இது போல எந்த முக்கியத்துவமும் இல்லாத பகுதி தமிழீழம். 

ரஷ்யா தன்னுடைய மக்கள் அங்கே ஒடுக்கப்படுகிறார்கள் என்று வலிந்து சென்று அப்பகுதியில் வாக்கெடுப்பு நடத்தி தன்னுடன் இணைத்துக்கொண்டுள்ளது. இது வரை உக்ரைன் நாட்டுடன் இருந்த போதும் தன்னாட்சி பகுதியாகத்தான் இருந்துள்ளது. ஆனால் மேற்கத்திய நாடுகள் ஏதோ ரஷ்யா போர் தொடுத்து கைப்பற்றியதை போல அதன் மீது பொருளாதார தடைகளை எல்லாம் விதித்துக்கொண்டிருக்கின்றன. ஆனால் அமெரிக்கா படைகள் ஈராக்கில் எப்படி புகுந்தன, ஆப்கானிஸ்தானை எப்படி சீரழித்தன என்பது தெரிந்த கதை. அவைகளெல்லாம் சரியாக தெரிந்தது, ரஷ்யாவின் விஷயத்தில் மட்டும் திரித்து கூறப்படுகிறது.  இது போல தமிழீழத்தில் எந்த மாயாஜாலமும் நடக்கவில்லை.

தமிழீழத்தை பொறுத்தவரை தமிழ் மக்களின் தாய் நாடான இந்தியா எம்.ஜி.ஆருக்குப்பிறகு எந்த விதத்திலும் உதவியாக நடந்துகொள்ளவில்லை. நாம் ரஷ்யாவை பார்த்து கற்றுக்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. கிரிமியாவில் உள்ள ரஷ்ய இன மக்கள் வெறும் 58% மட்டுமே. 90% தமிழீழத்தில் வாழும் தமிழினத்தை ஒரு பொருட்டாகக்கூட நாம் கருதவில்லை. எந்த வித துன்புறுத்தலோ உயிர் பலியோ ஏற்படாமல் கிரிமியாவால் சுதந்திரம் அடைய முடிந்தது. ஒரே காரணம் கிரிமிய மக்களுக்கு உக்ரைன் நாட்டுடன் இருக்க பிடிக்கவில்லை. அதையும் ஓட்டெடுப்பு மூலமே நிருபித்துள்ளனர். இந்த மாதிரியான எந்த வாய்ப்புகளும் தமிழர்களுக்கு தரப்படவில்லை. குறைந்த பட்சம் தன்னாட்சி பகுதியாக கூட அறிவிக்கப்படவில்லை. இதற்கும் காவல் துறை, நீதி துறை மற்றும் சுயமாக ராணுவம் வரை கொண்டிருந்த இனத்திற்கு எந்த வகையிலும் தன்னுடைய சுதந்திரத்தை பெற முடியாமல் போனது ஏன்?

Mar 12, 2014

அரசு அலுவலக அனுபவம் - வங்கி


வங்கிகள் நம்மில் பலருக்கும் பயமுறுத்தும் இடமாகவும, குரலை உயர்த்தி பேசக்கூட தயங்கும் இடமாகவும் உள்ளது. அது காலங்காலமாக வங்கி ஊழியர்களாலும் மக்களாலும் தொடரப்பட்டு விட்டது. இன்றைய காலகட்டத்தில் தனியார் வங்கிகள் இந்த முறையை சிறிது மாற்றி உள்ளன. ஆனாலும் பொதுத்துறை வங்கிகள் தங்கள் நடைமுறைகளை இன்னமும் அவ்வளவு எளிதாக்கவில்லை. இவர்கள் தவறு செய்து விட்டு அதை நம் தலையில் கட்டும் வித்தையை நமக்கு தெரியாமலே செய்கிறார்கள். அதை பற்றிய எனது அனுபவத்தை இங்கே பகிர்கிறேன்.

நான் நகை கடன் வேண்டி ஒரு பொது துறை வங்கியில் சேமிப்பு கணக்கு தொடங்கினேன்.  ஆனால் இந்த நகை கடனுக்கும் சேமிப்பு கணக்குக்கும் என்ன சம்பந்தம் என்று புரியவில்லை, கண்டிப்பாக தொடங்க வேண்டும் என்று கட்டளை இடுகிறார்கள்.  பல தனியார் வங்கிகள் வெறும் சம்பள பட்டியலை வைத்தே லட்சக்கணக்கில் கடன் கொடுக்கின்றார்கள், இங்கு நகையையும் பெற்றுக்கொண்டு இதை செய்கிறார்கள்.  தொடக்கமே ஒரு தகராராய் அமைந்தது.  நான் நகை கடன் வேண்டி விசாரிக்க சென்றபொழுது ஒரு ஊழியர் சேமிப்பு கணக்கு தொடங்க சொன்னார். இந்த கிளை கிராமப்புறத்தில் இருப்பதால் கணக்கு தொடங்க ரூ.500 என்றும், செக் புக் வேண்டும் என்றால் கூட ரூ.1000 என்றும் சொல்ல, நான் ரூ.500 ஐ கண்ணை மூடிக்கொண்டு தேர்வு செய்தேன். இதற்காக முகவரி சான்று மற்றும் புகைப்பட சான்றுகளை வாங்கிக்கொண்டார்கள்.

இதற்கு ஒரு மாதம் கழித்து, நகையை வைக்க சென்றபோது மறுபடியும் முன்பு கேட்ட அத்தனை சான்றுகளையும் கேட்டனர். எதற்கு இப்படி தீவிரவாதி மாதிரி நடத்துகிறீர்கள் என கேட்டதற்கு, வங்கியின் நடவடிக்கைகளை நீங்கள் கேள்வி கேட்க முடியாது என்ற பதில் கிடைத்தது. சரி நாமே கடனுக்கு நிற்கின்றோம் என நினைத்து தொடராமல் விட்டுவிட்டேன். கடனும் கிடைத்தது.  பிறகு ஒரு வருடம் வங்கி பக்கமே செல்லவில்லை. ஒரு முறை நகை கடன் செலுத்த சென்றபோது பாஸ் புக்கில் பதிவு செய்ய கொடுத்த போது தான் தெரிந்தது நான் செலுத்திய ரூ.500/- தேய்ந்து போய் ரூ.50 ல் இருந்தது.  என்னவென்று விசாரிக்க மேனேஜரிடம் கேட்க அவரோ புக்கை பார்த்துவிட்டு நீங்கள் சராசரி இருப்புக்கு குறைவாக வைத்திருந்ததால் வட்டி பிடித்தம் செய்திருக்கிறார்கள் என்றார்.  நான் மறுத்து இல்லை ரூ.500 செலுத்தினேன் அதற்கான பதிவு இருக்கிறது. அதற்கு பிறகு ரூ.10 பிடித்தம் எனக்கு தெரியாமலே செய்யப்பட்டுள்ளது என்று கூற அவரோ அது காப்பீட்டு கட்டணம் உங்களுக்கு ரூ.2 லட்சம் வரை கவரேஜ் உள்ளது என்றார். என்னிடம் தேவையான அளவுக்கு காப்பீடு செய்துள்ளேன், மேலும் கேட்காமல் பிடித்தது தவறு, சரி அந்த பணத்திற்கான சான்று ஏதேனும் வேண்டும் என கேட்டேன். அவரோ இது குரூப் பாலிசி அப்படி கொடுக்க முடியாது என கோபமாக பேசினார்.

அதற்கு மேல் என்னால் பொறுமையாக பேச முடியவில்லை. என்னை  கேட்காமலே பணத்தை பிடித்து விட்டு, இருப்பு வைக்கவில்லை என்று சொன்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பாலிசிக்கு ரூ.10 சேர்த்து கட்ட வேண்டும் என சொல்லி இருந்தால் கட்டி இருப்பேன். அதை விட்டுவிட்டு நீங்கள் தவறு செய்து விட்டு என்னிடம் கோபப்படக்கூடாது. எனக்கு பிடித்ததை எல்லாம் வட்டியுடன் சேர்த்து கொடுங்கள் என்றேன். அவரோ அப்படி எல்லாம் முடியாது என கூறினார். சரி நீங்கள் கூறியதை எனக்கு கடிதமாக கொடுங்கள் என கேட்டேன். அவர் வேலை நேரத்தில் பிரச்சனை செய்ய வந்திருக்கிறீர்களா? என்றார். இதற்கு மேல் உங்களிடம் பேசி பிரயோஜனம் இல்லை நான் RBI இடம் புகார் கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு நகர முற்பட, பிறகுதான் இறங்கி வந்து பேசினார்.  நீங்கள் கேட்பது போல் செய்ய முடியாது தம்பி என்றார். எனக்கு இந்த பதில் தேவையில்லை நான் வருகிறேன் என்றேன். அவர் யோசித்துவிட்டு சரி உங்கள் கணக்கில் ரூ.500 ஐ வரவு வைக்கிறேன் என்றார். நானோ அதற்கான ஒரு வட்டியையும் சேர்த்து வைக்க வேண்டும் என்றதற்கு ஒரு மனதாக ஒப்புக்கொண்டார்.  அன்றே பணத்தை வரவில் வைத்து விட்டுத்தான் வெளியில் வந்தேன்.

இப்படி இவர்கள் தாங்கள் செய்வது சரி என்ற எண்ணத்திலும், நாம் கேட்பது மகா தவறு என்ற எண்ணத்திலும் உள்ளனர். அதை நாம் தான் கேட்க வேண்டும். ஏனென்றால் 10 ரூபாயாக இருந்தாலும் அது நம் பணம். இதே போன்று மற்றொரு வங்கியை பற்றி RBI க்கு புகார் தெரிவித்த அனுபவத்தை இன்னொரு பதிவில் பகிர்கின்றேன்.

Feb 22, 2014

கோர்ட்டில் ஒரு நாள்

.

இதுவரை கோர்ட் நடவடிக்கைகளை திரையில் மட்டுமே கண்ட எனக்கு முதல் முறையாக அவற்றில் பங்கு கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. மூன்று வருட கல்லூரி வாழ்க்கையில் கோர்ட், கல்லூரிக்கு அருகாமையில் அமைந்தும் அதன் நடவடிக்கைகளை பார்க்கும் ஆர்வம் இல்லாததால் உள்ளே சென்றதில்லை. அதிகபட்சமாக குறைந்த விலையில் கிடைத்த மதிய உணவிற்காக மட்டுமே சென்றுள்ளேன். இப்பொழுதுதான் அதுவும் அலுவகல பணியின் காரணமாக செல்ல வேண்டி இருந்தது. 

எங்கள் நிறுவனத்தில் Cheque மோசடி வழக்கு காரணமாக சென்றேன். உள்ளூரில் வசிப்பவர் பேரில்தான் கேஸ் போட முடியும் என்பதால் என் பெயர் முன்மொழியப்பட்டது.  கம்பெனி வக்கீலை சென்று சந்தித்து அவர் கேட்ட ஆவணங்களை கொடுத்தேன், அங்கேயே ஏழரை ஆரம்பித்தது. சில வங்கி நடவடிக்கைகளுக்கான ஆவணங்கள் இல்லாததால் மனிதர் டென்ஷன் அடைந்து விட்டார். எப்படியோ சமாளித்து தகவல்களை கொடுத்துவிட்டு வந்தேன். இரண்டு நாட்கள் கழித்து கேஸ் file செய்ய கோர்ட்க்கு வரச்சொன்னார். நானும் நம்மை இன்றே ஜட்ஜ் கேள்வி கேட்க ஆரம்பிப்பார் என்ற ஆர்வத்தில் நேரத்திலேயே சென்றேன். வக்கீலின் ஜூனியர் மட்டும் போன் செய்து இன்னும் சிறிது நேரம் காத்திருக்க சொன்னார். சரியாக இரண்டு மணி நேரம் கழித்து வந்து ஒரே ஒரு கையெழுத்து மட்டும் வாங்கிக்கொண்டு அடுத்த வாரம் வரச்சொல்ல என் சுருதி சட்டென இறங்கியது.

அடுத்த வாரம் கூப்பிட்டு சரியாக நான்கு நாட்கள் கழித்து வரச்சொன்னார். இந்த முறை கோர்ட் ரூமுக்கே வரச்சொல்ல ஆர்வம் அதிகரித்தது. அங்கே சென்று அவமானப்பட போவது தெரியாமல் நேரத்திலேயே சென்றேன். பிறகு தான் வக்கீல் வரமாட்டார் என்று தெரிந்தது சரி ஜூனியர் வருவார் என பார்த்தால் அவரும் கழண்டு கொள்ள, ஜூனியரின் ஜூனியர் ஒருவர் சரியாக கோர்ட் ஆரம்பிக்கும் முன்னர் வந்தார். வந்தவர் என்னிடம் கோர்ட் அறை வாசலில் எல்லோர்க்கும் முன்பாக சென்று நிற்குமாறு கூறிவிட்டு அறையின் உள்ளே சென்றார். கோர்ட் அறையின் முன்புறம் என்றதும் ஏதோ யாரும் இல்லாத இடத்தில் இருந்து கொண்டு இதை சொல்கிறார் என நினைத்துக்கொள்ள வேண்டாம். அது ஒரு சிறிய அறை ஆனால் முன்புறம் மட்டும் ஒரு நூறு பேருக்கும் மேல் வாசலை அடைத்துக்கொண்டு நின்று இருந்தனர். இதில் எப்படி எல்லோருக்கும் முன்பு போய் நிற்பது என்று நினைத்தேன். சரி நிற்கவில்லை என்று திட்டி விட்டால் என்ன செய்வது என்று முண்டியடித்து முன்னேறினேன். முதலில் பின் வாசலில் நின்று இருந்தவர்களை அழைத்தனர். அவர்கள் ஜட்ஜ்க்கு எதிர்புறம் இருந்த கூண்டில் நின்று கையெழுத்து போட்டனர். சரி இங்கு இருப்பவர்கள் வேடிக்கை பார்க்கும் கூட்டம் போல, நாம் அங்கே நிற்போம் என நகர்ந்தேன்.  அங்கே சென்ற பதினைந்து நிமிடத்தில் மொத்த கூட்டமும் களைய நான் மட்டும் நின்றிருந்தேன். பிறகு தான் சோதனையே, இப்பொழுது முன் வாசல் முறை போல. அங்கிருந்தவர்கள் உள்ளே அழைக்கப்பட்டனர். இது என்னடா கொடுமை என்று அங்கே ஓடினேன். இம்முறை கூட்டம் உஷாராகி வழி விட மறுக்க கடைசி இடமே கிடைத்தது. கூட நின்றவரிடம் இரண்டு கூட்டத்திற்கும் என்ன வித்தியாசம் என்று கேட்டேன். அவர் பின் வாசல் கொலை மற்றும் பிற வழக்குகளில் இருப்பவர்கள் தினமும் கோர்ட்டில் கையெழுத்திட வருபவர்கள் , இந்த கூட்டம் மற்ற பொது வழக்கு விசாரணைக்கு வருபவர்கள் என்றார்.

நேரம் அதிகரிக்க கூட்டம் குறைய தொடங்கியது. என் முறை வந்த போது கம்பெனி பெயருடன் என் பெயரை சேர்த்து சொன்னார்கள், கூட்டத்தை விலக்கிக்கொண்டு உள் நுழைந்தேன். முதலில் ஒரு முறை அறையை நோட்டமிடலாம் என்று ஜட்ஜ், டைப் அடிக்கும் பெண்மணி, அவருக்கு கீழ் இருந்த பெண்மணி, தவாளி, உட்கார்ந்திருந்த வக்கீல்கள் என்று சுற்றி பார்த்து திரும்பவும், ஜட்ஜ்க்கு கீழே இருந்த பெண்மணி 8-1 வாய்தா என சொல்ல ஒன்றும் புரியாமல் அவரை பார்க்க, மறுபடியும் சொன்னார். நான் எதும் சொல்லாமல் அவரையே பார்க்க, அவர் மறுபடியும் வாய்தாங்க  என்றார். என் பின்னாடி இருந்தவர் என்னை சரி என்று சொல்லிவிட்டு பின்னாடி வாப்பா என்று காதில் கிசு கிசுக்க, நான் அந்த பெண்மணியிடம் ஓகே என்று விட்டு பின்னால் நகர கோர்ட் மொத்தமும் சிரித்தது. ஒன்றும் புரியாமல் முழிக்க ஒருவர் தலையிலடித்துக்கொண்டு வாய்தா ன்னு சொன்னா வந்துரனும் என்றார். போயிட்டு அந்த தேதியில வாங்க என்றார். என்னடா இது நம் நினைப்பிற்கு மாறாக நடக்கிறதே என்று வெளியில் வந்து விட்டேன்.

இப்படியாக ஆறு முறை வாய்தாவிலேயே முடிந்து போனது. இறுதியாக கடந்த திங்கட்கிழமை வரச்சொன்னார்கள். எப்படியும் வாய்தா என்ற முடிவில் தான் சென்றேன். அன்றைக்கு வழக்கத்தை விட காத்திருந்தேன். உணவு இடைவேளை வந்த பிறகு தான் தெரிந்தது எங்களுடைய கேஸ் கட்டை கோர்ட்டில் தொலைத்து விட்டார்கள் என்று. இப்படியும் நடக்குமா (எனக்கு மட்டும் நடக்கும்) என நினைத்துகொண்டு இருக்க ஜூனியர் சாப்பிட்டு விட்டு வரச்சொன்னார். சாப்பிட்டு விட்டு வர அவரோ நாளைக்கு வாங்க என வழி அனுப்பி வைத்தார்.  அடுத்த நாள் கடுப்பிலேயே போய் நின்றேன். ஜூனியர் என்னிடம் வந்து வழக்கம் போல அறையின் முன்புறமாக நிற்க சொல்ல கோபம் வந்ததும் "எப்படியும் வாய்தா தான் இதுல முன்னாடி நின்னா என்ன பின்னாடி நின்ன என்ன" என்று கேட்க தோன்றி நாகரிகம் கருதி அமைதியாக நின்றேன். வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

மதியம் ஒரு மணி வரை அழைப்பு வராததால், சரி கேஸ் கட்டு இன்னும் கிடைக்க வில்லை போல என்று என்னும்போதே அழைப்பு வர எதுவுமே சொல்லாமல் ஜட்ஜ்க்கு கீழ் இருக்கும் பெண்மணி பார்த்துக்கொண்டிருக்க, என்னை கண்டு கொள்ளாமல் அடுத்தவரை அழைத்தார். சரி இதுவும் எதோ புது முறை போல என நினைத்துக்கொண்டு வெளியேறினேன். ஜூனியர் வந்து சாப்பிட போகாமல் ஒரு அரை மணி நேரம் காத்திருங்கள் நான் வந்து விடுகிறேன் என்று கூறி சென்றார்.  வெறுப்பில் வேடிக்கை பார்க்கலாம் என நின்றால் கால் வலிக்க, வெளியில் இருந்த திண்ணையில் சென்று அமர. அங்கு ரிமாண்டுக்கு வந்த கைதிகள் வேறு பலத்த பாதுகாப்புடன் இருக்க, ஒரு ஓராமாக உட்காந்தேன். சரியாக இரண்டு மணிக்கு அழைக்க நானும் வாய்தா என்ற முடிவிலேயே சென்றேன். ஆனால் கோர்ட் பெண்மணி என்னை கூண்டில் ஏறி நிற்க சொன்னார். பதட்டத்தில் ஏறி நின்றேன்.

"சத்தியமாக" என்று சொல்லுமாறு என்னிடம் சொல்லப்பட, எங்கே பகவத் கீதையை காணோம் என்ற ஏமாற்றத்தில் அப்படியே பிழையில்லாமல் சொல்லிவிட்டு நின்றேன். பிறகு ஜட்ஜ் ஒவ்வொரு கேள்வியாக பொறுமையாக கேட்க நானும் பதில் சொல்ல அவருக்கு அருகில் இருந்த டைப் ரைட்டர் ஒரு பேப்பரில் நான் சொன்னதை அப்படியே அடித்து அதில் கையெழுத்து போட்டுவிட்டு போக சொன்னார்கள். நானும் கூண்டை விட்டு இறங்கி கையெழுத்து போட செல்ல, ஜூனியர் தடுத்தார். மறுபடியும் கையெழுத்து போட சொல்லி அழைப்பு வர, நான் செல்ல ஜூனியர் தடுக்க, கடுப்பாகி அவரிடம் போகவாங்க என்று  கேட்டேன். அவரோ வெளியில் நில்லுங்க என்றார். வெளியில் நிற்கும்போது ஜூனியர் வந்து பாராட்டினார். நன்றாக தடுமாறாமல் பதில் சொன்னதாக. சரி கையெழுத்து எப்ப போட பசிக்குதுங்க எனும்போதே தவாளி வந்து நின்றார். அவரிடம் ஜூனியர் இருபது கொடுக்கச்சொல்ல, இதற்கு தானாடா இவ்வளவு என்று அலுத்துக்கொண்டே பர்சில் கைவிட ஒரே ஒரு ஐம்பது மட்டும் பல்லிலத்தது, அவரும் பல்லை இளித்துக்கொண்டே வாங்கிக்கொண்டார். இவ்வாறாக என் முதல் அனுபவம் முற்றுப்பெற்றது. இதில் நடந்த சில சுவராஸ்ய தகவல்களை அடுத்து பகிர்கின்றேன்.

Feb 3, 2014

RBI - 2005க்கு முன்பு அச்சிடப்பட்ட நோட்டுக்கள் புழக்கத்திலிருந்து திரும்பப்பெறப்படுகின்றன.


நமது மத்திய வங்கி கடந்த 2005ம் ஆண்டுக்கு முன்பு அச்சிடப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. அதற்கு தெரிவிக்கப்பட்டுள்ள காரணம் 2005க்கு முன்பு அச்சிடப்பட்ட தாள்களில் அச்சிட்ட ஆண்டு கிடையாது. அதற்கு பின்பே இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டது. 

வரும் மார்ச் 31, 2014 க்கு பின்பு இந்த தாள்கள் முழுமையாக புழக்கத்தில் இருந்து திரும்பப்பெறப்படுகின்றன. ஏப்ரல் 1, 2014 முதல் இந்த தாள்களை எந்த வங்கிகளும் கொடுத்து புதிய தாள்களாக மாற்றிக்கொள்ளலாம். மேலும் ஜூலை 1, 2014க்கு பிறகு வாடிக்கையாளராக இல்லாத வங்கிகளில் பத்து தாள்களுக்கு அதிகமாக மாற்ற விரும்புபவர்கள் தங்களின் சுய அடையாளம் மற்றும் குடியிருப்பு முகவரிக்கான சான்றுகளுடன் மாற்றிக்கொள்ளலாம்.

ரூ.50,000/- மேல் பணப்பரிமாற்றம் செய்பர்வகள் தங்களுடைய PAN கார்ட் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் பத்து லட்சத்திற்கு அதிகமாக பரிவர்த்தனை செய்பவர் பற்றிய விபரம் நிதி புலனாய்வு பிரிவிற்கு தெரிவிக்கப்படும்.  பண மாற்று பரிவர்த்தனையின் போது ஐந்துக்கும் அதிகமான கள்ள நோட்டுக்கள் இருந்தால் காவல் நிலையத்தில் FIR பதிவு செய்யப்பட வேண்டும்.

மார்ச் 31 க்கு பிறகும் இவற்றை மாற்றிக்கொள்ள வங்கிகள் அனுமதிக்கும் எனவே பயப்பட தேவையில்லை. ஆனாலும் அதற்கு முன்பாகவே மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திரும்ப பெறுவதற்கான காரணங்கள்:

1. பாதுகாப்பு:
    2005க்கு முந்தைய தாள்கள் அதற்கு பிறகு அச்சிடப்பட்ட தாள்களை விட பாதுகாப்பு அம்சங்கள் குறைவானவை. மிக அதிகமான போலித்தாள்கள் 2005க்கு முந்தையதன் நகல்களே.

2. கருப்பு பணத்தை ஒழிப்பது:
       பணத்தின் மதிப்பு என்பது பரிமாற்றத்தில் இருக்கும் வரை மட்டுமே. எனவே புழக்கத்தில் இருந்து அவை அகற்றப்படும்போது அவற்றின் மதிப்பு பூஜ்யம்தான். மேலும் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணம் கண்டிப்பாக மாற்றப்பட்டே ஆகவேண்டும்.

3. பணப்பதுக்கத்தை ஒழிப்பது:
     இந்த திட்டத்தின் மூலம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணம் தானாக சந்தைக்கு கொண்டு வரப்படும். ஆனால் அதை கண்டிப்பாக நடைமுறை படுத்துவதன் மூலமே சாத்தியம்.


Jan 24, 2014

யானைக்கு ஒரு காலம்?


யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழமொழி. நாளைக்கு எவ்வளவு பொன் கொடுத்தாலும் யானை இருக்காது இது புது மொழி. ஒரு காலத்தில் மாவீரன் அலெக்ஸாண்டரின் படைகளையும், கொடுங்கோலன் தைமூரின் படைகளையும் பயமுறுத்திய இந்திய யானைகள் இன்று ரேசன் அரிசிக்காக ஊருக்குள் வந்து உயிரை விடுகின்றன. மனிதனின் பணத்தாசைக்கும் இடத்தாசைக்கும் இரையாவதில் யானைகளும் ஒன்று.

என்னுடைய கிராமம் கோவையில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. நினைவு தெரிந்த வரையில் நான் எங்கள் ஊரில் யானைகளை பார்த்ததும் இல்லை அவற்றை யாரும் பார்த்ததாக சொல்லி கேட்டதும் இல்லை. அதிக பட்சம் கேள்விப்பட்ட/பார்த்தவர்களால் சொல்லப்பட்ட மிருகங்கள் என்றால் காட்டு நாய், காட்டு பன்றி மற்றும் அரிதாக தென்பட்டதாக சொல்லப்பட்ட மான்கள். இவையெல்லாம் கடந்த பத்து/பதினைந்து ஆண்டுகளுக்கு முந்தையவை. அதற்கு பிறகு யானைகள் அதிகம் ஊருக்குள் தென்பட ஆரம்பித்தன. அதிகம் ரயில்களில் அடிபட்டும் இறக்க ஆரம்பித்தன. இவற்றின் பின்னணி அன்றைக்கு தெரியவில்லை. ஏதோ கேரளாவில் உணவில்லை என்பதால் இங்கு வருவதாகவும், இவை காட்டு யானைகளே அல்ல சர்க்கஸ் யானைகள் அதனால் தான் மனிதர்களை துன்புறுத்துவதில்லை என கதைகள் யானைகள் கூடவே கிளம்பின.

முதன் முதலில் ரியல் எஸ்டேட்காரர்கள் வந்தனர். அவர்களின் ஆசை வார்த்தைக்கு விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை விற்றனர். இதில் பாதிக்கப்பட்டவை முயல்களும் காட்டுப்பன்றிகளும் தான். இன்றைக்கு இந்த மிருகங்கள் இருந்த அடையாளம் துளி கூட கிடையாது.  விளை நிலங்கள் வீடுகளாக மாறிய போதுதான் யானைகள் ஊருக்குள் வந்தன. முதலில் ஒன்று இரண்டாக வந்தவை அதிகபட்சம் 20 யானைகள் வரை உணவுக்காக ஊருக்குள் வந்தன. அப்போது வரை எந்த தோட்டங்களுக்கும் மின்சார வேலிகள் கிடையாது. முதன் முறையாக ஒரு தனியார் கல்லூரி ஒன்று 500 ஏக்கருக்கு மேல் ஆரம்பிக்கப்பட்டது. அதுவும் வனப்பகுதி என்று அறிவிக்கப்பட்ட எல்லைக்குள். இந்த இடத்தை முழுக்க சுற்றி முள் வேலி கட்டப்பட்டது.  யானைகள் மொத்தமாக கல்லூரிக்குள் இடம் பெயர்ந்தன. இது தொலைக்காட்சி செய்திகளில்  கூட இடம் பெற்றது.    

பின்னர் கல்லூரியின் முள் வேலி மின்சார மயம் ஆனது கூடவே அகளிகளுடன்.  இதனால் அந்த யானைகள் கிழக்கே நகர ஆரம்பித்து தேசிய நெடுஞ்சாலைகளை அடிக்கடி கடந்தன. அங்கிருந்தும் கிழக்கில் துரத்தப்பட்டு ரயில் தண்டவாளங்களை கடக்க முற்பட்டு உயிரை துறந்தன. இப்படி அதனுடைய இடத்தை பறித்துக்கொண்டு அவை துரத்தி அடிக்கப்பட்டன. பின்னர் கல்லூரிக்கு அருகில் சுமார் 1000 ஏக்கர் ரியல் எஸ்டேட்காரர்களால் வளைக்கப்பட்டு  golf கோர்ட்களும் வீடுகளும் வந்து ஒரு மலையே மறைக்கப்பட்டது. இதே போல மேற்கு தொடர்ச்சி மலையின் ஓரங்கள் முழுவதும் கல்லூரிகளாகவும், சாமியார் மடங்களாகவும் ஆனது. இன்றும் இந்த இடங்கள் தமிழ்நாடு வன துறையின் வலைத்தளத்தில் வனப்பகுதிகளாக காட்டப்படுகின்றன. இப்படி யானைகள் மற்றும் காட்டு விலங்குகளின் வாழ்விடங்கள் மற்றும் வழிகளை தடுக்கவும் அவை ஊருக்குள் வந்து உயிரை விடுகின்றன.

மொத்தம்  3800 முதல் 4800 யானைகள் நீலகிரி வனச்சரகத்தில் வாழ்கின்றன. கடந்த பத்து வருடங்களில் மட்டும் 298 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில் ஒன்று மட்டுமே முதுமையின் காரணமாக உயிரை விட்டுள்ளது. மற்றவை பசி, வேட்டை, நோய், மின்சார வேலிகள் மற்றும் ரயிலில் அடிபட்டும் உயிரிழந்துள்ளன.  ஐந்து வருடங்களுக்கு முன்பு தண்டவாளத்தை கடந்த 3 யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்தன. அவற்றில் ஒன்று கர்ப்பிணி, விபத்தில் குட்டியை ஈன்றது. அதுவும் இறந்தே பிறந்தது. இப்படி அவற்றின் வாழ்விடத்தை பறித்துக்கொண்டு அவற்றின் உயிர் இழப்பிற்கும் காரணமாக உள்ளோம் குற்ற உணர்வே இல்லாமல்.



வன இலாகா என்பது வன உயிரினங்களுக்கும் வன பகுதிகளின் பாதுகாப்பிற்கும் செயல்படும் அமைப்பு. இங்கள்ள மற்ற நாடுகளில். இங்கே வன பகுதிகளில் குடியிருப்புகளுக்கும் கேளிக்கைகளுக்கும் அனுமதி அளித்து விட்டு அங்கிருப்பவர்களின் பாதுகாப்பிற்காக வன விலங்குகளை துரத்திக்கொண்டு இருப்பவர்களை என்னவென்று சொல்வது. நிலத்தில் உள்ளதில் பெரிய மிருகம் யானை என்று படித்ததை இன்றைக்கு இப்படி மாற்றிக்கொள்ளலாம் நிலத்தில் உள்ள பெரிய மிருகம் யானையை அழித்த மனிதனே பெரிய மிருகம்.

Jan 1, 2014

தக்கன பிழைத்து வாழ்தல் (Survival of the fittest)

இந்த தளத்தை தொடங்கி இன்றுடன் ஓராண்டு முடிவடைகிறது. ஒரு வருடத்தில் நான் எழுதியது வெறும் 26 பதிவுகளே. கடந்த பல ஆண்டுகளாக வாசிப்பவனாக மட்டும் இருந்து வந்தேன், ஆனால் ஆறு மாதங்கள் வீட்டில் இருக்க வேண்டிய கட்டாயத்தினால் எழுதும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். சென்ற ஆண்டு அனுபவித்த வலி, பட்ட கஷ்டங்கள் மிக அதிகம். ஒரே சந்தோசம் என் மகள். Survival of the fittest என்ற பதத்தின் படி கடந்த ஆண்டு (பிழைத்து) கடந்து விட்டேன். இந்த ஆண்டை மிகுந்த தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்ள போகிறேன். வாழ்க்கையை புதியதாக ஆரம்பிக்கும் எண்ணங்களுடன் இன்றைய நாளை ஆரம்பிக்கின்றேன்.