Jan 24, 2014

யானைக்கு ஒரு காலம்?


யானை இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழமொழி. நாளைக்கு எவ்வளவு பொன் கொடுத்தாலும் யானை இருக்காது இது புது மொழி. ஒரு காலத்தில் மாவீரன் அலெக்ஸாண்டரின் படைகளையும், கொடுங்கோலன் தைமூரின் படைகளையும் பயமுறுத்திய இந்திய யானைகள் இன்று ரேசன் அரிசிக்காக ஊருக்குள் வந்து உயிரை விடுகின்றன. மனிதனின் பணத்தாசைக்கும் இடத்தாசைக்கும் இரையாவதில் யானைகளும் ஒன்று.

என்னுடைய கிராமம் கோவையில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது. நினைவு தெரிந்த வரையில் நான் எங்கள் ஊரில் யானைகளை பார்த்ததும் இல்லை அவற்றை யாரும் பார்த்ததாக சொல்லி கேட்டதும் இல்லை. அதிக பட்சம் கேள்விப்பட்ட/பார்த்தவர்களால் சொல்லப்பட்ட மிருகங்கள் என்றால் காட்டு நாய், காட்டு பன்றி மற்றும் அரிதாக தென்பட்டதாக சொல்லப்பட்ட மான்கள். இவையெல்லாம் கடந்த பத்து/பதினைந்து ஆண்டுகளுக்கு முந்தையவை. அதற்கு பிறகு யானைகள் அதிகம் ஊருக்குள் தென்பட ஆரம்பித்தன. அதிகம் ரயில்களில் அடிபட்டும் இறக்க ஆரம்பித்தன. இவற்றின் பின்னணி அன்றைக்கு தெரியவில்லை. ஏதோ கேரளாவில் உணவில்லை என்பதால் இங்கு வருவதாகவும், இவை காட்டு யானைகளே அல்ல சர்க்கஸ் யானைகள் அதனால் தான் மனிதர்களை துன்புறுத்துவதில்லை என கதைகள் யானைகள் கூடவே கிளம்பின.

முதன் முதலில் ரியல் எஸ்டேட்காரர்கள் வந்தனர். அவர்களின் ஆசை வார்த்தைக்கு விவசாயிகள் தங்கள் விளை நிலங்களை விற்றனர். இதில் பாதிக்கப்பட்டவை முயல்களும் காட்டுப்பன்றிகளும் தான். இன்றைக்கு இந்த மிருகங்கள் இருந்த அடையாளம் துளி கூட கிடையாது.  விளை நிலங்கள் வீடுகளாக மாறிய போதுதான் யானைகள் ஊருக்குள் வந்தன. முதலில் ஒன்று இரண்டாக வந்தவை அதிகபட்சம் 20 யானைகள் வரை உணவுக்காக ஊருக்குள் வந்தன. அப்போது வரை எந்த தோட்டங்களுக்கும் மின்சார வேலிகள் கிடையாது. முதன் முறையாக ஒரு தனியார் கல்லூரி ஒன்று 500 ஏக்கருக்கு மேல் ஆரம்பிக்கப்பட்டது. அதுவும் வனப்பகுதி என்று அறிவிக்கப்பட்ட எல்லைக்குள். இந்த இடத்தை முழுக்க சுற்றி முள் வேலி கட்டப்பட்டது.  யானைகள் மொத்தமாக கல்லூரிக்குள் இடம் பெயர்ந்தன. இது தொலைக்காட்சி செய்திகளில்  கூட இடம் பெற்றது.    

பின்னர் கல்லூரியின் முள் வேலி மின்சார மயம் ஆனது கூடவே அகளிகளுடன்.  இதனால் அந்த யானைகள் கிழக்கே நகர ஆரம்பித்து தேசிய நெடுஞ்சாலைகளை அடிக்கடி கடந்தன. அங்கிருந்தும் கிழக்கில் துரத்தப்பட்டு ரயில் தண்டவாளங்களை கடக்க முற்பட்டு உயிரை துறந்தன. இப்படி அதனுடைய இடத்தை பறித்துக்கொண்டு அவை துரத்தி அடிக்கப்பட்டன. பின்னர் கல்லூரிக்கு அருகில் சுமார் 1000 ஏக்கர் ரியல் எஸ்டேட்காரர்களால் வளைக்கப்பட்டு  golf கோர்ட்களும் வீடுகளும் வந்து ஒரு மலையே மறைக்கப்பட்டது. இதே போல மேற்கு தொடர்ச்சி மலையின் ஓரங்கள் முழுவதும் கல்லூரிகளாகவும், சாமியார் மடங்களாகவும் ஆனது. இன்றும் இந்த இடங்கள் தமிழ்நாடு வன துறையின் வலைத்தளத்தில் வனப்பகுதிகளாக காட்டப்படுகின்றன. இப்படி யானைகள் மற்றும் காட்டு விலங்குகளின் வாழ்விடங்கள் மற்றும் வழிகளை தடுக்கவும் அவை ஊருக்குள் வந்து உயிரை விடுகின்றன.

மொத்தம்  3800 முதல் 4800 யானைகள் நீலகிரி வனச்சரகத்தில் வாழ்கின்றன. கடந்த பத்து வருடங்களில் மட்டும் 298 யானைகள் உயிரிழந்துள்ளன. இதில் ஒன்று மட்டுமே முதுமையின் காரணமாக உயிரை விட்டுள்ளது. மற்றவை பசி, வேட்டை, நோய், மின்சார வேலிகள் மற்றும் ரயிலில் அடிபட்டும் உயிரிழந்துள்ளன.  ஐந்து வருடங்களுக்கு முன்பு தண்டவாளத்தை கடந்த 3 யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்தன. அவற்றில் ஒன்று கர்ப்பிணி, விபத்தில் குட்டியை ஈன்றது. அதுவும் இறந்தே பிறந்தது. இப்படி அவற்றின் வாழ்விடத்தை பறித்துக்கொண்டு அவற்றின் உயிர் இழப்பிற்கும் காரணமாக உள்ளோம் குற்ற உணர்வே இல்லாமல்.



வன இலாகா என்பது வன உயிரினங்களுக்கும் வன பகுதிகளின் பாதுகாப்பிற்கும் செயல்படும் அமைப்பு. இங்கள்ள மற்ற நாடுகளில். இங்கே வன பகுதிகளில் குடியிருப்புகளுக்கும் கேளிக்கைகளுக்கும் அனுமதி அளித்து விட்டு அங்கிருப்பவர்களின் பாதுகாப்பிற்காக வன விலங்குகளை துரத்திக்கொண்டு இருப்பவர்களை என்னவென்று சொல்வது. நிலத்தில் உள்ளதில் பெரிய மிருகம் யானை என்று படித்ததை இன்றைக்கு இப்படி மாற்றிக்கொள்ளலாம் நிலத்தில் உள்ள பெரிய மிருகம் யானையை அழித்த மனிதனே பெரிய மிருகம்.

Jan 1, 2014

தக்கன பிழைத்து வாழ்தல் (Survival of the fittest)

இந்த தளத்தை தொடங்கி இன்றுடன் ஓராண்டு முடிவடைகிறது. ஒரு வருடத்தில் நான் எழுதியது வெறும் 26 பதிவுகளே. கடந்த பல ஆண்டுகளாக வாசிப்பவனாக மட்டும் இருந்து வந்தேன், ஆனால் ஆறு மாதங்கள் வீட்டில் இருக்க வேண்டிய கட்டாயத்தினால் எழுதும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டேன். சென்ற ஆண்டு அனுபவித்த வலி, பட்ட கஷ்டங்கள் மிக அதிகம். ஒரே சந்தோசம் என் மகள். Survival of the fittest என்ற பதத்தின் படி கடந்த ஆண்டு (பிழைத்து) கடந்து விட்டேன். இந்த ஆண்டை மிகுந்த தன்னம்பிக்கையுடன் எதிர் கொள்ள போகிறேன். வாழ்க்கையை புதியதாக ஆரம்பிக்கும் எண்ணங்களுடன் இன்றைய நாளை ஆரம்பிக்கின்றேன்.


Dec 25, 2013

எம் ஜி ஆர்


அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்குமே மக்கள் திலகம் எம் ஜி ஆர்  என்ற மந்திரப்பெயருக்கு அடிமையாக இருந்தவர்களில் / இருப்பவர்களில் நானும் ஒருவன். அதை சொல்வதில் பெருமை கொள்கிறேன். இன்றைக்கு இருக்கும்  பல அரசியல்வாதிகளுக்கு வாழ்வளித்தவர். அவர் இறக்கும்போது என் வயது 6. அவரை பற்றிய அறிமுகம் கிடைத்தது என் தந்தையின் மூலம் தான். அவருடன் சென்று பார்த்த அடிமைப்பெண் படம் இன்றும் நினைவில் உள்ளது. நினைவு தெரிந்த நாளில் பார்த்த ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கு பிறகு அவரை பற்றிய ஆர்வம் அதிகரித்து தகவல்களை தேடி பிடித்து படிக்க படிக்க பிரம்மிக்க வைத்தது.

இன்று வரை தமிழக அரசியல் அவரின் பெயரை சொல்லியே நடக்கிறது.  ஏன் மலேசிய தேர்தலில் கூட அவர் பெயர் பயன்படுத்தப்படுகிறது.  இத்தனைக்கும் மேல் அவர் பற்றிய புத்தகங்களை பற்றி படிக்கும்போது அவர் மிகச்சிறந்த மனிதராக இருந்துள்ளார். அவரின் வள்ளல் குணத்திற்கு ஈடு இணை யாரும் இல்லை.  நேற்றைக்கு கூட அவரின் 96 வது பிறந்த நாளுக்கு அஞ்சலி செலுத்த கூடியிருந்த கூட்டம் உணர்த்தும் அவரின் பெருமையை.  நான் கருத்து கூறி அவரின் பெருமையை யாருக்கும் உணர்த்த வேண்டிய நிலை இல்லை. 

பிடித்த படம்: நாடோடி மன்னன்
வியந்த படம்: கலை அரசி 
பிடித்த பாடல்: எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார்
இந்த நாட்டிலேசொந்த நாட்டிலே நம் நாட்டிலே (மலைக்கள்ளன்)



Nov 9, 2013

மழை!


மழையால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் அதிக சந்தோசம் அடைந்திருந்தால் நீங்களும் என்னை போன்றவர் தான். உடனே நீங்கள் படத்தில் காட்டுவது போல நனைந்துகொண்டே பாடுவது, நடப்பது என்பதல்ல என் மகிழ்ச்சி. அது ஒரு தனி சுகம். சிறு வயதில் இருந்து மழையில் நனைவது என்பதை விட அதனால் நடக்கும் செயல்களால் சந்தோசம் அடைந்தவன்.

ஐந்தாம் வகுப்பு வரை வீட்டுக்கு அருகில் இருந்த பள்ளியில் தான் படித்தேன். ஆனாலும் வீட்டுக்கு வருவது என்பது மாலையில் மட்டுமே. பள்ளிக்கு வெளியே ஆளுக்கு ஒரு குட்டி முள் செடியை பங்கு பிரித்து வைத்திருப்போம். தினமும் அதற்கு பாத்தி கட்டி சிறுநீர் விட்டு அதை வளர்ப்பது தான் போட்டி. ஒரு நாளைக்கு முடிந்த வரை நீர் ஊற்றி வளர்ப்போம். செடியோ மிக கஷ்டப்பட்டு வளரும், காரணம் சொல்லவே வேண்டாம்.  மழைக்காலத்தில் மட்டும் மகிழ்ச்சியாக இருக்கும், ஏனென்றால் நம் நீர் தேவைப்படாது. மேலும் அந்த காலத்தில் மட்டுமே பச்சை பசேலென வளரும்மற்ற நண்பர்களின் செடி கருக நம்முடைய செடி மட்டும் மழையால் வளர்வதில் ஒரு மகிழ்ச்சி. மேலும் ஊரின் தெற்குப்பக்கமாக இருக்கும் தோட்டத்தில் மாமரம் இருக்கும். மாங்காயை சாப்பிட வேண்டுமென்றால் கல்லால் அடிக்க வேண்டும், ஆனால் அது தோட்டாக்காரன் மருதனை எழுப்பி விடும். அவன் துரத்துவான் அல்லது திருப்பி கல்லால் அடிப்பான். சிறிது தைரியமானவர்கள் அல்லது ஓடததெரிரிந்தவர்கள்  மட்டுமே  செய்யும் காரியம் அது. மற்றொரு வகை மழையால் கீழே கிடக்கும் காய்களை பொறுக்குவது. நான் இரண்டாம் வகை. பள்ளி இடைவேளை நேரம் அல்லது மாலையில் வீட்டுக்கு வந்ததும் சட்டையை கழற்றி வைத்து விட்டு வெறும் பனியன் மற்றும் டவுசருடன் சென்று பொறுக்கும் வேலையை செய்ய வேண்டும். இது மழைகாலத்தின் முதல் மகிழ்ச்சி.

ஆறாம் வகுப்புக்கு எனது ஊரில் இருந்து பதினைந்து கீ.மீ தொலைவில் இருக்கும் ஆலாந்துறையில் சேர்ந்தேன். அந்த பகுதியிலேயே மிக பெரிய பள்ளி இது தான். இதை விட்டால் கோவை டவுன் பகுதியில் உள்ள பள்ளிகளில் தான் சேரவேண்டும். அதற்கு வீட்டில் தடா. ஆறாம் வகுப்பில் முதல் வாரத்திலேயே சந்தோஷம் மனதில் குடியேறி விட்டது. காரணம் பள்ளிக்கு அருகிலேயே ஆறு. உடன் தினமும் மதியம் சாப்பிடுவது என்பது அருகில் இருக்கும் கரும்பு / மஞ்சள் தோட்டங்களில் தான். வகுப்பறைகளும் மிக காற்றோட்டமாக இருக்கும். காற்றோட்டம் என்றால் ஜன்னல் கதவு என நினைத்துக்கொள்ள வேண்டாம். ஒரே ஒரு கதவில்லா வாசல் மட்டுமே, கூரைக்கும் சுற்று சுவருக்கும் மத்தியில் நான்கடிக்கு ஒன்றுமே இருக்காது. வெயில் காலத்தில் மட்டும் கொடுமையாக இருக்கும். மழைக்காலத்தில் எப்படி உட்காருவது என்று யோசிக்க வேண்டாம். பள்ளிக்கு விடுமுறை தான். அதுவும் சாதாரண மழைக்கே.  விடுமுறை விட்டால் நேராக ஆற்றுக்கு சென்று விளையாடுவது தான் முதல் வேலை. கன மழை காலங்களில் ஆற்றில் வெள்ளம் செல்வதை பார்ப்பதில் மற்றும் உடனே வீட்டுக்கு செல்வதில் ஒரு மகிழ்ச்சி

பள்ளி படிப்பு முடிந்து கல்லூரிக்கு நகரின் மையப்பகுதியில் இருந்த அரசு கல்லூரியில் சேர்ந்தேன். அங்கு இருந்த நேரத்தை விட தியேட்டர்களில் இருந்த நேரம் தான் அதிகம். எனவே அங்கு அதிகம் மழையை அனுபவித்ததில்லை. ஆனால் அங்கு இருந்த விளையாட்டு மைதானத்தில் மழைக்காலங்களில் தனியாக உட்கார்ந்திருப்பதும் ஒரு மகிழ்ச்சியான அனுபவமே.  கல்லூரி காலத்தில் டைப்ரைட்டிங் படிக்க பக்கத்து ஊரில் உள்ள நிறுவனத்தில் நண்பர்களுடன் சேர்ந்தேன். அப்பொழுது மாலை நேர மழைக்காலத்தை அங்கிருந்த கல்லூரி பெண்களை பார்ப்பதில் கழித்து கூட ஒரு வித மகிழ்ச்சியே.

பின்பு முதல் வேலைக்கு சேர்ந்த பின்பு சில வருடங்களை தோழியுடன் மழை  நேரங்களில் ஊரை சுற்றிய நாட்கள் மறக்க முடியாத மகிழ்ச்சியான தருணங்கள். இன்னமும் என்னுடைய பைக்கில் மழை நேரத்தில் செல்வதை ரசித்து செய்கின்றேன்.  I  am Happy....

Nov 8, 2013

தீபாவளி!


இருபது வருடங்களுக்கு முந்தைய தீபாவளியை இன்றைய நாளுடன் எந்த விதத்திலும் ஒப்பீடு செய்யவே முடியாத அளவுக்கு மலையளவு வளர்ந்துள்ளது.  அன்றைக்கு வெறும் 500 ரூபாயில் முடிந்த நாள் இன்றைக்கு 10,000 க்கு குறைவில்லாமல் தேவைப்படுகிறது.  புது துணியை எதிர்பார்த்து காத்திருப்பது, பட்டாசு வாங்கும் நாளை எதிர்பார்ப்பது என எல்லாமே எதிர்பார்ப்பில் கழிந்த நாட்கள் அவை. இன்றைக்கு தேவையான பணம் இருந்த போதிலும் எதிர்பார்ப்பு சுத்தமாக இல்லை.

முன்பு தீபாவளி என்பது பள்ளியின் விடுமுறை நாளை எதிர்பார்த்து ஆரம்பிக்கும். வீட்டில் புது துணி எப்போது எடுக்கப்போகிறார்கள் என்ற ஏக்கம் தொடங்கும். தீபாவளிக்கு பதினைந்து நாட்களுக்கு முன்புதான் புது துணி கிடைக்கும்.  அதை டெய்லரிடம் கொண்டு சென்றால் தீபாவளி அன்றைக்குத்தான் கிடைக்கும் என்று இடியை இறக்குவார். அம்மாவிடம் சொன்னால் அவரின் திட்டலில்தான் கொஞ்சம் முன்பே தருகிறேன் என்பார். ஆனாலும் அதிக தீபாவளி புது துணிகள் முந்தைய நாள் இரவு வரை கிடைக்குமோ கிடைக்காதோ என்று ஏங்க வைத்தே டெய்லர் தந்துள்ளார்.

அதேபோலத்தான் பட்டாசுகளும். பள்ளியின் அருகில் கிடைக்கும் விலை பட்டியல் மற்றும் ஊரில் கிடைக்கும் பட்டியல்களை கொண்டு பட்டாசுகளை முன்பே மலையளவு குறித்து வைத்தாலும் கடைசியில் கிடைப்பது என்னவோ கடுகளவு தான். அதுவும் அப்பா போனஸ் வந்தால்தான் பட்டாசு என்று சொல்லிவிடுவார். எனவே சில காலம் போனஸ் என்றால் என்னவென்றே தெரியாமலும், தெரிந்த பின்னர் எவ்வளவு என்ற எதிர்பார்ப்பிலும் கழிந்தது. பட்டாசு வாங்க ஊருக்கு அருகிலிருக்கும் FCI கிடங்கிற்கு அப்பா கூடிச்செல்வார். அது அரசாங்க கடை என்பதாலும், அங்கு விற்பனையில் இருப்பவர் அப்பாவிற்கு தெரிந்தவர் என்பதாலும், நினைவு தெரிந்த நாள் முதல் அந்த கடையில் மட்டுமே பட்டாசு வாங்கியுள்ளேன், இன்று வரை.

தீபாவளியின் அதிகாலை என்பது எண்ணை குளியலுடன் ஆரம்பிக்கும், அம்மா தங்கைக்கும் எனக்கும் நல்லெண்ணெய் தேய்த்துவிட அப்பா வைத்த சுடு தண்ணீரில் குளித்து விட்டு புது துணி உடுத்திக்கொண்டு முதல் சரத்தை கொடுத்து வைக்க சொல்வார். அதன் பின்னர் அவரும் குளியலை முடித்துக்கொண்டு சைக்கிளில் குல தெய்வம் கோவில், மாரியம்மன் மற்றும் பிள்ளையார் கோவில் என சென்று அங்கும் ஒவ்வொரு சரத்தை காணிக்கை வைக்க வேண்டும்.  பிறகு தான் மிச்சம் இருக்கும் வெடிகளை தொட வேண்டும் அவற்றை நண்பன் மோகனுடன் போட்டி போட கொஞ்சம் வெடிகள், பாட்டி வீட்டில் கொஞ்சம் வெடிக்க வெடிகள் என கணக்கு நீண்டு கொண்டே போகும்.  அதிலும் இரவில் வெடிக்கும் வெடிகள் தங்கைக்கும் மிச்சம் மீதி கார்த்திகை தீபத்திற்கும் கொடுத்து விட வேண்டும். ஆனாலும் அந்த நாளின் நினைவுகள் இன்றும் நீங்காமல் உள்ளன. 

வளர்ந்த பின்பு நண்பர்குலடன் சேர்ந்து கொண்டு கொண்டாடிய நாட்கள் மறக்க முடியாதவை.  ஊரின் மத்தியில் உள்ள அம்மன் கோவிலில் ஒரு புறம் நாங்களும் மறு புறத்தில் மற்றொரு நண்பர்களும் நின்று கொண்டு பட்டாசுகளை மேலே வீசிக்கொண்டும் ராக்கெட்டுகளை நிலத்தில் படுக்க வைத்தும் விடுவோம். ஆனால் யாருக்கும் எந்த காயமும் ஆனதில்லை, சில வாசல் கூரைகள் தீப்பிடித்ததை தவிர.

இவை மொத்தமும் அன்றைக்கு வெறும் 3000 ரூபாயில் முடிந்துள்ளன. இன்றைக்கு அது பல மடங்கு உயர்ந்திருந்தாலும் அந்த சந்தோசத்தை தருவதில்லை. எதிர்கலாத்தில் என் பெண்ணின் மூலம் அவை திரும்ப கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்/நம்பிக்கையில் நாளைய தீபாவளியை எதிர்நோகியுள்ளேன்.
  

Oct 9, 2013

குடி நாடு


சிறுசு முதல் பெருசு வரை எல்லோரும் வரையறையின்றி இன்றைக்கு சங்கமிக்கும் இடம் டாஸ்மாக்.  முன்பு பண்டிகைக்கு குடித்தவர்கள் இப்பொழுது காரணமே தேவைப்படாமல் எல்லா நாளும் குடிக்கின்றார்கள். இதில் வருத்தப்படும் விஷயம் இளம் வயதினரின் குடிப்பழக்கம். சந்தோசத்தையும் துக்கத்தையும் காரணம் காட்டி குடிக்கின்றனர். முன்பெல்லாம் குடிக்க காரணங்களாக வீட்டு பிரச்சனைகள், வேலை அல்லது கடன் பிரச்சனைகள் இருந்தன. இன்றைக்கு ஒருவர்  வேலை கிடைத்தாலும்,  வேலை போனாலும் குடிக்கின்றனர். குழந்தை பிறந்தாலும், வீட்டில் யாரவது இறந்தாலும் குடிக்கின்றனர். இந்த நிலையை ஏற்படுத்திய பெருமை முழுக்க திமுக மற்றும் அதிமுக வையே சேரும். 

இன்றைய சினிமாக்காரர்கள் குடிகாரர்களை மகா குடிகாரர்கள் ஆக்கும் பணியில் மிக தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெளியாகும் திரைப்படங்களில் குறைந்தபட்சம் ஒரு குடிக்கும் காட்சியாவதுஇடம் பெறுகிறது. மூன்று, நான்கு படங்கள் முழுக்க டாஸ்மாக்கிலேயே எடுக்கப்படுகிறது. அவையே மிகப்பெரும் வெற்றியடைகின்றன. இன்றைக்கு கதாநாயகன் குடிக்காதவனாக காட்டும் படம் என்பது மிக அரிது. படத்தின் trailer கூட குடிப்பதை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது.  படத்தில் இப்போது புகை பிடிக்கும்போது அல்லது மது அருந்தும்போது எச்சரிக்கை வாசகங்கள் காட்டப்படுகின்றன. சில படங்கள் முழுக்க இந்த வாசகங்கள் காட்டப்படுகின்றன. மதுவை சினிமாவும் காசாக்குகிறது.    

பள்ளி செல்லும் சிறுவர்கள் கூட இன்றைக்கு குடித்துவிட்டு வீடியோ/போட்டோ க்களை youtube/facebook ல் போட்டு பெருமை பட்டுக்கொள்கின்றனர். அரசும் குடிப்பதை ஊக்குவித்து வருமானம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறது. நேற்றைக்கு சாதாரண கடைகள் பிறகு பார் உள்ள கடைகள் என்றும் பின்பு elite பார் கடைகள் என்றும், இன்றைக்கு IMFL (இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மது) கடைகள் என்று பெருகிக்கொண்டே செல்கின்றது. அரசுக்கு வருமானம் இரண்டு வழிகளில் வருகின்றது. ஒன்று டாஸ்மாக் மது விற்பனை மற்றொன்று கடைக்கு வெளியில் போலீசை நிறுத்தி பண வசூல். இது உலகத்தில் எங்கேயும் நடக்காது. 

கடந்த ஐந்து வருட மது விற்பனை தமிழகத்தில் மட்டும் ரூ  77,820 கோடி, வெறும் 6800 விற்பனை மையங்களை கொண்டு இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. மலைக்க வைக்கும் தொகை. வேறு எந்த தொழிலிலும் ஈட்ட முடியாதது. மற்ற எல்லாவற்றையும் விட தமிழகம் மதுவால் முன்னிலை பெற்றுள்ளது. கடந்த வருடத்தில் கர்நாடகா 13,842 கோடிக்கும், ஆந்திரா 14,846 கோடிக்கும், வெறும் 400 கடைகளை கொண்டுள்ள கேரளா கூட 7,860 கோடிக்கு விற்பனை செய்துள்ளது. ஆனால் தமிழகம் இக்காலத்தில் 22,000 கோடிக்கு விற்று முன்னிலை வகிக்கிறது. டாஸ்மாக் கொள்முதல் செய்வது வெறும் 10 நிறுவனங்களிடம் இருந்துதான். சராசரியாக 2,000 கோடியை இவை தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றன. இவற்றில் பெரும்பாலும் முன்னாள் மற்றும் இந்நாள் அரசியல்வியாதிகளால் அல்லது அவர்களின் பினாமிகளால் நடத்தப்படுபவை. 

சென்ற வருடத்தில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் என்று போலீசில் பிடிபட்டவர்கள் சுமார் 15,000 பேர். இவர்களிடம் அபராதமாக வசூலிக்கப்பட்டது ரூ 1,000 என வைத்துக்கொண்டாலும் அரசுக்கு வருமானம் ஒரு கோடி ஐந்து இலட்சம். சென்ற வருடம் நடந்த மொத்த விபத்துகளின் எண்ணிக்கை 63,909. இதில் இறந்தவர்கள் மட்டும் 15,080. காயம் அடைந்தவர்கள் சுமார் 78,000ம் பேர். இவர்கள் 50 சதவிகிதம் பேர் குடித்து விட்டு வாகனம் ஓட்டியவர்கள் என கொண்டால், அதாவது 39,000 பேர் (ஆனால் அரசின் இணைய தளம் வெறும் 15,000 பேர் மட்டுமே குடித்து விட்டு வாகனம் ஓட்டியதாக கணக்கு காட்டுகிறது) மருத்துவமனை சென்று சிகிச்சை பெற்று குறைந்த அளவாக/சராசரியாக ரூ. 3,000 செலவு செய்திருந்தால் அதன் மொத்த தொகை ரூ. 11.70 கோடிகள். ஆறு மாதங்களுக்கு முன்பு ஒரு தெரு நாய் குடித்து விட்டு காரை ஓட்டி வந்து என் மேல் மோதியதில் எனக்கு கால் உடைந்ததுடன் செலவு நான்கு லட்சம். எனவே 3,000 என்பது மிக குறைந்த தொகை. இப்படி எல்லா இடங்களிலும் பணப்புழக்கத்திற்கு காரணாமாக இருப்பது  டாஸ்மாக தான்.

இன்னும் பத்து வருடங்களில் அரசின் வருமானம் பெருகி விடும் கூடவே குற்றங்களும் பெருகும் ஆனால் அவற்றை தடுக்க காவலர்கள் இருக்கமாட்டார்கள்.

Oct 8, 2013

அரசு அலுவலக அனுபவங்கள்


வாழ்கையில் எல்லோருக்கும் ஏதோவொரு நாளின் நல்ல/கெட்ட நேரத்தில் ஏதேனும் அரசு அலுவலகத்தின் வாசலை மிதித்திருக்க வேண்டும். அது பதிவு அலுவலகம், போலீஸ், கோர்ட் அல்லது கோட்டை என வித விதமான அனுபங்கள் கிடைத்த இடமாக இருக்கலாம். சிலருக்கு அவற்றை நினைத்து சிரிக்க தோன்றும் சிலருக்கு எரிச்சல் மிஞ்சும். 

என்னை பொறுத்த வரை அரசு ஊழியர்களை பற்றி மிக மோசமான மன நிலையையே கொண்டுள்ளேன் (நல்லவர்கள் மன்னித்துக்கொள்ளவும்). எல்லோரும் அவர்களின் வேலைகளுக்கு தகுதியானவர்களே ஆனால் அவர்களின் செயலால் கீழான நிலைக்கு செல்கின்றனர். வேலை கிடைக்கும்வரை காட்டும் முனைப்பை, சேர்ந்த பின்பு காட்டுவதில்லை.  இங்கே என்னுடைய அனுபங்களை பகிர்கின்றேன்.

முதல் அனுபவம்: 

நான் பத்தாம் வகுப்பு முடித்து பதினொன்றுக்கு செல்லும்போது  சாதி சான்றிதழ் தேவைப்பட்டது. அதனால் அது சம்பந்தமாக ஊரில் இருந்த நண்பரிடம் கேட்க, அவர் நீண்ட விளக்கம் கொடுத்து, அதற்கான விண்ணப்பத்தையும் பூர்த்தி செய்து கொடுத்தார். முதலில் சந்தித்தது மணியக்காரர், நான் கண்ட முதல் அரசு அதிகாரி. அரசு அலுவலகம் பற்றிய எண்ணத்தை தவிடு பொடியாக்கியதும் இந்த இடம் தான். முன் புறம் தென்னை ஓலையில் வேய்ந்து மிக சாதரணமாக இருந்தது. என் இரண்டு நண்பர்களுடன் சென்றிருந்தேன்.  எங்களை பார்த்ததும் காரணத்தை கேட்டவர் விண்ணப்பத்தை வைத்து விட்டு அவருக்கு கார்பன் மற்றும் A4 பேப்பரும் வாங்கி வரச்சொன்னார். என் நண்பர்கள் இருவரும் அதை செய்ய தயாராக இருக்க என்னால் தடுக்க முடியாமல் அன்று செய்தேன். பலனாக அவர் சான்றிதழில் கையெழுத்து இட்டார்.

அதற்கு அடுத்தபடியாக ரெவென்யு இன்ஸ்பெக்டர். இவர் எங்கள் ஊரிலிருந்து 15 கிமீ தள்ளி இருந்தார். அதனால் அடுத்த நாள் அவரை சந்திக்க முடிவெடுத்து காலையிலேயே சென்றோம். காலை 10 மணிக்கு சென்றால் யாருமே இல்லை. 11 மணிக்கு அவரது உதவியாளர் மட்டும் வந்தார். எங்களை காத்திருக்க சொல்லிவிட்டு அவர் வேலையை  தொடங்கினார். மதியம் வரை இன்ஸ்பெக்டரை ஆளையே காணவில்லை. பசி வேறு வயிரை குடைய, வேறு வழியில்லாமல் அதற்கு பிறகு தாசில்தாரை சந்திக்க என்று வீட்டில் வாங்கிய பணத்தில் மதியம் சாப்பிட்டோம்.  பின்னர் வந்து அலுவலகம் முன்பு இருந்த மரத்தடியில் ஒரு குட்டி தூக்கம் போட, ஆபிசர் 3 மணிக்கு வந்தார். உடனே சென்று பார்த்தால் வேறு சிலருடன் பேசிகொண்டிருக்க, ஒரு அரை மணி நேரம் காக்க வேண்டி இருந்தது. எங்களை அவரே அழைக்க கால்கள் தரையில் படாமல் சென்றோம். அவர் உடனே கையெழுத்து போட்டுவிட்டு காசை கேட்க, நான் ஒன்றுமே இல்லை என்றேன் முந்திக்கொண்டு. அவரின் உதவி மதியம் சாப்பிட மட்டும் காசிருக்கா என்றார். கோவத்தில் பதிலுக்கு பதில் பேச உதவி அடங்கினார். இறுதியில் வெற்றி எங்களுக்கே. காசில்லாமல் கையெழுத்து. 

அடுத்து தாசில்தார், அவரை சந்திக்க அடுத்த நாள் சென்றேன்.அந்த இடம் மட்டுமே நான் சினிமாவில் பார்த்தது போல் இருந்தது. முதலில் விண்ணப்பத்தை பெற்றுக்கொண்டு பத்து நாள் கழித்து வரச்சொன்னார் ஒரு உதவி. பத்து நாளுக்கு பின்பு ஒரு வாரம் நடந்தும் சான்றிதழ் தரவில்லை. அவர் எதிர்பார்ப்பும் தெரிந்தது. ஆனால் அவருக்கு எந்த வகையிலும் உதவ நான் தயாரில்லை. எனவே எவ்வளவு நாட்கள் ஆனாலும் காத்திருப்பது என முடிவெடுத்தேன். ஒரு வாரம் இதே நிலை நீடிக்க தாசில்தாரை சந்திக்க முடிவெடுத்தேன். அவரை சந்திக்க உதவி தடுக்க மீறி சென்று சந்தித்து நிலைமையை விளக்கினேன். அவரும் எல்லோர் முன்னிலையிலும் கேட்டதாலோ என்னவோ உடனே சான்றிதழை கொடுக்க சொல்ல அங்கேயும் கையூட்டு கொடுக்காமல் வேலை நடந்தது.

நீங்கள் கையூட்டு கொடுத்த விவரத்தை அதாவது, எந்த அலுவலகத்தில் ,யாருக்கு, என்று, எவ்வளவு கொடுத்தீர்கள் போன்ற தகவல்களை WWW.IpaidBribe.COM ல் தெரிவிப்பதன் மூலம் ஊழலை வெளிக்கொணரலாம். (ஆனால் இப்படி பணத்தை வாங்கும் அசிங்கங்கள் இதெற்கு எல்லாம் கவலைப்பட மாட்டார்கள்)


இப்படி தொடக்கமே அமைந்ததாலோ என்னவோ இன்று வரை எப்பொழுதும் எந்த இடத்திலும் கையூட்டு கொடுக்க மனம் வருவதில்லை. தொடரும்.....



image courtesy www.searchandhra.com