Sep 19, 2013

ஒலிம்பிக்


நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் உலக விளையாட்டு திருவிழா. இதில் பதக்கம் பெறுவதை காட்டிலும் கலந்து கொள்வதே பெருமை என்று சொல்லி வளர்க்கப்பட்டவர்கள் நாம். திறமையான வீரர்கள் இருந்தும் அவர்களை அடையாளம் காணவே முடியாத அளவுக்கு திறமையான அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் உள்ள நாடு இது. அப்படியே சுய விருப்பத்தில் முன்னேறும் வீரர்களுக்கும் எந்த விதமான ஊக்கமோ, வசதியையோ ஏற்படுத்தி தராத/தர முடியாத நாடு. வென்ற பின்பு அவருக்கு பணத்தை கொடுத்து பாராட்டும் மக்கள் நிறைந்த நாடு இது.

ஒலிம்பிக் போட்டியை நடத்த உலக நாடுகள் போட்டியிடுகின்றன. அதை திறம் பட நடத்துவது என்பது பெருமையான விஷயம் என்றாலும் நடத்தும் நாட்டின் மற்றும் நகரத்தின் பொருளாதார, உள் கட்டுமான வளர்ச்சிக்கும் உதவும். அதிக பணம் செலவழித்து நடத்தவேண்டுமா என கூவும் மணி சங்கர் போன்ற ஆட்கள் ஏன் எதுவும் தெரியாதது போல பேசுகிறார்கள் என்பது முழு அரசியல்.

நாம் காமன்வெல்த் போட்டிகளை நடத்தவே திணறினோம்.  அதற்கு காரணம் குப்பை அள்ளுவதில் கூட ஊழல் மற்றும் திறமையற்ற அதிகாரிகளும் அரசியல்வாதிகளும்.  இதையே சிறந்த திட்டமிடல் மூலம் மிகவும் வெற்றிகரமானதாக மாற்றி இருக்க முடிந்திருக்கும். பழைய நேரு ஸ்டேடியத்தை புதுப்பிக்காமல் புதிய ஒன்றை கட்டியிருக்கலாம் அல்லது வேறு நகரத்தில் நடத்துவதன் மூலம் அதன் வளர்ச்சிக்கு உதவி இருக்கலாம்.  கட்டிய பாலமே பத்து நாளில் இடிந்து விழுந்தது நம் சாதனை.

1964 ஒலிம்பிக் போட்டியை நடத்தும் வாய்ப்பு ஜப்பானுக்கு கிடைத்தது. அதனை வெற்றிகரமாக நடத்திக்காட்டி இரண்டாம் உலக யுத்தத்தில் அழிந்து போயிருந்த நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு மாற்ற உதவியது. மற்றும் உலகிற்கு தன்னுடைய புதிய முகத்தினை காட்ட உதவியது.

1976 போட்டியை கனடா பெற்று மிக மோசமான திட்டமிடல் காரணாமாக $2 பில்லியன் நட்டம் அடைந்தது.

1984ல் லாஸ் ஏஞ்சல்ஸ் போட்டியானது பொது மற்றும் தனியார் பங்களிப்பில் மிகப்பெரிய இலாபம் ஈட்டியது.

1988 சியோல் போட்டியை அரசே நடத்தியதில் $300 மில்லியன் லாபம் அடைந்தது.

1992 பார்சிலோனா போட்டியானது மிக குறைந்த லாபமே அடைந்தாலும் அந்நகரத்தின் உள்  கட்டுமான வளர்ச்சிக்கு உதவியது.

2004 ஏதென்ஸ் போட்டியானது அந்நாட்டை கடன் நெருக்கடியில் தள்ளி மொத்த ஐரோப்பாவையும் பாதித்தது.

2008 பெய்ஜிங் போட்டியின் லாபம் பற்றிய உண்மையான தகவல்கள் கிடைக்கப்பெறவில்லை. எனினும் அந்நகர கட்டமைப்பு வளர்ச்சி பெற்றது. 

2012 இலண்டன் போட்டிகளோ கிழக்கு பகுதியின் வளர்ச்சிக்கு உதவியது. அவர்கள் லண்டன் லெகசி  2020 என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக நடத்தி உள்ளனர்.

2016 போட்டியினை நடத்த ரியோ டி ஜெனிரோ நகரம் தயாராகிக்கொண்டுள்ளது. தென் அமெரிக்காவில் முதல் முறையாக போட்டி நடை பெற உள்ளது.

மேல் உள்ள தகவல் படி சரியான திட்டமிடல் மூலம் வளர்ச்சிக்கு உதவலாம். உடன் வீரர்களுக்கும் உலகத்தரத்திலான விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற உதவும். இதை வெறும் பெருமைக்கு நடத்துவதை விட நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டாவது நம் நாடு நடத்த முன் வரலாம். ஒரு வாரம் முன்பு 2020 போட்டிகளை நடத்த டோக்கியோ தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.  நாம் 2024 போட்டிகளுக்காவது தயாராகலாம். யார் இதை பற்றி யோசிப்பது.

எல்லா விளையாட்டு அமைப்புகளிலும் அரசியல்வாதிகளே 20-30 வருடங்களுக்கு மேலாக தலைவராக உள்ளனர். பாட்டியாலா ராஜ குடும்பத்தினர் அரை நூற்றாண்டுக்கு இந்திய ஒலிம்பிக் கமிட்டியின் தலைவராக இருந்துள்ளனர். ஒலிம்பிக் கவுன்சில் சட்டங்களின் படி நாட்டின் ஒலிம்பிக் கவுன்சில் அரசியல் தலையீடில்லாத சுதந்திர அமைப்பாக இருக்க வேண்டும்.

தற்போது இந்தியா ஒலிம்பிக் கமிட்டி ஊழல், அரசியல் தலையீடு மற்றும் IOC ன் சட்டங்களின் படி நடக்காதது போன்ற காரணங்களால் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் நம் விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் நம் தேசியக்கொடி பிடித்து செல்ல முடியாது.  ஜனநாயக நாடு என்று சொல்லிக்கொள்ளும் நமக்கு அரசியல் வியாதிகள் ஏற்படுத்தி உள்ள மிகப்பெரிய இழுக்கு.
ஜெய் ஹிந்த்! 

Aug 23, 2013

தீவிரவாதி

 
"சகோ Timer Clock ரெடியா இருக்கா?" 

"ரெடி சகோ. நான் கன் பவுடர் பேக் பண்றேன்."

"சரி அப்படியே சல்பர் எடுத்துட்டு வந்துருங்க. ஆனா பார்த்து மிக்ஸ் பண்ணுங்க. தப்பானா நம்ம நியூஸ்ல வந்துருவோம்"

"கண்டிப்பா சகோ. நல்லாவே ட்ரைனிங் எடுத்திருக்கோம். தப்பாகாது"

"அதை மிக்ஸ் பண்ணினதும், அந்த கலவையோட பொட்டாசியம் க்ளோரைட் சேர்த்துடுங்க"

"சரிங்க சகோ. நான் பார்த்துக்கறேன் நீங்க போய் டீ குடிச்சுட்டு வந்துருங்க"

"இல்ல சகோ, மதியதுக்குள்ள ஒரு device ஆவது ரெடி பண்ணிடனும். முடிச்சுட்டே போயிடறேன்."

சரியாக மூன்று மணி நேரம் கழித்துவெளியில் வந்தவன் 

அருகிலிருந்த போலீஸ் ஸ்டேஷன் முன்பு நின்று கொண்டு இருவரிடம் பஞ்சாயத்து பேசிக்கொண்டிருந்த கான்ஸ்டபிளிடம் "என்ன சார் வாங்க டீ சாப்ட்டு வரலாம்." என்றான். அவரோ "இல்ல தம்பி போயிட்டு வா. சாயந்திரமா வேணா கடைக்கு போகலாம்" என்றதற்கு சிரித்து விட்டு நடையை கட்டினான்.

திரும்பி வந்தபோது அங்கிருந்தவன் ஒரு deviceஐ வெற்றிகரமாக முடித்து விட்டு அடுத்ததில் கவனம் செலுத்திக்கொண்டிருந்தான். இதேபோல இன்னும் 5 செய்ய வேண்டும், இதை பற்றிய தகவல்களையும் தலைமைக்கு தெரிவித்து விடவேண்டும்.

அடுத்த நாளில் எல்லாவற்றையும் முடித்து விட்டு, கூட இருந்தவனை  பத்திரமாக தலைமை இடத்திற்கு அனுப்ப வேண்டிய ஏற்பாடுகளை செய்தேன். இனி மூன்று இரவுகள்  நிம்மதியாக தூங்கி அந்த கூட்டத்திற்காக காத்திருக்க வேண்டும். இரவு சாப்பாடிற்கு சென்ற போது கான்ஸ்டபில் என்னை எதிர்பார்த்து நிற்பது போல தெரிந்தது. இன்றைக்கு ஏதும் தேறவில்லை என்பது அவர் நிற்கும் தோரணையில் தெரிந்தது.  அவரையும் உடன் அழைத்துச்செல்ல அவர் நிறைய கேள்விகள் கேட்க அவற்றை தவிர்க்கும் விதமாக பேச்சை குடியின் மேல் மாற்ற, காத்திருந்ததுபோல் குடிக்க வேண்டும் என்றார். "சரி நான் குடிக்கலை நீங்க போய் குடிச்சுட்டு வாங்க" என்றதும் காசை வாங்கிக்கொண்டு வேகமாக நடந்தார். மனிதர் திரும்பி வரும் சாத்தியம் குறைவு என்பதால் நான் சாப்பிட்டு முடித்து கிளம்பினேன்.

இது வரையிலான வாழ்க்கையை நினைத்து பார்த்துக்கொண்டே தூக்கத்தை எதிர்பார்த்து இருந்தேன். கனவில் சிறு வயதில் நண்பர்களுடனான விளையாட்டுக்கள், தங்கையுடனான சீண்டல்கள் வந்து சென்றன. கனவுகள் நீண்டு கொண்டே போனதால் விடியலும் நீண்டது. எழுந்தபோது மணி 11. சரி காலை சாப்பாடு செலவு மிச்சம் மதியம் சாப்பிட்டு விட்டு அப்படியே ஒரு எட்டு மாநாட்டு மேடையை பார்க்கலாம் என்று புறப்பட்டான். வெளியில் வந்ததும் வெயில் சுட்டது. சிறிது தூரம் சென்றதும் நம்ம கான்ஸ்டபில் எதிர்பட்டார்.

"என்ன சார் டூட்டிக்கு போகலயா" இது நான்.

"இல்ல தம்பி, நேத்து கொஞ்சம் ஓவரா போச்சு. காலைல எழுந்திருக்கல. இப்பதான் ஐயா கிட்ட லீவ் சொல்லிட்டு வந்தேன். நீங்க எங்க புறப்பட்டுடீங்க" என்றார்

"இல்லைங்க கடை வீதி வரை போகலாமுன்னு" என்ற பதிலுக்கு

"ரெண்டு கழிச்சு கட்சி மாநாடு நடக்கறதால வழி மாத்தி விடறாங்க. இப்பகூட என் குழந்தகள ஸ்கூல்ல விட ஊர சுத்தி வந்தேன். எதுக்கும் ஆட்டோ புடுச்சுக்கங்க " என்று அட்வைஸ் செய்தார்.

சரியென தலையாட்டிவிட்டு நடையை கட்டினேன். போய்விட்டு வந்தால் இனி வெளியே தலை காட்டாமல் இருக்க வேண்டும்.

மாநாட்டின் முந்தைய இரவில் டிவைஸ்களை எடுத்து பேப்பரில் சுற்றி அதனை ஒரு மஞ்சள் பையில் வைத்துவிட்டு, மற்ற உடைமைகளை எடுத்து ஒரு பெரிய பையில் போட்டு அடைத்து பக்கத்தில் இருந்த குளக்கரையில் வீசிவிட்டு வந்து தூங்கினேன்.

அன்றைய தினம் அதிகாலையில் எழுந்து  குளித்து வேஷ்டி சட்டைக்கு மாறினேன். அருகில் இருந்த ஆலயம் சென்று விட்டு வந்து, மற்ற அறைகளை ஒரு சுற்று பார்த்து எந்த தடயமும் இல்லை என்று உறுதியான பிறகு மஞ்சள் பை கையில் எடுத்துக்கொண்டு கதவை பூட்டிவிட்டு கிளம்பினேன்.

நகர எல்லைகள் எல்லாம் இப்போது காவலர்களால் நிரம்பி வழிகிறது. எனவே அலுவலக நேரத்தில் மக்கள் கூட்டத்தோடு கூட்டமாக நகரினுள் சென்று விடவேண்டும். அதற்கு தகுந்த நெரிசலான பேருந்தில் ஏறி போலிசின் பார்வையில் தப்பினேன். இனி மாநாட்டு திடலில் இருக்கும் போலீஸ் மட்டுமே. ஆனால் அவர்களையும்  கட்சிக்காரர்களுடன் சென்று ஏமாற்றி விட்டு மேடையின் அருகில் சென்று அமர்ந்தேன். கூட்டம் ஆரம்பிக்க இன்னும் நேரம் இருக்கிறது. அது வரை காத்திருக்க வேண்டும். தலைமையின் உத்தரவுப்படி நான் இன்றுடன் இறந்து விடவேண்டும். ஆனால் வாழும் ஆசை வற்புறுத்துவதால் இதை மட்டும் முடித்து விட்டு ஏதேனும் தூர கிராமத்திற்க்கு சென்று விடவேண்டும். கண்களை துலாவ விட்டேன் தூரத்தில் அட நம்ம கான்ஸ்டபில், அவரை தவிர்க்க பக்கத்தில் இருந்தவரிடம் பேச்சு கொடுத்துகொண்டு இருந்தேன். கான்ஸ்டபில் என்னை பார்க்கவில்லை, சென்றவர் மேடையின் பின்புறம் மறைந்தார்.

எப்படியும் இன்னும் அரை மணி நேரத்தில் கூட்டம் ஆரம்பித்து விடும். அதற்க்கு ஒரு மணி நேரம் கழித்து பையை வைத்து விட்டு நடையை கட்ட வேண்டியது தான். எப்படியும் ஐம்பது பேராவது சொர்க்கம் செல்வார்கள், அது போதும். இப்படியே ஒரு மணி நேரம் கழிந்திருக்கும். மேடையை பார்த்தேன் தேசிய தலைவர் ஒருவர் நம் நாட்டை பற்றிய பெருமைகளை பேசிக்கொண்டிருந்தார். எனக்கு கோபம் தலைக்கேறியது. எல்லாம் பொய் இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். பைக்குள் கைவிட்டு டைமர் பட்டனை தேடி பிடித்து 5 நிமிடங்கள் வைக்க வேண்டும் என்ற தலைமையின் உத்தரவை 10 நிமிடங்கள் என மாற்றி வைத்து, பையை அப்படியே அருகிலிருந்த மரக்கம்பத்தின் ஓரத்தில் கிடத்தி விட்டு கிளம்பினேன்.

வேகமான நடையில் மாநாட்டின் வாயிலை எட்டிப்பிடிக்க எட்டு நிமிடங்கள் ஆனது. அங்கிருந்த ஒரு பெஞ்சில் அமர்ந்து ஆசுவாசப்படுத்திக்கொண்டேன். நடப்பதை இங்கிருந்து வேடிக்கை பார்த்து விட்டு கிளம்பலாம். வாட்ச்சை பார்த்தேன் இன்னும் ஒரு நிமிடம் இருக்கிறது. அதற்கு பிறகு நான் தீவிர வாதியல்ல, உயிர் பிழைத்த சுதந்திர மனிதன். தூரத்தில் யாரோ வேகமாக என்னை நோக்கி வருவது தெரிந்தது. இது கான்ஸ்டபில் ஆச்சே இவர் எதுக்கு என யோசிக்கும் போதே தூரத்தில் இருந்து சத்தமாக பேசிக்கொண்டே வந்தார் "தம்பி உங்கள மதியம் இருந்து பார்க்கிறேன் பேசலாமுன்னு முடியல. இது உங்க" அப்பொழுது தான் பார்த்தேன் அது மஞ்சள் பை, அவ்வளவு தான் நேரம் முடிந்தது.

அடுத்த நாள் பத்திரிக்கைகளில்
"தீவிரவாதியை பிடிக்க முயன்ற காவலர் தீவிரவாதியுடன் குண்டு வெடிப்பில் பலியானார்:"


Aug 18, 2013

அப்பா


அன்புள்ள அப்பாவுக்கு,

எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும். இந்த கடிதத்தை நீங்கள் படிக்க வாய்ப்பே இல்லை என்று தெரிந்தும் இப்படி தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்கின்றேன். அனுபவங்கள் என்னை மிகவும் பொறுமைக்காரனாக ஆக்கி உள்ளது. இருந்தும் உங்களைப்போல பொறுமையாக இருக்க முடிவதில்லை. 

நீங்கள் எனக்கு கற்றுக்கொடுத்தது என்று எதுவுமில்லை. அறிவுரையும் கூறியதில்லை. நான் உங்களை பார்த்தும் அருகில் இருந்தும் கற்றுக்கொண்டவை ஏராளம். உங்கள் மௌனம் மட்டும் கற்றுக்கொடுத்த பாடங்களை எந்த புத்தகமும் தந்ததில்லை. இருவருக்கும் பேச நிறைய விஷயங்கள் இருந்தும் என்றுமே அதிகம் பேசிக்கொண்டதில்லை. அவ்வாறு பேசாமல் இருந்த தருணங்களை இன்று நினைத்தால் மனது வலிக்கிறது.  

நான் பிறந்த போது தமிழகம் முழுக்க பந்த், அதனால் நீங்கள் சைக்கிளிலேயே 20km வந்து என்னை பார்த்ததாக அம்மா சொல்லி கேட்டிருக்கிறேன். சிறு வயதில் குடும்பமாக எல்லோரும் மேட்டுப்பாளையம் பத்திரகாளியம்மன் கோவிலுக்கும், பண்ணாரி கோவிலுக்கு செல்லும் போதெல்லாம் புளி சாதத்துடன் நீங்கள் கொடுத்த வாழைப்பழ சுவையும், ஒவ்வொரு வருடமும் ஐந்து நாட்கள் குடும்பத்துடன் சுற்றுலா சென்று அனுபவித்த எல்லையில்லா சந்தோசமும்  இன்னமும் மனதில் நிலைத்திருக்கின்றது. 

வீட்டில் யாருக்கும் எதையும் கேட்காமலே செய்பவர் நீங்கள். யாரும் கேட்காமலே என்னுடைய  10வது வயதிலேயே நீங்கள் தொலைக்காட்சி வாங்கி கொடுத்தீர்கள்.  காரணம் யார் வீட்டுக்கும் நான் தொலைக்காட்சி பார்க்க செல்லக்கூடாது என. இப்போதுதான் தெரிய வந்தது அப்போது நீங்கள் பெற்ற சம்பளம் 1000க்கும் குறைவு என்று.  

ஆசைப்பட்ட போதெல்லாம் என்னை சைக்கிளில் வைத்துகொண்டு சுற்றியுள்ளீர்கள். பக்கத்து ஊர் தியேட்டரில் திரைப்படம் பார்க்க முன் பக்க பாரில் வலிக்காமல் இருக்க துண்டை சுருட்டி உட்கார வைத்து கூட்டிப்போனது மறக்கவே முடியாத நினைவுகள். பின்னர் பெரியவனானதும் வசனம் புரியாமல் இருவரும் பார்த்த முதல் ஆங்கில பட அனுபவமான Cliff  Hangerக்கு புளி சாதத்தை கட்டிக்கொண்டு போனது கண்ணில் நிற்கிறது. இன்று அந்த பட வசனம் புரிந்து கொண்டு பார்க்கும் போது அதை உங்களிடம்  சொல்லி சிரிக்க நீங்கள் இல்லை.

நான் பள்ளி சென்ற நாள் முதல் மதிப்பெண் குறைவு என்று என்னை என்றுமே திட்டியதில்லை. அடுத்து என்ன படிக்க போகிறாய் என்று கேட்டதும் இல்லை. எல்லாவற்றையும் என் முடிவுக்கே விட்டவர். கல்லூரியில் இடம் கிடைக்காமல் தனியார் கல்லூரிக்கு நடையாய் நடந்து, கடைசியில் 10,000 பணம் சரி செய்து கட்ட வந்தபோது, நான் நம்பிக்கையுடன் அரசு கல்லூரியில் கிடைக்கும் என்று கூறிய இரு நாட்களில் இடம் கிடைத்து அவர்கள் பணம் கட்ட சொன்னபோது  நீங்கள் 10,000 கொடுக்க அவர்கள் வெறும் 10 ரூபாய் என்று சொல்ல நீங்கள் அடைந்த சந்தோசத்தினை உணர்ந்தேன். 

வேலைக்கு போனதும் சம்பளம் எவ்வளவு என்று கேட்கவில்லை. நானும் உங்களிடம் ஒரு நாளும் கொடுத்ததில்லை. நான் அதை சேமித்து தங்கைக்கு நகை எடுக்க கொடுத்தபோது நீங்கள் அடைந்த பூரிப்பை உணர்ந்தேன். மில்லுக்கு போக கஷ்டம் என்றபோது வேலையே விட்டுவிட்டு tempo வை என் பேரில் வாங்கினீர்கள். அப்போது நீங்கள் வங்கிக்கு கூப்பிடும்போதெல்லாம் நிறைய கோபப்பட்டிருக்கிறேன், அதற்கும் பொறுமையாகவே இருந்தீர்கள். இன்றைக்கு நினைத்தால் என் மீது கோபம் வருகிறது.

நண்பர்கள் எல்லோரும் பைக் வைத்திருக்கிறார்கள் என்று எனக்கு பிடித்த யமஹா பைக் வாங்கின போதும், அதை ஒரு நாள் தள்ளி நிறுத்த ஆசைப்பட்டு வண்டியுடன் விழுந்துவிட்டு நீங்கள் சிரித்த சிரிப்பு இன்றும் மறக்க முடியவில்லை. நான் வெளியூர் சென்ற போதெல்லாம் பைக்கை உங்கள் நண்பரிடம் கொடுத்து சர்வீஸ் செய்து வைத்தீர்கள், இன்றைக்கு பைக்கை துடைக்க கூட யாரும் இல்லை. ஆனால் ஒரு நாள் கூட என்னுடன் வண்டியில் வராமல் எல்லா இடங்களுக்கும் கடைசி வரை சைக்கிளிலேயே வந்தீர்கள். அன்றைக்கு வற்புறுத்தி உங்களை அழைத்து செல்லாதது இன்றும் என் நெஞ்சை வதைக்கிறது.

ஆறு வருடங்களுக்கு முந்தைய ஒரு வெள்ளிக்கிழமை நாளின் இரவில் நான் நண்பர்களுடன் வீட்டினுள் இருந்தேன். நீங்கள் வாசலில் நின்று பார்த்தீர்கள். அதுதான் கடைசி பார்வை என்று தெரியவில்லை. காலையில் எழுந்ததும் சொன்னார்கள் நீங்கள் மாட்டுக்கு புல் அறுக்க சென்ற இடத்தில் மயக்கம் அடைந்து விட்டீர்கள் என்று, அம்மாவும் நானும் எவ்வளவு வேகமாக வந்தும் உங்களை காப்பாற்ற முடியாமல் போனது. அடுத்த சில நாட்களில் தான் தெரிய வந்தது நீங்கள் நெஞ்சு வலிக்காக நம் ஊர் மருத்துவரிடமே காட்டிக்கொண்டிருந்தது. உங்களுக்கு என்றைக்குமே எங்களை கஷ்டப்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணம். அதை உங்கள் மரணத்திலும் நிறைவேற்றி விட்டீர்கள். ஆனால் உங்கள் மரணத்துக்கு பிந்தைய வாழ்க்கைதான் கஷ்டம் நிறைந்தது என்று நீங்கள் ஏன் அப்பா நினைக்கவில்லை. உங்கள் இருப்பு ஒன்றே போதும் எங்களுடைய எல்லா செயல்களும் சரியாக இருந்திருக்குமே.

இன்றைக்கு நீங்கள் இருந்திருந்தால் என்னுடைய வாழ்க்கை வேறு மாதிரி அமைந்திருக்கும். உங்கள் பெயருக்கு எந்த விதத்திலும் இழுக்கு வரக்கூடாது என நினைத்தேன். எனக்கு தெரியும் நீங்கள் இதற்கு கூட கோபப்பட மாட்டீர்கள் என்று.  என்னை எந்த குறையும் இல்லாமல் வளர்த்த உங்களுக்கு , எந்த விதத்திலும் நான் நன்றிக்கடனை திருப்பி செலுத்த முடியாமல் போய்விட்டது மேலும் நான் அதற்கு அருகதை அற்றவன் கூட. நான் இறைவனை கேட்டுக்கொள்கிறேன் அடுத்த பிறப்பிலும் உங்களுக்கே பிள்ளையாக பிறந்து உங்களுக்கு இப்போது கொடுக்க முடியாத சந்தோசத்தை கொடுக்க வேண்டும், ஏனென்றால் உங்கள்  இழப்பில் அதிகம் பாதிக்கப்பட்டது நான்தான். இனியாவது உங்களைப்போல வாழ நினைக்கிறன், ஏனென்றால் எனக்கு உங்களை மிகவும் பிடிக்கும் அப்பா.

இப்படிக்கு,

உங்கள் அன்பு மகன்.

Google+ கருத்துக்களை blogger-ல் தெரிய வைக்க

இன்றைய பிளாக்கர் உலகில் ப்ளாக் எழுதுவதை விட கடினமானது கருத்துக்களை தெரிவிப்பது. நாம் என்னதான் மற்ற பிளாக்கரின் ப்ளாக்களை மாய்ந்து மாய்ந்து படித்து கருத்து தெரிவித்தாலும் நம்முடைய பாத்திரத்திற்கு என்ன கிடைக்கிறது என்பதே மிக முக்கியம். 

இப்பொழுது ப்ளாக்-களை Google+ லும் இணைத்துக்கொள்ளும் வசதி உள்ளதால், அதற்கான கருத்துக்களை அங்கேயே தெரிவிக்கவும் முடிகின்றது. இப்படி ஒரு ப்ளாக்-குக்கான கருத்துக்கள்  இரண்டு இடங்களில் தெரிவிக்க வசதி உள்ளது. 

இப்பொழுது Google+ கருத்துக்களை நம்முடைய பிளாக்கரில் இணைத்துக்கொள்ள வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்கள் வலைப்பதிவில் வாசகர்கள் இப்போது பகிரங்கமாக, அல்லது தனிப்பட்ட முறையில் Google+ இல் தமது வட்டங்களில் கருத்துக்களை தெரிவிக்கலாம். கருத்துக்களை பார்க்கும்போது போது, அவர்கள் வட்டங்களில் உள்ளவர்களின் கருத்துக்களை மட்டுமே காண முடியும். மேலும் இவை top comments என வகைப்படுதப்படுகிறது.  





சூனியம்


"சாமி நட்ட நடு ராத்திரியில எல்லாம் தெருவுக்கு போனா குடுகுடுப்பைகாரன் வருவான், நம்ம அவன பார்க்கக்கூடாது." குழந்தை பருவத்தில் அம்மா அடிக்கடி சொன்ன வார்த்தை. இதனால் ஒண்ணுக்கு போக கூட பயப்பட்டு பாயிலேயே போன நாட்கள் பல.

பள்ளிபருவத்தில் ஊர் நண்பர்களிடம் இதை பற்றி பேசப்பேச குடுகுடுப்பைக்காரன் அபரிமிதமான திறன் கொண்ட மனிதனாக வளர்ந்தான். அதாவது அம்மாவாசை இரவு 12 மணிக்கு சுடுகாட்டில் பிணத்தை வைத்து பூஜை செய்து அதற்கு பின்னர் வரும் ஞாயிறுகளில் ஊரை அம்மணமாக வளம் வருவான் என்றும், ஏதாவது ஒரு வீட்டின் முன் நின்று உடுக்கை அடித்து விட்டு சென்றான் என்றால் காலையில் திரும்பவும் வந்து குறி சொல்வான். இரவில் அவன் எதிரில் சென்றால் ரத்தம் கக்கி சாக நேரும் என ஏராள சக்தி படைத்தவனாக பேச்சின் மூலம் வளர்ந்தான்.

இதன் காரணமாக இரவில் பத்து மணிக்கு அப்புறம் கேட்கும் சத்தம் எல்லாம் குடுகுடுப்பைகாரன் சத்தமாகவே பட்டது. போதாதற்கு அம்மாவிடம்  காலையில் பக்கத்து வீட்டு அக்கா கு.கு காரனின் வருகையை பேசி என்னை பீதிக்குள்ளக்குவாள். 

விளையாட்டின் மூலம் சிறிது காலம் மறந்திருந்த சூனியம் டியூஷன் வடிவில் வந்தது. ஒன்பதாம் வகுப்பில் ஆங்கிலம் மிகவும் கசந்ததால் பக்கத்து ஊருக்கு டியூஷன் சென்றேன். ஏனென்றால் பல நண்பர்கள் அங்கேதான் சென்றனர். ஒரு வாரம் எந்த பிரச்சினையும் இல்லாமல் சென்றது. தினமும் எல்லோரும் ஒன்றாக சைக்கிளில் சென்று திரும்புவது வழக்கம். அன்றைக்கு ஏழரை ஆங்கில வடிவில் வந்தது. டியூஷன் வாத்தியாருக்கு என்னுடைய ஆங்கில புலமை தெரிய வந்ததால் அன்று ஒரு மணி நேரம் அதிகமாக வகுப்பு எடுத்தார். அதனால் நான் மட்டும் 9 மணிக்கு வீட்டுக்கு கிளம்பினேன். தனியாக செல்வதை பற்றி யோசிக்கவே இல்லை, நடுவில் இருக்கும் சுடுகாட்டை நெருங்கும்போதுதான் பயம் உச்சந்தலைக்கு உரைத்தது.  

சிறிது நேரம் நின்று யாராவது வருகிறார்களா என பொறுத்திருந்து பார்த்தால் யாரையும் காணோம். பஸ் மற்றும் பைக்காரர்கள் தான் வேகமாக சென்றனர். சரி கண்ணை திருப்பாமல் வேகமாக சென்று விடலாம் என முடிவெடுத்து சைக்கிளை மிதித்தேன். சுடுகாட்டை நெருங்கும்போது இதயம் வாய் வரை வந்து சென்றது.மனதில் பார்க்க கூடாது என நினைப்பதை தான் ஓரக்கண்ணால் பார்க்க தோன்றும் என்ற விதிப்படி ஓரக்கண்ணால் சுடுகாட்டை பார்த்தல் அங்கே ஒரு பிணத்தை எரித்து கொண்டு இருந்தார்கள்.அவ்வளவுதான் எனக்குள் என்ன ஏற்பட்டது என்று தெரியவில்லை. வேகம் என்றால் வேகம் பேய் வேகத்தில் சைக்கிளை மிதித்தேன். இரண்டே நிமிடத்தில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்தை கடந்து மனித நடமாட்டம் தெரிந்த ஊர் எல்லையில் தான் சைக்கிளை நிறுத்தினேன். தூக்கத்தில் எரிகிற பிணம் என்னை துரத்தியதில், அன்றோடு டியூஷன் அத்தியாம் முடிந்தது.

இளம் வயதில் நண்பர்களுடனான பேச்சில் ஊரில் யாரெல்லாம் சூனியம் வைப்பவர்கள், என்ன என்ன செய்கிறார்கள் என்ற ஆராய்ச்சி வெகு தீவிரமாக நடந்தது. இந்த காலகட்டத்தில் தான் கோட்டயம் புஷ்பநாத் நாவல்கள் அறிமுகம் ஆனது. அதில் வரும் பணிக்கர்கள் மற்றும் தனி பங்களாக்கள்   பற்றி உருவகம் செய்து தூக்கம் இழந்தேன். இரவில் கேட்கும் எல்லா சத்தங்களுக்கும் காரணம் குகு காரனே என்ற எண்ணம் ஏற்பட்டது. மார்கழி மாத அதிகாலை பஜனைகள் கூட அவனுடைய சத்தமே என்றது மனம். 

கல்லூரி காலத்தில் இவற்றை சோதனை செய்து பார்க்கும் அளவுக்கு மன திடம் ஏற்பட்டது. எல்லா நாள் இரவில் சுடுகாட்டுக்கு சென்றாலும் அது யாரும் இல்லாமல் அநாதையாகவே இருந்தது. குகு காரன் சத்தம் கேட்கும்போது எழுந்து வந்து பார்த்தால் அவன் மிக சாதரணமாக என்னை கடந்து போனான். மேலும் ஆராய்ந்ததில் குகு காரர்கள் என்பது குறி சொல்வதை தொழிலாக கொண்டுள்ள சமூகம் என தெரிந்தது. அவர்களை பற்றிய பயம் ஒழிந்து எந்த நேரத்திலும் எங்கும் செல்ல தைரியம் ஏற்பட்டது.

சும்மா இருந்த சூனியத்தை என் சித்தி இழுத்துக்கொண்டு வந்தார்கள், என்னுடைய தாத்தா இறந்த சமயத்தில் என் சித்தி குடும்ப சண்டையில் கோபத்தில் என் அப்பாவுக்கு சாபமிட, அதேபோல அவர் சில வருடம் கழித்து இறந்ததும் அம்மா ஜோசியம் பார்க்க  சித்தப்பா குடும்பம் செய்த சூனியத்தால் தான் இறந்தார் என்றதும் எனக்கு ஜோசியக்காரன் மேல்தான் கோபம் .வந்தது.  அதுவும் சூனியத்தை வீட்டினுள் வைத்து உள்ளனர் என்றதும் சிரிப்புதான் வந்தது. ஜோசியக்காரனுக்கு இது தொழில், அதற்காக அவன் ஏதாவது பொய்யை சொல்லியே ஆக வேண்டும். பிறகு ஏற்பட்ட பொருளாதார உயர்வின் காரணமாக இப்படிப்பட்ட பேச்சுக்கள் மறைந்தன.

காதலித்து வீட்டை எதிர்த்து கல்யாணம் செய்து கொண்ட பிறகு தனிக்குடித்தனம் என்று ஆனது. நன்றாக சென்ற வாழ்க்கையில் சூனியம் மனைவியின் வடிவில் திரும்ப வந்தது. தங்கையின் கணவருக்கு என் அம்மாவுடன் ஏற்பட்ட மனஸ்தாபத்தில் என்னுடைய அம்மாவை பற்றி மிக நல்ல விதமாக என் மனைவியிடம் சொல்ல, அவளும் நல்லவற்றை தவிர கேட்டுக்கொண்டாள். பிறகு ஒவ்வொரு சண்டைக்கும் காரணம் என் அம்மா வைத்த சூனியம் என்று பேச ஆரம்பித்தாள்.  மேலும் மாமியாரும் சேர்ந்து கொண்டு கோவிலில் சாமியாடி சொன்னார், உங்கள் வீட்டுக்குள் உள்ளது என்று. எவனோ ஒரு சாமியடியாம் அவன் சொன்னால் நம்புகிற மக்கள், அவனைப்பற்றி அவன் வீட்டில் அல்லது பக்கத்து வீட்டு மனிதர்களிடம் கேட்டால் தெரியும் என மனதில் நினைத்துக்கொண்டேன். ஆனால் மனம் கோபப்படுகிறது சூனியம் இப்படி வாழ்க்கையை சூறையாடுகிறதே என்று.

இன்று பைத்தியம் பிடிக்கும் நிலைக்கு சென்று சுயமாகவே தன்னிலைக்கு திரும்பிவிட்டேன். இறுதி முடிவு எடுத்துவிட்டேன் நானே சூனியம் கற்று முதலில் எனக்கே வைத்துக்கொள்வது என்று. அதில் நான் பிழைக்காவிட்டால் பேப்பரில் என் மரண செய்தியை தெரிந்துகொள்ளுங்கள். பிழைத்துவிட்டால் அதே பேப்பரில் என்னுடைய கீழ்காணும் விளம்பரத்தை பார்த்து என்னிடம் வாருங்கள்.

 "உங்கள் தொழில் எதிரிகளுக்கு பில்லி சூனியம் வைக்க வேண்டுமா, பிடித்த பெண்ணை வசியம் செய்ய, அரசியலில் எதிரிகளுக்கு குட்டிசாத்தானை ஏவி விட வேண்டுமா அணுகவும் - மோகன் பணிக்கர் "       

Jul 31, 2013

தெலுங்கானா வரலாறும் போராட்டமும்


தெலுங்கானா போராட்டம் என்பது இன்று நேற்றல்ல சுதந்திரம் பெற்ற காலம்  முதல் இருந்து வருகிறது. சுதந்திரம் பெற்ற பொழுது தெலுங்கு பேசும் மக்கள் மொத்தம் 22 மாவட்டங்களில் இருந்தனர். அவற்றில் 9 ஹைதராபாத் நிஜாமிலும், 12 மதராஸ் மாநிலத்திலும் இருந்தன. 

ஹைதராபாத் நிஜாம் ஓட்டம்:

இன்றைய ஆந்திரா என்பது மொழியால் பொதுவானது என்றாலும் மூன்று பிரிவானது, ராயலசீமா எனப்படும் பழைய மதராஸ் மாநிலத்தில் இருந்த தென் மாவட்டங்கள். ஆந்திரா எனப்படும்  கிழக்கு கடற்கரை ஓர மாவட்டங்கள் மற்றும் மத்தியில் இருந்த ஹைதராபாத் அல்லது தெலுங்கனா எனப்படும் பழைய ஹைதராபாத் மாநிலம். 

இதில் ஹைதராபாத் மாநிலம் என்பது சுதந்திரத்திற்கு பின்னரும் தனி நாடாக இருந்தது. அதன் மன்னன் ஒஸ்மான் அலி கான். அதற்கென தனி சட்டம், மொழி (ஆமாம் உருது! இன்றும் இது அதிக மக்களால் பேசப்படுவது), ராணுவம், நாணயம், ரெயில்வே, போஸ்டல் ஸ்டாம்ப் என இருந்தன. 1948 ம் வருடம் செப்டம்பர் 17 அன்று, அப்போதைய உள்துறை அமைச்சர் திரு. வல்லபாய் பட்டேல் அவர்கள் மற்றும் இந்திய ராணுவத்தின் நடவடிக்கையால் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. அந்த அரசர் துருக்கி நாட்டுக்கு தப்பி ஓடினார்.

ஸ்ரீ பொட்டி ஸ்ரீ ராமுலு இறப்பு :

பிரச்சனை இந்த மனிதரின் இறப்பில் இருந்து ஆரம்பம் ஆகிறது. 1952 அக்டோபர் மாதம் ஸ்ரீ பொட்டி ஸ்ரீ ராமுலு, ஆந்திர ராஷ்டிர என்ற மொழிவாரி மாநிலம் கோரி 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்தார். இதற்கு பின்னர் ஏற்பட்ட கலவரம் காரணமாக, அப்போதைய மத்திய அரசு 1953 அக்டோபர் 1 அன்று இந்தியாவின் முதல் மொழிவாரி மாநிலமாக ஆந்திரா பிரதேசை உருவாக்கியது. இதன் தலை நகராக கர்னூல் இருந்தது. ஆனாலும் தெலுங்கானா பகுதி இணையாமல் இருந்தது. பின்னர் மத்திய அரசால் தொடங்கப்பட்ட மாநில மறு சீராய்வு கமிட்டி-ன் பரிந்துரைப்படியும், தெலுங்கானா தலைவர்கள் மற்றும் ஆந்திரா தலைவர்களிடையே ஏற்பட்ட ஒப்பந்தப்படி தெலுங்கானா பகுதி ஆந்திரா மாநிலத்துடன் இணைந்தது.

நீதிபதியின் கருத்து  மற்றும் ஒப்பந்தம்:

அப்போதைய உச்ச நீதிமன்ற நீதிபதி திரு. பாசல் அலி அவர்கள் தெலுங்கானா தனியாக இருக்க வேண்டும். அந்த மக்கள் விரும்பினால் மற்றும் சட்டசபையின் 3ல் 2பங்கு ஆதரவுடன் ஆந்திராவுடன் இணையலாம் எனவும் இணைப்புக்கு ஆதரவாக மற்றும் எதிர்ப்பாக தன்னுடைய கருத்துக்களை கூறினார்:

ஆதரவான கருத்துக்கள்:
1.  ஆந்திர பகுதி, ஹைதராபாத் பகுதியின் வளர்ச்சி மற்றும் உள்கட்டமைப்பை உபயோகப்படுதுவதன் மூலம் அதன் தலை நகர (கர்நூல்) பிரச்சனைக்கு தீர்வு காணலாம்
2. கனிம மற்றும் வேளாண் வளங்களை பரிமாறிக்கொள்வதன் மூலம் சீரான வளர்ச்சி காணலாம்.
எதிர் கருத்துக்கள்:
1. வளர்ச்சியில் சரி சமம் இல்லா பகுதிகளை இணைப்பது கூடாது 
2. ஆந்திரா பற்றாக்குறை நிதியிலும், ஹைதராபாத் மிகுதி நிதியிலும் உள்ளவை. இந்த பகுதிகளை இணைப்பது ஆபத்தானது 
3. தெலுகு ஆட்சி மொழி ஆவதன் மூலம் தெலுங்கானா மக்கள் பாதிப்படைவர். * அங்கு பலகாலமாக உருது ஆட்சி மொழி
4. தெலுங்கானா மலை சார் பகுதி ஆனால் ஆந்திரா சம தள பகுதி, எனவே தண்ணீர் பங்கீடு பிரச்சனை வர வாய்ப்புள்ளது 

இரு பகுதிகளின் தலைவர்கள் ஏற்றுக்கொண்ட ஒப்பந்த சரத்துக்கள் கீழே :

1. ஒரு பகுதியை சார்ந்தவர் முதலமைச்சர் பதவியில் இருந்தால் மற்றொரு பகுதியை சேர்ந்தவர் துணை முதல்வர் ஆக வேண்டும் மற்றும் முக்கிய துறைகளில் ஏதேனும் இரண்டு தெலுங்கானா பகுதிக்கு ஒதுக்கப்படவேண்டும்.(சஞ்சீவ ரெட்டி காலத்தில் துணை முதல்வர் பதவி ஒழிக்கப்பட்டது)
2. மது விலக்கு ஆந்திரா பகுதிக்கு மட்டும். (தெலுங்கானாவில் மது விற்ற பணம் ஆந்திராவின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்பட்டது)
3. நிர்வாக செலவுகள் 2:1 (ஆந்திரா : தெலுங்கானா) என்ற அளவில் பிரிப்பு ( ஆந்திரா தெலுங்கானா பணத்தை உபயோகித்தது)
4. வேலைவாய்ப்பு - மக்கள் தொகை அடிப்படையில்
5. தெலுங்கானா பகுதியில் 12 வருடங்களுக்கு மேல் வசிப்பவருக்கே வேலை  (இது பின்பு 4 வருடம் என ஆனது )
6. ஆந்திரா பகுதி மக்கள் தெலுங்கானா பகுதியில் விவசாய நிலங்களை வாங்க முடியாது 

இந்த ஒப்பந்தத்தின் நிலைமையை தற்போதைய நிலைமையுடன் ஒப்பிட்டு பார்த்து நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

முதல் போராட்டம் :

1969 ம் ஆண்டு தெலுங்கானா பகுதி மாணவர்கள் மொழிப்பிரச்சனை மற்றும் வேலை வாய்ப்பு காரணங்களுக்காக போராட்டம் நடத்தினர். ஒஸ்மானியா பல்கலைக்கழகம் போராட்ட களமாக இருந்தது.  மர்ரி சன்னா ரெட்டி தலைமை தாங்கி நடத்தினார். "ஜெய் தெலுங்கானா" என்று முழங்கிய இவர், இந்திரா காந்தியின் அரசியலில் சிக்கி தன்னுடைய தெலுங்கானா பிரஜா சமிதி கட்சியை காங்கிரசுடன் இணைத்து முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டு போராட்டத்தை கைவிட்டார். ஆனால் இந்த போராட்டத்தில் உயிரழந்த மாணவர்களின் எண்ணிக்கை 350க்கு மேல் இருக்கும். இவருக்கு அடுத்து தெலுங்கானா பகுதியை சேர்ந்த நரசிம்ம ராவ் (சிரிக்காத பிரதமர் தான்) அவர்களும் முதலமைச்சர் ஆக்கப்பட்டு போராட்ட வேகம் தணிக்கப்பட்டது. இது மறுபடியும் அரசியலாக்கப்பட்டது 90 களில் தான்.

சந்திரசேகர ராவ்:
தற்போதைய தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் தலைவரான இவரே அடுத்த போராட்டத்தை ஆரம்பித்து வைத்தவர். ஆனால் இந்த முறை தன்னுடைய சுய லாபத்துக்காக. தெலுங்கு தேசம் கட்சியில் இருந்த இவர், 1999 ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆட்சியில் அமைச்சர் பதவியை எதிர்பார்த்த இவருக்கு துணை சபா நாயகர் பதவி கிடைத்தது. இதனால் ஏமாற்றம் அடைந்தவர் 2001ல் அந்த கட்சியை விட்டு வெளியேறி ஆரம்பித்ததுதான் தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி. தனி மாநில கொள்கைக்கு வித்தியாசமாக காங்கிரஸ் மற்றும் பாஜக ஆதரவு தெரிவிக்க கம்யூனிஸ்ட் மற்றும் தெலுங்கு தேசம் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனாலும் சந்திர சேகர ராவ் தொடக்கி வைத்த உண்ணா விரத போராட்டங்கள், மாணவர்களின் தொடர்ச்சிப்போராட்டங்கள் மற்றும் சில தற்கொலைகளின் காரணமாக தள்ளி போடப்பட்டு வந்த தெலுங்கானா மாநிலம் தற்போது வடிவம் பெற்றுள்ளது. ஆனால் ஆந்திரா பகுதியினர் இதற்கு எதிர்ப்பு  தெரிவித்து கொண்டுதான் இருக்கின்றனர். ஏனென்றால் ஹைதராபாத் நகரமே தெலுங்கானா பகுதியில் தான் உள்ளது. தெலுங்கானாவுக்கும், ஆந்திரா மாநிலத்திற்கும் ஹைதராபாத் பொதுவான தலை நகராக அடுத்த 10 வருடங்க்களுக்கு இருக்கும் என தெரிவித்துள்ளனர். 

காரணங்கள்:
 இந்த பிரிவினைக்கான காரணங்கள் என பார்த்தால் முதலாவது சுதந்திரதிற்கு முன்னும் பின்னும் தெலுங்கானா மக்கள் சுதந்திரமாக இருந்தனர் ஆனால் நில பிரபுக்களிடம் அடிமையாக இருந்தனர். இணைப்பிற்கு பிறகு சுதந்திரம் என்ற பெயரில்  அவர்களின் பிரச்சனை தீர்க்கப்படவில்லை.


இணைப்புக்கு பின்னர் தெலுங்கானா பகுதியில் போதுமான தொழில் கட்டமைப்பு இல்லாதது, போதிய வேலை வாய்ப்பின்மை மற்றும் இரண்டு பகுதிகளுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு என கவனிகாப்படாத பிரச்சனைகள் ஏராளம். ஆனால் இந்த காரணங்களுக்காக மாநிலத்தை பிரிப்பது என்பது எந்த விதத்திலும் தீர்வாகாது. பிரிப்பதனால் மட்டும் தெலுங்கானா பிரச்சனைகள் தீர்ந்து விடாது, ஏனெனில் இது முழுக்க முழுக்க அரசியல்வாதிகளின் சுய நலத்திற்காக ஓட்டு வாங்க மட்டுமே பிரிக்கப்படுகிறது. இதற்கு ஒரே மாற்று சிறந்த நிர்வாகம் மற்றும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி மட்டுமே.    

முடிவு:
அரசின் இந்த பிரிவினை முடிவை தொடர்ந்து பல விவாதங்களுக்கு இட்டுச்செல்லும். மேலும் தனி மாநிலம் கேட்கும் மற்ற பிரிவினைவாதிகளுக்கு, இது முன்னுதாரணமாக மேற்கோள் காட்டப்படும்.

தற்பொழுது பிரிக்க காத்திருக்கும் மாநிலங்கள்:

போடோலாந்து   - அசாம்
bundelkand (தமிழாக்கம் தவறான அர்த்தத்தை கொடுக்கிறது) - உத்தர பிரதேஷ் மற்றும் மத்திய பிரதேஷ்
போஜ்பூர் - உத்தர பிரதேஷ் மற்றும் பீகார்
கூர்க் - கர்நாடகம்
கோர்க்காலாந்து - மேற்கு வங்காளம்
மரத்வாடா மற்றும் விதர்பா - மகாராஷ்டிரம்
மிதிலாஞ்சல்  - பீகார்

நம் நாடு பல கலாச்சார மற்றும் பல மொழி சமூகத்தின் மூலம் பிரபலமானது.  மாநிலங்களை பிரிப்பது என்பது மாநிலம் சார்ந்த வேறுபாட்டை அதிகப்படுத்தும். மேலும் மாநிலம் சார்ந்த அடையாளம் என்பது தேசிய அடையாளத்தை அழித்து விடும்.

போதிய நிதிகளை பின்தங்கிய பகுதிகளுக்கு ஒதுக்கி வளங்களை சமமாக பகிர்ந்து கொள்வதன் மூலம் ஒன்று பட்ட வளர்ச்சியினை நாடு அல்லது மாநிலங்கள் அடையலாம். ஆனால் பிரிவினைக்கு பின்பான இத்தகைய செயல்கள் எந்த விதத்திலும் ஒற்றுமைக்கு உதவாது. 

ஏற்கனவே அண்டை நாடுகள் நம் நாட்டில் பிரிவினை வாதத்தை தூண்டி வருகிறது. மேலும் உலக பொருளாதார மயமாக்களில் மற்ற நாடுகளுடன் போட்டியிட வேண்டிய சூழ்நிலையில், நாம் நாட்டின் உள்ளேயே எல்லைக்கோடுகளை அதிகப்படுத்தி கொண்டிருந்தால், இந்த பிரிவினைகள் நம்மை பின்னோக்கி கொண்டு செல்லும்.  நாட்டின் வளர்ச்சி என்பது ஒன்று பட்ட மக்களால் மட்டுமே முடியம்.

Jul 30, 2013

சாப்பாடு



கடந்த ஒரு மாத காலமாக சாப்பாட்டு பிரச்சனை சாதாரண மக்களை விட மத்திய, மாநில அரசுகளையும், அமைச்சர்களையும் விடாமல் துரத்துகின்றது. இது எதோ அவர்களுக்கு சோறு கிடைக்காத பிரச்சனை என நினைக்க வேண்டாம். கொழுத்து கிடக்கும் பன்றிகள் போல அவர்கள் சேற்றில் படுத்துக்கொண்டு பேசும் பேச்சுக்கள் தான் பிரச்சனை. 

முதலாவது உணவு பாதுகாப்பு சட்டம், இதை மிக துரிதமாக செயல்பாட்டுக்கு கொண்டுவர பார்க்கிறது மத்திய அரசு. இது ஒன்றும் புதிய திட்டம் அல்ல, ஏற்கனவே தமிழகம் மற்றும் சில மாநிலங்களில் நடைமுறையில் உள்ளதை நாடு முழுக்க உள்ள மக்களுக்கான பொதுவான திட்டமாக கொண்டு வர போகிறார்கள். இதன் மூலம் 5kg அரிசி ரூ.3, 5kg கோதுமை ரூ.2 மற்றும் 5kg இதர தானியங்கள் ரூ.1 க்கும் மக்களுக்கு விநியோகிக்க போகிறார்களாம். இதற்காக விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை மற்றும் உரம், போக்குவரத்து மற்றும் சேமிப்புக்கு என வருடத்திற்கு ரூ.1,25,000 கோடி செலவு செய்யப்போகிறது அரசு. 

இதில் உள்ள நிறைகளை விட குறைகள் அதிகம். அதாவது, நாம் கோதுமை உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துள்ளோம் ஆனால் இவற்றை சேமித்து வைக்க போதிய அளவு கிடங்குகள் இந்தியா உணவு கழகத்திடம்(FCI) இல்லை. அதே போல 45.5 மில்லியன் டன் தானியங்கள்(அரிசி, கோதுமை) கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.  இது சரசாரி இருப்பின் அளவை விட மூன்று மடங்கு அதிகம். அவற்றை சேமிக்க வருடத்திற்கு ரூ.15,000 கோடி செலவு செய்யப்படுகிறது. மேலும் போக்குவரத்தின் போது சுமார் ரூ.500 கோடி மதிப்புள்ள தானியங்கள் விரயமாக்கப்படுகின்றன. ஆனால் FCI ஊழியர்களின் சம்பளம் வருடத்திற்கு ரூ.850 கோடி. இந்த முரண்பாடு எல்லா அரசு துறைகளுக்கும் பொதுவான ஒன்று. உள்-கட்டமைப்பை சரி செய்து விவசாயிகளுக்கான குறைந்தபட்ச விலையை அதிகப்படுதினாலே போதும், அதை விடுத்து இவ்வளவு பணம் வருடா வருடம் செலவிட்டால் மற்ற திட்டங்களுக்கான ஒதுக்கீடு குறையும், வரவு-செலவு திட்டத்தில்  பற்றாக்குறையை மேலும் அதிகப்படுத்தும்.

அரசு  முதலில் சேமிப்பு கிடங்குகளையும், போக்குவரத்தையும் ஒழுங்கு படுத்தி, சேமிப்பில் தேவைக்கு அதிகமாக உள்ளவற்றை பொது விநியோகத்தின் கீழ் கொண்டுவரலாம். ஆனால் இவர்கள் காட்டும் முனைப்பு இந்த திட்டத்தின் ஆதாயத்தை கருத்தில் கொண்டே. அதாவது JnNURM மற்றும் MGNREG திட்டங்கள் எப்படி செயல்படுகிறது என கண் கூடாக பார்க்கலாம். எங்கள் ஊரில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் குறைவான கூலி கொடுத்து நீரே வராத பள்ளத்தை தோண்டிய கதைகள் நடந்தன. இதைப்பற்றி தனி பதிவே போடலாம். ஆனால் அடுத்த பிரதமர் ராகுல் அவர்கள் சுதந்திர இந்தியாவின் மிக சிறந்த திட்டம் இது என, அவருடைய பரம்பரையை கேவலப்படுத்துகிறார்.

இரண்டாவது பீகாரில் சத்துணவு சாப்பிட்ட 23 குழைந்தைகள் இறந்துள்ளனர். பீகாரின் மஷ்ரக் என்ற ஊரில் உள்ள பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 89 குழைந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை தொடர்ந்து 23 குழைந்தைகள் இறந்துள்ளனர். இதற்கு காரணம் உணவில் கலந்திருந்த நச்சுப் பொருளே (வேளாண் பூச்சி கொல்லி) ஆகும். இந்த ஆரம்ப பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் முன்பே குழைந்தைகள் உணவு சரியில்லை என .தெரிவித்து உள்ளனர். இந்த பள்ளியில் போதிய இட வசதி இல்லாத காரணத்தால் தலைமை ஆசிரியையின் வீட்டில் உணவு பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும் அவர் கணவரின் கடையில் இருந்து தான் உணவு எண்ணெய் வாங்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் வாந்தி மற்றும் மயக்கம் அடைந்துள்ளனர். ஆனால் பள்ளி ஆட்கள் இதை மறைக்கும் பொருட்டு குழைந்தைகளை வீட்டுக்கு அனுப்பி உள்ளனர். மீதம் இருந்தவர்கள் அருகில் இருந்த சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.எப்படியோ ஒரு ஆசிரியரின் அலட்சியம் மற்றும் பணத்தாசையினால் அப்பாவி உயிர்கள் பலியாகி உள்ளன. 

பீகாரின் மனித வள அமைச்சர் "73000 பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை அமல் படுத்துவது என்பது மிக கடினமான காரியம், இதில் ஈடுபட்டுள்ளோர் ஊழல் செய்வதை நோக்கமாக கொண்டு, உணவின் தரம் மற்றும் அளவில் அக்கறை காட்டுவதில்லை. மேலும் 73000 பள்ளிகளில் குழந்தைகள் உண்பதற்கு முன்பு சோதனை செய்வது நடைமுறை சாத்தியமற்றது" என கூறியுள்ளார்.  மேலும் இது மத்திய அரசின் திட்டம் மாநில அரசு எந்த விதத்திலும் பொறுப்பாகாது என தெரிவித்துள்ளார். 

இப்பொழுது தலைமை ஆசிரியை மற்றும் அவரது கணவரின் மீது மட்டும் வழக்கு பதியப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கை உணர்த்துவது வழக்கம் போல அரசோ, அமைச்சர்களோ அல்லது அதிகாரிகளோ இதற்கு பொறுப்பல்ல. குழந்தைகளுக்கு நஷ்ட ஈடாக ரூ.2,00,000 வழங்கப்பட்டு, அவர்களின் ஆத்மாவை சாந்தப்படுத்தி உள்ளனர். 

ஆசிரியை மற்றும் அவரது கணவருக்கு தண்டனையாக "அஞ்சாதே" வில்லனுக்கு இறுதியில் கொடுக்கப்படும் தண்டனையை தரலாம்.

மூன்றாவது மத்திய திட்டக்குழு நகரத்தில் ரூ.32 மற்றும் கிராமத்தில் ரூ.27 செலவு செய்ய முடிந்தால் அவர் வறுமை கோட்டுக்கு மேல் உள்ளவர் என் கூறியுள்ளனர். வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்களின் எண்ணிக்கை இப்பொழுது 15% குறைந்துள்ளது, அதாவது கடந்த 7 வருடங்களில் 37% இருந்த எண்ணிக்கை 22% ஆக குறைந்துள்ளது.  

அரசு இதற்கென ஒரு கமிட்டியை நியமித்து வறுமை கோட்டுக்கான கோட்டை வரைந்துள்ளனர். அதாவது ஒரு மனிதன் நகரத்தில் உயிர் வாழ ரூ.32 மட்டும் போதுமானது, அதுவே கிராமம் என்றால் ரூ.27 மட்டும் போதுமாம். இதை சொல்ல எதற்கு கமிட்டி, திட்டக்குழு மற்றும் அதிகாரிகள். பொது மக்களிடம் கேட்டுப்பார்த்தால் சொல்லிவிட போகிறார்கள். 

திரு. மண்டேக் சிங்க் அலுவாலியாவிடம் அவர் உபயோகிக்கும் பேனாவின் விலை என்ன என கேட்டு தெரிந்து கொண்டு பின்பு இந்த மாதிரியான அறிவிப்புகளை வெளியிடட்டும். இந்த அறிக்கையை தயாரிக்க ஆன செலவே கோடிகளில் வரும். இதை போன்ற அறிக்கை, ஆராய்சிகளை விட்டு விட்டு மக்களுக்கு உருப்படியான காரியங்களில் ஈடுபடலாம். இப்பொழுதே இப்படி என்றால் இன்னும் அந்த கோமாளி பிரதமரானால், நாமெல்லாம் அகதிகளாக போக வேண்டியதுதான்.

அலுவாலியா மற்றும் அவரது அல்லக்கைகளுக்கு 37 இல்லை 50 ரூபாய் கொடுத்து ஒரு முழு நாளை டெல்லி அல்லது மும்பையில் கழிக்க சொல்லவேண்டும். அப்பொழுது தான் தெரியும் சாப்பிடாததால் அடுத்த நாள் காலை கழிப்பறைக்கு சென்றால் ஆய் கூட வராது என்று.

நான்காவது மூன்று மத்திய அமைச்சர்கள் தங்களால் ரூ.12 க்கு ஒரு வேளை உணவு சாப்பிட முடியும் என தெரிவித்துள்ளனர். முதலில் திரு. ராஜ் பப்பர் அவர்கள் "உணவு பொருட்கள் விலை குறைந்துள்ள காரணத்தினால், மும்பை நகரத்தில் மதிய உணவுக்கு ரூ.12 மட்டுமே போதுமானது, அதுவும் காய் கறிகளுடன் ஒருவர் முழு சாப்பாடு சாப்பிடலாம்." என கூறினார். இவர் காங்கிரஸின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அந்த நன்றி விசுவாசத்தை காட்ட தன் தலைமைக்கு வாலை இப்படி ஆட்டி தெரியப்படுத்தி உள்ளார். 

இவரின் பேச்சை கேட்டு கோபப்பட்ட இன்னொரு காங்கிரஸ் தலைவரான ரஷித் மசூத் "எனக்கு மும்பையை பற்றி தெரியாது, ஆனால் டெல்லியில் வெறும் 5 ரூபாய்க்கு ஒருவர் ஒரு வேளை உணவு சாப்பிடலாம்" என கூறி தன் வாலை அவரை விட வேகமாக ஆட்டி தன் விசுவாசத்தை காட்டியுள்ளார்.

அஸ்ஸாமின் வேளாண் மற்றும் உணவு விநியோக அமைச்சர் "ஒருவர் 2.50 ரூபாய்க்கு ஒரு வேளை உணவு சாப்பிடலாம். 8 பேருக்கு ஒரு வேளை உணவுக்கு 20 ரூபாய் போதுமானது" என கனைத்துள்ளார். மேலும் இதை நிரூபிக்கவும் தயார் என கூறியுள்ளார்.

இந்த நிகழ்வுகளால் மனம் நொந்த UPA கூட்டணி கட்சியான தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும் அமைச்சருமான பாரூக் அப்துல்லா இதென்ன பிரமாதம் "ஒருவன் ஒரு ரூபாய்க்கே சாப்பிட முடியும்" என தன் இருப்பை  ஒரு காலை தூக்கி காண்பிதுள்ளார்.

இந்த பன்றிகளுக்கு மக்கள் எல்லோரும் மடையர்கள், நாட்டில் பாலும் தேனும் ஓடுகிறது என்றால் நம்பிகொள்வார்கள் என்ற நினைப்பு. இப்பொழுது பேசி விட்டு மன்னிப்பு கேட்டுள்ளனர்.

 இவ்வளவு பேசும் இந்த பன்றிகளின் பட்டியில் மதிய உணவிற்கான விலை பட்டியல் கீழே:

Veg Thali.            - Rs 18 (4 chapati, rice, dal, dahi, veg, salad, papad)
Chicken Biryani. - Rs 51 per plate
Chicken Masala.  - Rs 37 per plate
Paneer Masala     - Rs 20 per plate
Roti.                    - Re 1 each
Rice                    - Rs 6 per plate
Vegetables          - Rs 6 per plate
Dal                     - Rs 2 per  plate

இவர்களுக்கு தங்கள் கட்சியிடம் விசுவாசத்தை காட்ட வேண்டும் என்றால் அவர்களின் தலைமையின் முன்பு மண்டியிட்டு நிரூபிக்கலாம்.