Aug 23, 2013

தீவிரவாதி

 
"சகோ Timer Clock ரெடியா இருக்கா?" 

"ரெடி சகோ. நான் கன் பவுடர் பேக் பண்றேன்."

"சரி அப்படியே சல்பர் எடுத்துட்டு வந்துருங்க. ஆனா பார்த்து மிக்ஸ் பண்ணுங்க. தப்பானா நம்ம நியூஸ்ல வந்துருவோம்"

"கண்டிப்பா சகோ. நல்லாவே ட்ரைனிங் எடுத்திருக்கோம். தப்பாகாது"

"அதை மிக்ஸ் பண்ணினதும், அந்த கலவையோட பொட்டாசியம் க்ளோரைட் சேர்த்துடுங்க"

"சரிங்க சகோ. நான் பார்த்துக்கறேன் நீங்க போய் டீ குடிச்சுட்டு வந்துருங்க"

"இல்ல சகோ, மதியதுக்குள்ள ஒரு device ஆவது ரெடி பண்ணிடனும். முடிச்சுட்டே போயிடறேன்."

சரியாக மூன்று மணி நேரம் கழித்துவெளியில் வந்தவன் 

அருகிலிருந்த போலீஸ் ஸ்டேஷன் முன்பு நின்று கொண்டு இருவரிடம் பஞ்சாயத்து பேசிக்கொண்டிருந்த கான்ஸ்டபிளிடம் "என்ன சார் வாங்க டீ சாப்ட்டு வரலாம்." என்றான். அவரோ "இல்ல தம்பி போயிட்டு வா. சாயந்திரமா வேணா கடைக்கு போகலாம்" என்றதற்கு சிரித்து விட்டு நடையை கட்டினான்.

திரும்பி வந்தபோது அங்கிருந்தவன் ஒரு deviceஐ வெற்றிகரமாக முடித்து விட்டு அடுத்ததில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தான். இதேபோல இன்னும் 5 செய்ய வேண்டும், இதை பற்றிய தகவல்களையும் தலைமைக்கு தெரிவித்து விடவேண்டும்.

அடுத்த நாளில் எல்லாவற்றையும் முடித்து விட்டு, கூட இருந்தவனை  பத்திரமாக தலைமை இடத்திற்கு அனுப்ப வேண்டிய ஏற்பாடுகளை செய்தேன். இனி மூன்று இரவுகள்  நிம்மதியாக தூங்கி அந்த கூட்டத்திற்காக காத்திருக்க வேண்டும். இரவு சாப்பாடிற்கு சென்ற போது கான்ஸ்டபில் என்னை எதிர்பார்த்து நிற்பது போல தெரிந்தது. இன்றைக்கு ஏதும் தேறவில்லை என்பது அவர் நிற்கும் தோரணையில் தெரிந்தது.  அவரையும் உடன் அழைத்துச்செல்ல அவர் நிறைய கேள்விகள் கேட்க அவற்றை தவிர்க்கும் விதமாக பேச்சை குடியின் மேல் மாற்ற, காத்திருந்ததுபோல் குடிக்க வேண்டும் என்றார். "சரி நான் குடிக்கலை நீங்க போய் குடிச்சுட்டு வாங்க" என்றதும் காசை வாங்கிக்கொண்டு வேகமாக நடந்தார். மனிதர் திரும்பி வரும் சாத்தியம் குறைவு என்பதால் நான் சாப்பிட்டு முடித்து கிளம்பினேன்.

இது வரையிலான வாழ்க்கையை நினைத்து பார்த்துக்கொண்டே தூக்கத்தை எதிர்பார்த்து இருந்தேன். கனவில் சிறு வயதில் நண்பர்களுடனான விளையாட்டுக்கள், தங்கையுடனான சீண்டல்கள் வந்து சென்றன. கனவுகள் நீண்டு கொண்டே போனதால் விடியலும் நீண்டது. எழுந்தபோது மணி 11. சரி காலை சாப்பாடு செலவு மிச்சம் மதியம் சாப்பிட்டு விட்டு அப்படியே ஒரு எட்டு மாநாட்டு மேடையை பார்க்கலாம் என்று புறப்பட்டான். வெளியில் வந்ததும் வெயில் சுட்டது. சிறிது தூரம் சென்றதும் நம்ம கான்ஸ்டபில் எதிர்பட்டார்.

"என்ன சார் டூட்டிக்கு போகலயா" இது நான்.

"இல்ல தம்பி, நேத்து கொஞ்சம் ஓவரா போச்சு. காலைல எழுந்திருக்கல. இப்பதான் ஐயா கிட்ட லீவ் சொல்லிட்டு வந்தேன். நீங்க எங்க புறப்பட்டுடீங்க" என்றார்

"இல்லைங்க கடை வீதி வரை போகலாமுன்னு" என்ற பதிலுக்கு

"ரெண்டு கழிச்சு கட்சி மாநாடு நடக்கறதால வழி மாத்தி விடறாங்க. இப்பகூட என் குழந்தகள ஸ்கூல்ல விட ஊர சுத்தி வந்தேன். எதுக்கும் ஆட்டோ புடுச்சுக்கங்க " என்று அட்வைஸ் செய்தார்.

சரியென தலையாட்டிவிட்டு நடையை கட்டினேன். போய்விட்டு வந்தால் இனி வெளியே தலை காட்டாமல் இருக்க வேண்டும்.

மாநாட்டின் முந்தைய இரவில் டிவைஸ்களை எடுத்து பேப்பரில் சுற்றி அதனை ஒரு மஞ்சள் பையில் வைத்துவிட்டு, மற்ற உடைமைகளை எடுத்து ஒரு பெரிய பையில் போட்டு அடைத்து பக்கத்தில் இருந்த குளக்கரையில் வீசிவிட்டு வந்து தூங்கினேன்.

அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து  குளித்து வேஷ்டி சட்டைக்கு மாறினேன். அருகில் இருந்த ஆலயம் சென்று விட்டு வந்து, மற்ற அறைகளை ஒரு சுற்று பார்த்து எந்த தடயமும் இல்லை என்று உறுதியான பிறகு மஞ்சள் பை கையில் எடுத்துக்கொண்டு கதவை பூட்டிவிட்டு கிளம்பினேன்.

நகர எல்லைகள் எல்லாம் இப்போது காவலர்களால் நிரம்பி வழிகிறது. எனவே அலுவலக நேரத்தில் மக்கள் கூட்டத்தோடு கூட்டமாக நகரினுள் சென்று விடவேண்டும். அதற்கு தகுந்த நெரிசலான பேருந்தில் ஏறி போலிசின் பார்வையில் தப்பினேன். இனி மாநாட்டு திடலில் இருக்கும் போலீஸ் மட்டுமே. ஆனால் அவர்களையும்  கட்சிக்காரர்களுடன் சென்று ஏமாற்றி விட்டு மேடையின் அருகில் சென்று அமர்ந்தேன். கூட்டம் ஆரம்பிக்க இன்னும் நேரம் இருக்கிறது. அது வரை காத்திருக்க வேண்டும். தலைமையின் உத்தரவுப்படி நான் இன்றுடன் இறந்து விடவேண்டும். ஆனால் வாழும் ஆசை வற்புறுத்துவதால் இதை மட்டும் முடித்து விட்டு ஏதேனும் தூர கிராமத்திற்க்கு சென்று விடவேண்டும். கண்களை துலாவ விட்டேன் தூரத்தில் அட நம்ம கான்ஸ்டபில், அவரை தவிர்க்க பக்கத்தில் இருந்தவரிடம் பேச்சு கொடுத்துகொண்டு இருந்தேன். கான்ஸ்டபில் என்னை பார்க்கவில்லை, சென்றவர் மேடையின் பின்புறம் மறைந்தார்.

எப்படியும் இன்னும் அரை மணி நேரத்தில் கூட்டம் ஆரம்பித்து விடும். அதற்க்கு ஒரு மணி நேரம் கழித்து பையை வைத்து விட்டு நடையை கட்ட வேண்டியது தான். எப்படியும் ஐம்பது பேராவது சொர்க்கம் செல்வார்கள், அது போதும். இப்படியே ஒரு மணி நேரம் கழிந்திருக்கும். மேடையை பார்த்தேன் தேசிய தலைவர் ஒருவர் நம் நாட்டை பற்றிய பெருமைகளை பேசிக்கொண்டிருந்தார். எனக்கு கோபம் தலைக்கேறியது. எல்லாம் பொய் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். பைக்குள் கைவிட்டு டைமர் பட்டனை தேடி பிடித்து 5 நிமிடங்கள் வைக்க வேண்டும் என்ற தலைமையின் உத்தரவை 10 நிமிடங்கள் என மாற்றி வைத்து, பையை அப்படியே அருகிலிருந்த மரக்கம்பத்தின் ஓரத்தில் கிடத்தி விட்டு கிளம்பினேன்.

வேகமான நடையில் மாநாட்டின் வாயிலை எட்டிப்பிடிக்க எட்டு நிமிடங்கள் ஆனது. அங்கிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். நடப்பதை இங்கிருந்து வேடிக்கை பார்த்து விட்டு கிளம்பலாம். வாட்ச்சை பார்த்தேன் இன்னும் ஒரு நிமிடம் இருக்கிறது. அதற்கு பிறகு நான் தீவிர வாதியல்ல, உயிர் பிழைத்த சுதந்திர மனிதன். தூரத்தில் யாரோ வேகமாக என்னை நோக்கி வருவது தெரிந்தது. இது கான்ஸ்டபில் ஆச்சே இவர் எதுக்கு என யோசிக்கும் போதே தூரத்தில் இருந்து சத்தமாக பேசிக்கொண்டே வந்தார் "தம்பி உங்கள மதியம் இருந்து பார்க்கிறேன் பேசலாமுன்னு முடியல. இது உங்க" அப்பொழுது தான் பார்த்தேன் அது மஞ்சள் பை, அவ்வளவு தான் நேரம் முடிந்தது.

அடுத்த நாள் பத்திரிக்கைகளில்
"தீவிரவாதியை பிடிக்க முயன்ற காவலர் தீவிரவாதியுடன் குண்டு வெடிப்பில் பலியானார்:"


Aug 18, 2013

அப்பா


அன்புள்ள அப்பாவுக்கு,

எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும். இந்த கடிதத்தை நீங்கள் படிக்க வாய்ப்பே இல்லை என்று தெரிந்தும் இப்படி தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கின்றேன். அனுபவங்கள் என்னை மிகவும் பொறுமைக்காரனாக ஆக்கி உள்ளது. இருந்தும் உங்களைப்போல பொறுமையாக இருக்க முடிவதில்லை. 

நீங்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்று எதுவுமில்லை. அறிவுரையும் கூறியதில்லை. நான் உங்களை பார்த்தும் அருகில் இருந்தும் கற்றுக்கொண்டவை ஏராளம். உங்கள் மௌனம் மட்டும் கற்றுக்கொடுத்த பாடங்களை எந்த புத்தகமும் தந்ததில்லை. இருவருக்கும் பேச நிறைய விஷயங்கள் இருந்தும் என்றுமே அதிகம் பேசிக்கொண்டதில்லை. அவ்வாறு பேசாமல் இருந்த தருணங்களை இன்று நினைத்தால் மனது வலிக்கிறது.  

நான் பிறந்த போது தமிழகம் முழுக்க பந்த், அதனால் நீங்கள் சைக்கிளிலேயே 20km வந்து என்னை பார்த்ததாக அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன். சிறு வயதில் குடும்பமாக எல்லோரும் மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மன் கோவிலுக்கும், பண்ணாரி கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் புளி சாதத்துடன் நீங்கள் கொடுத்த வாழைப்பழ சுவையும், ஒவ்வொரு வருடமும் ஐந்து நாட்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்று அனுபவித்த எல்லையில்லா சந்தோசமும்  இன்னமும் மனதில் நிலைத்திருக்கின்றது. 

வீட்டில் யாருக்கும் எதையும் கேட்காமலே செய்பவர் நீங்கள். யாரும் கேட்காமலே என்னுடைய  10வது வயதிலேயே நீங்கள் தொலைக்காட்சி வாங்கி கொடுத்தீர்கள்.  காரணம் யார் வீட்டுக்கும் நான் தொலைக்காட்சி பார்க்க செல்லக்கூடாது என. இப்போதுதான் தெரிய வந்தது அப்போது நீங்கள் பெற்ற சம்பளம் 1000க்கும் குறைவு என்று.  

ஆசைப்பட்ட போதெல்லாம் என்னை சைக்கிளில் வைத்துகொண்டு சுற்றியுள்ளீர்கள். பக்கத்து ஊர் தியேட்டரில் திரைப்படம் பார்க்க முன் பக்க பாரில் வலிக்காமல் இருக்க துண்டை சுருட்டி உட்கார வைத்து கூட்டிப்போனது மறக்கவே முடியாத நினைவுகள். பின்னர் பெரியவனானதும் வசனம் புரியாமல் இருவரும் பார்த்த முதல் ஆங்கில பட அனுபவமான Cliff  Hangerக்கு புளி சாதத்தை கட்டிக்கொண்டு போனது கண்ணில் நிற்கிறது. இன்று அந்த பட வசனம் புரிந்து கொண்டு பார்க்கும் போது அதை உங்களிடம்  சொல்லி சிரிக்க நீங்கள் இல்லை.

நான் பள்ளி சென்ற நாள் முதல் மதிப்பெண் குறைவு என்று என்னை என்றுமே திட்டியதில்லை. அடுத்து என்ன படிக்க போகிறாய் என்று கேட்டதும் இல்லை. எல்லாவற்றையும் என் முடிவுக்கே விட்டவர். கல்லூரியில் இடம் கிடைக்காமல் தனியார் கல்லூரிக்கு நடையாய் நடந்து, கடைசியில் 10,000 பணம் சரி செய்து கட்ட வந்தபோது, நான் நம்பிக்கையுடன் அரசு கல்லூரியில் கிடைக்கும் என்று கூறிய இரு நாட்களில் இடம் கிடைத்து அவர்கள் பணம் கட்ட சொன்னபோது  நீங்கள் 10,000 கொடுக்க அவர்கள் வெறும் 10 ரூபாய் என்று சொல்ல நீங்கள் அடைந்த சந்தோசத்தினை உணர்ந்தேன். 

வேலைக்கு போனதும் சம்பளம் எவ்வளவு என்று கேட்கவில்லை. நானும் உங்களிடம் ஒரு நாளும் கொடுத்ததில்லை. நான் அதை சேமித்து தங்கைக்கு நகை எடுக்க கொடுத்தபோது நீங்கள் அடைந்த பூரிப்பை உணர்ந்தேன். மில்லுக்கு போக கஷ்டம் என்றபோது வேலையே விட்டுவிட்டு tempo வை என் பேரில் வாங்கினீர்கள். அப்போது நீங்கள் வங்கிக்கு கூப்பிடும்போதெல்லாம் நிறைய கோபப்பட்டிருக்கிறேன், அதற்கும் பொறுமையாகவே இருந்தீர்கள். இன்றைக்கு நினைத்தால் என் மீது கோபம் வருகிறது.

நண்பர்கள் எல்லோரும் பைக் வைத்திருக்கிறார்கள் என்று எனக்கு பிடித்த யமஹா பைக் வாங்கின போதும், அதை ஒரு நாள் தள்ளி நிறுத்த ஆசைப்பட்டு வண்டியுடன் விழுந்துவிட்டு நீங்கள் சிரித்த சிரிப்பு இன்றும் மறக்க முடியவில்லை. நான் வெளியூர் சென்ற போதெல்லாம் பைக்கை உங்கள் நண்பரிடம் கொடுத்து சர்வீஸ் செய்து வைத்தீர்கள், இன்றைக்கு பைக்கை துடைக்க கூட யாரும் இல்லை. ஆனால் ஒரு நாள் கூட என்னுடன் வண்டியில் வராமல் எல்லா இடங்களுக்கும் கடைசி வரை சைக்கிளிலேயே வந்தீர்கள். அன்றைக்கு வற்புறுத்தி உங்களை அழைத்து செல்லாதது இன்றும் என் நெஞ்சை வதைக்கிறது.

ஆறு வருடங்களுக்கு முந்தைய ஒரு வெள்ளிக்கிழமை நாளின் இரவில் நான் நண்பர்களுடன் வீட்டினுள் இருந்தேன். நீங்கள் வாசலில் நின்று பார்த்தீர்கள். அதுதான் கடைசி பார்வை என்று தெரியவில்லை. காலையில் எழுந்ததும் சொன்னார்கள் நீங்கள் மாட்டுக்கு புல் அறுக்க சென்ற இடத்தில் மயக்கம் அடைந்து விட்டீர்கள் என்று, அம்மாவும் நானும் எவ்வளவு வேகமாக வந்தும் உங்களை காப்பாற்ற முடியாமல் போனது. அடுத்த சில நாட்களில் தான் தெரிய வந்தது நீங்கள் நெஞ்சு வலிக்காக நம் ஊர் மருத்துவரிடமே காட்டிக்கொண்டிருந்தது. உங்களுக்கு என்றைக்குமே எங்களை கஷ்டப்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணம். அதை உங்கள் மரணத்திலும் நிறைவேற்றி விட்டீர்கள். ஆனால் உங்கள் மரணத்துக்கு பிந்தைய வாழ்க்கைதான் கஷ்டம் நிறைந்தது என்று நீங்கள் ஏன் அப்பா நினைக்கவில்லை. உங்கள் இருப்பு ஒன்றே போதும் எங்களுடைய எல்லா செயல்களும் சரியாக இருந்திருக்குமே.

இன்றைக்கு நீங்கள் இருந்திருந்தால் என்னுடைய வாழ்க்கை வேறு மாதிரி அமைந்திருக்கும். உங்கள் பெயருக்கு எந்த விதத்திலும் இழுக்கு வரக்கூடாது என நினைத்தேன். எனக்கு தெரியும் நீங்கள் இதற்கு கூட கோபப்பட மாட்டீர்கள் என்று.  என்னை எந்த குறையும் இல்லாமல் வளர்த்த உங்களுக்கு , எந்த விதத்திலும் நான் நன்றிக்கடனை திருப்பி செலுத்த முடியாமல் போய்விட்டது மேலும் நான் அதற்கு அருகதை அற்றவன் கூட. நான் இறைவனை கேட்டுக்கொள்கிறேன் அடுத்த பிறப்பிலும் உங்களுக்கே பிள்ளையாக பிறந்து உங்களுக்கு இப்போது கொடுக்க முடியாத சந்தோசத்தை கொடுக்க வேண்டும், ஏனென்றால் உங்கள்  இழப்பில் அதிகம் பாதிக்கப்பட்டது நான்தான். இனியாவது உங்களைப்போல வாழ நினைக்கிறன், ஏனென்றால் எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் அப்பா.

இப்படிக்கு,

உங்கள் அன்பு மகன்.

Google+ கருத்துக்களை blogger-ல் தெரிய வைக்க

இன்றைய பிளாக்கர் உலகில் ப்ளாக் எழுதுவதை விட கடினமானது கருத்துக்களை தெரிவிப்பது. நாம் என்னதான் மற்ற பிளாக்கரின் ப்ளாக்களை மாய்ந்து மாய்ந்து படித்து கருத்து தெரிவித்தாலும் நம்முடைய பாத்திரத்திற்கு என்ன கிடைக்கிறது என்பதே மிக முக்கியம். 

இப்பொழுது ப்ளாக்-களை Google+ லும் இணைத்துக்கொள்ளும் வசதி உள்ளதால், அதற்கான கருத்துக்களை அங்கேயே தெரிவிக்கவும் முடிகின்றது. இப்படி ஒரு ப்ளாக்-குக்கான கருத்துக்கள்  இரண்டு இடங்களில் தெரிவிக்க வசதி உள்ளது. 

இப்பொழுது Google+ கருத்துக்களை நம்முடைய பிளாக்கரில் இணைத்துக்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் வலைப்பதிவில் வாசகர்கள் இப்போது பகிரங்கமாக, அல்லது தனிப்பட்ட முறையில் Google+ இல் தமது வட்டங்களில் கருத்துக்களை தெரிவிக்கலாம். கருத்துக்களை பார்க்கும்போது போது, அவர்கள் வட்டங்களில் உள்ளவர்களின் கருத்துக்களை மட்டுமே காண முடியும். மேலும் இவை top comments என வகைப்படுதப்படுகிறது.  





சூனியம்


"சாமி நட்ட நடு ராத்திரியில எல்லாம் தெருவுக்கு போனா குடுகுடுப்பைகாரன் வருவான், நம்ம அவன பார்க்கக்கூடாது." குழந்தை பருவத்தில் அம்மா அடிக்கடி சொன்ன வார்த்தை. இதனால் ஒண்ணுக்கு போக கூட பயப்பட்டு பாயிலேயே போன நாட்கள் பல.

பள்ளிபருவத்தில் ஊர் நண்பர்களிடம் இதை பற்றி பேசப்பேச குடுகுடுப்பைக்காரன் அபரிமிதமான திறன் கொண்ட மனிதனாக வளர்ந்தான். அதாவது அம்மாவாசை இரவு 12 மணிக்கு சுடுகாட்டில் பிணத்தை வைத்து பூஜை செய்து அதற்கு பின்னர் வரும் ஞாயிறுகளில் ஊரை அம்மணமாக வளம் வருவான் என்றும், ஏதாவது ஒரு வீட்டின் முன் நின்று உடுக்கை அடித்து விட்டு சென்றான் என்றால் காலையில் திரும்பவும் வந்து குறி சொல்வான். இரவில் அவன் எதிரில் சென்றால் ரத்தம் கக்கி சாக நேரும் என ஏராள சக்தி படைத்தவனாக பேச்சின் மூலம் வளர்ந்தான்.

இதன் காரணமாக இரவில் பத்து மணிக்கு அப்புறம் கேட்கும் சத்தம் எல்லாம் குடுகுடுப்பைகாரன் சத்தமாகவே பட்டது. போதாதற்கு அம்மாவிடம்  காலையில் பக்கத்து வீட்டு அக்கா கு.கு காரனின் வருகையை பேசி என்னை பீதிக்குள்ளக்குவாள். 

விளையாட்டின் மூலம் சிறிது காலம் மறந்திருந்த சூனியம் டியூஷன் வடிவில் வந்தது. ஒன்பதாம் வகுப்பில் ஆங்கிலம் மிகவும் கசந்ததால் பக்கத்து ஊருக்கு டியூஷன் சென்றேன். ஏனென்றால் பல நண்பர்கள் அங்கேதான் சென்றனர். ஒரு வாரம் எந்த பிரச்சினையும் இல்லாமல் சென்றது. தினமும் எல்லோரும் ஒன்றாக சைக்கிளில் சென்று திரும்புவது வழக்கம். அன்றைக்கு ஏழரை ஆங்கில வடிவில் வந்தது. டியூஷன் வாத்தியாருக்கு என்னுடைய ஆங்கில புலமை தெரிய வந்ததால் அன்று ஒரு மணி நேரம் அதிகமாக வகுப்பு எடுத்தார். அதனால் நான் மட்டும் 9 மணிக்கு வீட்டுக்கு கிளம்பினேன். தனியாக செல்வதை பற்றி யோசிக்கவே இல்லை, நடுவில் இருக்கும் சுடுகாட்டை நெருங்கும்போதுதான் பயம் உச்சந்தலைக்கு உரைத்தது.  

சிறிது நேரம் நின்று யாராவது வருகிறார்களா என பொறுத்திருந்து பார்த்தால் யாரையும் காணோம். பஸ் மற்றும் பைக்காரர்கள் தான் வேகமாக சென்றனர். சரி கண்ணை திருப்பாமல் வேகமாக சென்று விடலாம் என முடிவெடுத்து சைக்கிளை மிதித்தேன். சுடுகாட்டை நெருங்கும்போது இதயம் வாய் வரை வந்து சென்றது.மனதில் பார்க்க கூடாது என நினைப்பதை தான் ஓரக்கண்ணால் பார்க்க தோன்றும் என்ற விதிப்படி ஓரக்கண்ணால் சுடுகாட்டை பார்த்தல் அங்கே ஒரு பிணத்தை எரித்து கொண்டு இருந்தார்கள்.அவ்வளவுதான் எனக்குள் என்ன ஏற்பட்டது என்று தெரியவில்லை. வேகம் என்றால் வேகம் பேய் வேகத்தில் சைக்கிளை மிதித்தேன். இரண்டே நிமிடத்தில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மனித நடமாட்டம் தெரிந்த ஊர் எல்லையில் தான் சைக்கிளை நிறுத்தினேன். தூக்கத்தில் எரிகிற பிணம் என்னை துரத்தியதில், அன்றோடு டியூஷன் அத்தியாம் முடிந்தது.

இளம் வயதில் நண்பர்களுடனான பேச்சில் ஊரில் யாரெல்லாம் சூனியம் வைப்பவர்கள், என்ன என்ன செய்கிறார்கள் என்ற ஆராய்ச்சி வெகு தீவிரமாக நடந்தது. இந்த காலகட்டத்தில் தான் கோட்டயம் புஷ்பநாத் நாவல்கள் அறிமுகம் ஆனது. அதில் வரும் பணிக்கர்கள் மற்றும் தனி பங்களாக்கள்   பற்றி உருவகம் செய்து தூக்கம் இழந்தேன். இரவில் கேட்கும் எல்லா சத்தங்களுக்கும் காரணம் குகு காரனே என்ற எண்ணம் ஏற்பட்டது. மார்கழி மாத அதிகாலை பஜனைகள் கூட அவனுடைய சத்தமே என்றது மனம். 

கல்லூரி காலத்தில் இவற்றை சோதனை செய்து பார்க்கும் அளவுக்கு மன திடம் ஏற்பட்டது. எல்லா நாள் இரவில் சுடுகாட்டுக்கு சென்றாலும் அது யாரும் இல்லாமல் அநாதையாகவே இருந்தது. குகு காரன் சத்தம் கேட்கும்போது எழுந்து வந்து பார்த்தால் அவன் மிக சாதரணமாக என்னை கடந்து போனான். மேலும் ஆராய்ந்ததில் குகு காரர்கள் என்பது குறி சொல்வதை தொழிலாக கொண்டுள்ள சமூகம் என தெரிந்தது. அவர்களை பற்றிய பயம் ஒழிந்து எந்த நேரத்திலும் எங்கும் செல்ல தைரியம் ஏற்பட்டது.

சும்மா இருந்த சூனியத்தை என் சித்தி இழுத்துக்கொண்டு வந்தார்கள், என்னுடைய தாத்தா இறந்த சமயத்தில் என் சித்தி குடும்ப சண்டையில் கோபத்தில் என் அப்பாவுக்கு சாபமிட, அதேபோல அவர் சில வருடம் கழித்து இறந்ததும் அம்மா ஜோசியம் பார்க்க  சித்தப்பா குடும்பம் செய்த சூனியத்தால் தான் இறந்தார் என்றதும் எனக்கு ஜோசியக்காரன் மேல்தான் கோபம் .வந்தது.  அதுவும் சூனியத்தை வீட்டினுள் வைத்து உள்ளனர் என்றதும் சிரிப்புதான் வந்தது. ஜோசியக்காரனுக்கு இது தொழில், அதற்காக அவன் ஏதாவது பொய்யை சொல்லியே ஆக வேண்டும். பிறகு ஏற்பட்ட பொருளாதார உயர்வின் காரணமாக இப்படிப்பட்ட பேச்சுக்கள் மறைந்தன.

காதலித்து வீட்டை எதிர்த்து கல்யாணம் செய்து கொண்ட பிறகு தனிக்குடித்தனம் என்று ஆனது. நன்றாக சென்ற வாழ்க்கையில் சூனியம் மனைவியின் வடிவில் திரும்ப வந்தது. தங்கையின் கணவருக்கு என் அம்மாவுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் என்னுடைய அம்மாவை பற்றி மிக நல்ல விதமாக என் மனைவியிடம் சொல்ல, அவளும் நல்லவற்றை தவிர கேட்டுக்கொண்டாள். பிறகு ஒவ்வொரு சண்டைக்கும் காரணம் என் அம்மா வைத்த சூனியம் என்று பேச ஆரம்பித்தாள்.  மேலும் மாமியாரும் சேர்ந்து கொண்டு கோவிலில் சாமியாடி சொன்னார், உங்கள் வீட்டுக்குள் உள்ளது என்று. எவனோ ஒரு சாமியடியாம் அவன் சொன்னால் நம்புகிற மக்கள், அவனைப்பற்றி அவன் வீட்டில் அல்லது பக்கத்து வீட்டு மனிதர்களிடம் கேட்டால் தெரியும் என மனதில் நினைத்துக்கொண்டேன். ஆனால் மனம் கோபப்படுகிறது சூனியம் இப்படி வாழ்க்கையை சூறையாடுகிறதே என்று.

இன்று பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு சென்று சுயமாகவே தன்னிலைக்கு திரும்பிவிட்டேன். இறுதி முடிவு எடுத்துவிட்டேன் நானே சூனியம் கற்று முதலில் எனக்கே வைத்துக்கொள்வது என்று. அதில் நான் பிழைக்காவிட்டால் பேப்பரில் என் மரண செய்தியை தெரிந்துகொள்ளுங்கள். பிழைத்துவிட்டால் அதே பேப்பரில் என்னுடைய கீழ்காணும் விளம்பரத்தை பார்த்து என்னிடம் வாருங்கள்.

 "உங்கள் தொழில் எதிரிகளுக்கு பில்லி சூனியம் வைக்க வேண்டுமா, பிடித்த பெண்ணை வசியம் செய்ய, அரசியலில் எதிரிகளுக்கு குட்டிசாத்தானை ஏவி விட வேண்டுமா அணுகவும் - மோகன் பணிக்கர் "