Aug 18, 2013

அப்பா


அன்புள்ள அப்பாவுக்கு,

எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும். இந்த கடிதத்தை நீங்கள் படிக்க வாய்ப்பே இல்லை என்று தெரிந்தும் இப்படி தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கின்றேன். அனுபவங்கள் என்னை மிகவும் பொறுமைக்காரனாக ஆக்கி உள்ளது. இருந்தும் உங்களைப்போல பொறுமையாக இருக்க முடிவதில்லை. 

நீங்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்று எதுவுமில்லை. அறிவுரையும் கூறியதில்லை. நான் உங்களை பார்த்தும் அருகில் இருந்தும் கற்றுக்கொண்டவை ஏராளம். உங்கள் மௌனம் மட்டும் கற்றுக்கொடுத்த பாடங்களை எந்த புத்தகமும் தந்ததில்லை. இருவருக்கும் பேச நிறைய விஷயங்கள் இருந்தும் என்றுமே அதிகம் பேசிக்கொண்டதில்லை. அவ்வாறு பேசாமல் இருந்த தருணங்களை இன்று நினைத்தால் மனது வலிக்கிறது.  

நான் பிறந்த போது தமிழகம் முழுக்க பந்த், அதனால் நீங்கள் சைக்கிளிலேயே 20km வந்து என்னை பார்த்ததாக அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன். சிறு வயதில் குடும்பமாக எல்லோரும் மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மன் கோவிலுக்கும், பண்ணாரி கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் புளி சாதத்துடன் நீங்கள் கொடுத்த வாழைப்பழ சுவையும், ஒவ்வொரு வருடமும் ஐந்து நாட்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்று அனுபவித்த எல்லையில்லா சந்தோசமும்  இன்னமும் மனதில் நிலைத்திருக்கின்றது. 

வீட்டில் யாருக்கும் எதையும் கேட்காமலே செய்பவர் நீங்கள். யாரும் கேட்காமலே என்னுடைய  10வது வயதிலேயே நீங்கள் தொலைக்காட்சி வாங்கி கொடுத்தீர்கள்.  காரணம் யார் வீட்டுக்கும் நான் தொலைக்காட்சி பார்க்க செல்லக்கூடாது என. இப்போதுதான் தெரிய வந்தது அப்போது நீங்கள் பெற்ற சம்பளம் 1000க்கும் குறைவு என்று.  

ஆசைப்பட்ட போதெல்லாம் என்னை சைக்கிளில் வைத்துகொண்டு சுற்றியுள்ளீர்கள். பக்கத்து ஊர் தியேட்டரில் திரைப்படம் பார்க்க முன் பக்க பாரில் வலிக்காமல் இருக்க துண்டை சுருட்டி உட்கார வைத்து கூட்டிப்போனது மறக்கவே முடியாத நினைவுகள். பின்னர் பெரியவனானதும் வசனம் புரியாமல் இருவரும் பார்த்த முதல் ஆங்கில பட அனுபவமான Cliff  Hangerக்கு புளி சாதத்தை கட்டிக்கொண்டு போனது கண்ணில் நிற்கிறது. இன்று அந்த பட வசனம் புரிந்து கொண்டு பார்க்கும் போது அதை உங்களிடம்  சொல்லி சிரிக்க நீங்கள் இல்லை.

நான் பள்ளி சென்ற நாள் முதல் மதிப்பெண் குறைவு என்று என்னை என்றுமே திட்டியதில்லை. அடுத்து என்ன படிக்க போகிறாய் என்று கேட்டதும் இல்லை. எல்லாவற்றையும் என் முடிவுக்கே விட்டவர். கல்லூரியில் இடம் கிடைக்காமல் தனியார் கல்லூரிக்கு நடையாய் நடந்து, கடைசியில் 10,000 பணம் சரி செய்து கட்ட வந்தபோது, நான் நம்பிக்கையுடன் அரசு கல்லூரியில் கிடைக்கும் என்று கூறிய இரு நாட்களில் இடம் கிடைத்து அவர்கள் பணம் கட்ட சொன்னபோது  நீங்கள் 10,000 கொடுக்க அவர்கள் வெறும் 10 ரூபாய் என்று சொல்ல நீங்கள் அடைந்த சந்தோசத்தினை உணர்ந்தேன். 

வேலைக்கு போனதும் சம்பளம் எவ்வளவு என்று கேட்கவில்லை. நானும் உங்களிடம் ஒரு நாளும் கொடுத்ததில்லை. நான் அதை சேமித்து தங்கைக்கு நகை எடுக்க கொடுத்தபோது நீங்கள் அடைந்த பூரிப்பை உணர்ந்தேன். மில்லுக்கு போக கஷ்டம் என்றபோது வேலையே விட்டுவிட்டு tempo வை என் பேரில் வாங்கினீர்கள். அப்போது நீங்கள் வங்கிக்கு கூப்பிடும்போதெல்லாம் நிறைய கோபப்பட்டிருக்கிறேன், அதற்கும் பொறுமையாகவே இருந்தீர்கள். இன்றைக்கு நினைத்தால் என் மீது கோபம் வருகிறது.

நண்பர்கள் எல்லோரும் பைக் வைத்திருக்கிறார்கள் என்று எனக்கு பிடித்த யமஹா பைக் வாங்கின போதும், அதை ஒரு நாள் தள்ளி நிறுத்த ஆசைப்பட்டு வண்டியுடன் விழுந்துவிட்டு நீங்கள் சிரித்த சிரிப்பு இன்றும் மறக்க முடியவில்லை. நான் வெளியூர் சென்ற போதெல்லாம் பைக்கை உங்கள் நண்பரிடம் கொடுத்து சர்வீஸ் செய்து வைத்தீர்கள், இன்றைக்கு பைக்கை துடைக்க கூட யாரும் இல்லை. ஆனால் ஒரு நாள் கூட என்னுடன் வண்டியில் வராமல் எல்லா இடங்களுக்கும் கடைசி வரை சைக்கிளிலேயே வந்தீர்கள். அன்றைக்கு வற்புறுத்தி உங்களை அழைத்து செல்லாதது இன்றும் என் நெஞ்சை வதைக்கிறது.

ஆறு வருடங்களுக்கு முந்தைய ஒரு வெள்ளிக்கிழமை நாளின் இரவில் நான் நண்பர்களுடன் வீட்டினுள் இருந்தேன். நீங்கள் வாசலில் நின்று பார்த்தீர்கள். அதுதான் கடைசி பார்வை என்று தெரியவில்லை. காலையில் எழுந்ததும் சொன்னார்கள் நீங்கள் மாட்டுக்கு புல் அறுக்க சென்ற இடத்தில் மயக்கம் அடைந்து விட்டீர்கள் என்று, அம்மாவும் நானும் எவ்வளவு வேகமாக வந்தும் உங்களை காப்பாற்ற முடியாமல் போனது. அடுத்த சில நாட்களில் தான் தெரிய வந்தது நீங்கள் நெஞ்சு வலிக்காக நம் ஊர் மருத்துவரிடமே காட்டிக்கொண்டிருந்தது. உங்களுக்கு என்றைக்குமே எங்களை கஷ்டப்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணம். அதை உங்கள் மரணத்திலும் நிறைவேற்றி விட்டீர்கள். ஆனால் உங்கள் மரணத்துக்கு பிந்தைய வாழ்க்கைதான் கஷ்டம் நிறைந்தது என்று நீங்கள் ஏன் அப்பா நினைக்கவில்லை. உங்கள் இருப்பு ஒன்றே போதும் எங்களுடைய எல்லா செயல்களும் சரியாக இருந்திருக்குமே.

இன்றைக்கு நீங்கள் இருந்திருந்தால் என்னுடைய வாழ்க்கை வேறு மாதிரி அமைந்திருக்கும். உங்கள் பெயருக்கு எந்த விதத்திலும் இழுக்கு வரக்கூடாது என நினைத்தேன். எனக்கு தெரியும் நீங்கள் இதற்கு கூட கோபப்பட மாட்டீர்கள் என்று.  என்னை எந்த குறையும் இல்லாமல் வளர்த்த உங்களுக்கு , எந்த விதத்திலும் நான் நன்றிக்கடனை திருப்பி செலுத்த முடியாமல் போய்விட்டது மேலும் நான் அதற்கு அருகதை அற்றவன் கூட. நான் இறைவனை கேட்டுக்கொள்கிறேன் அடுத்த பிறப்பிலும் உங்களுக்கே பிள்ளையாக பிறந்து உங்களுக்கு இப்போது கொடுக்க முடியாத சந்தோசத்தை கொடுக்க வேண்டும், ஏனென்றால் உங்கள்  இழப்பில் அதிகம் பாதிக்கப்பட்டது நான்தான். இனியாவது உங்களைப்போல வாழ நினைக்கிறன், ஏனென்றால் எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் அப்பா.

இப்படிக்கு,

உங்கள் அன்பு மகன்.

0 comments :

Post a Comment